...

6 views

நோஞ்சான் மாடல்லவே...
அப்பா சொல்லுவார்...

இரட்டை மாட்டு வண்டியில்
நல்ல மாட்டுக்கு
மட்டுமே
நாலு அடி சேர்த்துக் கிடைக்கும்..

நோஞ்சான் மாட்டை
அடிக்க மாட்டான்
அடித்தால்...
மேற்கொண்டு நடக்காமல்
அங்கேயே
படுத்துக் கொள்ளும்...

அதனாலேயே..
நோஞ்சானுக்குக் கிடைக்க வேண்டிய
அடியும்
நல்ல மாட்டுக்கே கிடைக்கும்

இதற்கு நீதியும் இல்லை
நியாயமும் இல்லை
என்ன செய்ய....?

இப்படித்தான்
சில நேரங்களில் நாம் செய்யும் செயல்களில்
அடி வாங்குகிறோம்

அவனன்றி ஓரணுவும் அசையாது என்பது சத்திய வாக்கெனில்...
இதுவும்...
பகவானின் லீலை என்பதில் சந்தேகமில்லை

ஆயிரம் ஆச்சரியங்களை தன்னகத்தே வைத்திருக்கும் இயற்கை...
எப்போது வேண்டுமானாலும் நம் நிலையை மாற்றலாம்...

பாலுக்குள் மறைந்திருக்கும் நெய் போல
மகிழ்ச்சியும் சில நேரங்களில் ஒளிந்து தான் இருக்கும்

பசுவின் உடலில் இருக்கும் வரை பாலுக்கு எந்த வலியும் இல்லை

கறந்த பாலை
பாத்திரத்தில் இட்டு
சூடு படுத்த...
சூடு தாங்காமல் பொங்கி
வேதனைப் பட்டது

பாலை இறக்கி ஆற வைக்க
சற்றே இளைப்பாறியது

கொஞ்ச நேரத்தில்
அதில்
வேறு ஒரு திரவத்தை ஊற்ற சில மணி நேரங்களில் அது தயிரானது

உருமாறிய பாலுக்கு ஒன்றும் புரியவில்லை

அதில் மேலும் தண்ணீரை ஊற்றி
கடையக் கடைய
மேலே தோன்றிய ஒரு திடப் பொருளாய் வெண்ணெய் என்று சொல்ல அதற்கு மேலும் குழப்பமானது

கொஞ்ச நேரத்தில் மீண்டும் வெண்ணெய் அடுப்பில் வைத்து
உருக்கப்பட்டது

பால் மீண்டும் தன் நிலையை எண்ணி வருந்தியது

தன் உருவம் மாற்றம் ஆன நிலையில் மீண்டும் கீழே இறக்கி ஆற வைத்து...
இப்போது பெயரை மாற்றி
நெய் என்று பெயரிடப்பட்டு
முன்பிருந்த விலையை விட பன்மடங்கு அதிகமாக விலை சொல்லப்பட்டது

நாமும் அப்படித்தான்...
உயர்ந்த நிலையை அடைவதற்கு நிறைய காயப்பட வேண்டும்

கல்கண்டு போன்ற சொல் கொண்டு இவ்வுலகம் பேசாது

சொல் எனும் கல் கொண்டு பேசும்...

நம் வாழ்க்கை அறம் தழுவியதெனில்..
அடுத்தவரின் ஏச்சையும் பேச்சையும்
புறந்தள்ளி விட வேண்டும்...

மொட்டை மரத்துக்கு
சேதமில்லை..

காய்த்த மரத்துக்கே கல்லடி...

மீண்டும் ச(சி)ந்திப்போம்...
© வேல்முருகன் கவிதைகள்