...

5 views

ஒரு துளி கடல்...
அந்த முதுமகனின் மாரில் தனது இடது பூட்ஷ் கால்களால் எட்டி உதைத்தான் ஏட்டு அன்பேந்தல்...

அன்று காலை பெய்த பெருமழையில் சாலைக் குழியெல்லாம் பொங்கி வழிந்திருந்த சாக்கடைநீருக்கு சற்று அருகே விழுந்தார் அந்த முதுமகன்...

அருகில் நின்றிருந்த மக்கள் அந்த நிகழ்வை அதிர்ச்சியோடு வாய்பொத்தி வேடிக்கை பார்த்தனர்...

மிதி இதயத்தின் மேலே சற்று அழுத்தமாகவே விழுந்திருந்தது..
சில வினாடிகள் அவரால் மூச்சு விட முடியவில்லை.

ம்ம்ம்ஸ்ஸ்ஸ்... ம்ம்ம்ஸ்ஸ்ஸ்... என திணறிய படி எழ முனைந்தார். அவனது விழிகள் விரிந்து கண்ணீர் காதருகே வழிந்தது.

ஏன்டா மண்டகசாயம், உனக்கு என்னா மப்பு இருந்தா நான் மாமூல் வாங்கறப்ப வந்து பிச்சை கேப்ப... என்ன என்ன ஏட்டு ஏகாம்பரம்னு நெனச்சியா... கொன்னுபுடுவேங் கொன்னு... ஓட்றா...தா***ளி... என வசை பாடினான்...

எழ முயன்ற அந்த முதுமகன் தனது நெஞ்சைக் கைகளால் கவ்விப் பிடித்தபடி இருமினார். மூச்சு சற்று வாங்க முடிந்தது. ஆனாலும் மிதியின் தாக்கத்தில்   நுரையீரல் ஆட்டம் கண்டிருந்தது. சிறிது கண்ணைக் கட்டுவதுபோல இருக்க அருகே கிடந்த சாக்கடை நீரை அவசர அவசரமா எடுத்து முகத்தில் தெளித்துக் கொண்டார்...

நான் என்ன தப்பு செஞ்சேன்.
எதுக்காக இந்த மனுசன் என்ன மிருகத்தை அடிப்பது போல அடிக்கிறான்.
அவனுக்கு நான் எந்த தீங்கும் செய்யலயே.. என எண்ணியவாறு கைகளை ஊண்றி தடுமாறி எழுந்து நின்றார்...

அவனது கண்கள் அரைமயக்கத்தில் இருந்தது. மூச்சு சற்று அதிகமாக வாங்கியது. முகம் சற்று வீக்கத்தோடு சோர்ந்திருந்தது. அந்த முதுமகனின் கண்கள் ஏட்டு அன்பேந்தலை பார்த்தது...
உடல் சற்று நடுங்கிக் கொண்டிருந்தது...
ஆனால் உள்ளத்தில் அவர் நடுக்கத்திற்கு அனுமதிக்கவில்லை...

ஏட்டு டீக்கடைக்காரனிடம் மாமூல் வாங்கிவிட்டு கோபம் பூசிய முகத்தோடு திரும்பினான்...

அந்த முதுமகன் எழுந்து நின்று அவனை பார்ப்பதைக் கண்டதும், மூக்கை விடைத்து புருவத்தை சுருக்கியவாறு என்னாடா... மிதி பத்தலயா... என்ன முறைக்கிற எனக் கேட்டான்...

அந்த முதுமகன் ஏட்டைப் பார்த்தபடி மூச்சு வாங்கிக் கொண்டிருந்தார்...பதிலேதும் பேசவில்லை... முகத்திலிருந்து சாக்கடை நீர் வடிந்து கொண்டிருந்தது...

அவர்களுக்கு இடையே சில நொடி மௌனம் நிலவியது...

சுற்றிலும் பாதசாரிகள்,சைக்கிளில் சென்றவர்கள், தெருவியாபாரிகள் என எல்லோரும் அவர்கள் இருவரையும் வெரித்துப் பார்த்தபடி இருந்தனர்...

ஏட்டு அன்பேந்தல்... முதுமகனை நோக்கி... கேட்டுக்கிட்டே இருக்கேன் ஒப்பனோழி... ன்னு கோவமாக திட்டிக்கொண்டே அவரை நெருங்க முனையும்போது கொஞ்சம் கரகரத்த ஆனால் தீர்க்கமான குரலில் குறுக்கிட்டு கேட்டார் அந்த முதுமகன்...

என்ன எதுக்காக அடிச்சீங்க...

அந்த பதிலைக் கேட்டதும் சட்டென நின்றான் ஏட்டு அன்பேந்தல்...

அவரது கேள்வி சரியானதாக இருந்தது...
ஆனால் அவனிடம் அதற்கான பதில் இல்லை...

ஒரு சாமானியன் அதிகாரத்தில் இருப்பவர்களை கேள்விகேட்டால்... அவர்கள் கோவத்தையே பதிலாகத் தருவது வழக்கம்தானே...

ஏட்டு அன்பேந்தலும் இந்தச் சமூகத்தில் ஒரு சாமானியனாக அத்தகைய அவமரியாதைகளையும் அவமானங்களையும் அனுபவித்து வந்தவன் தானே...

தன்னை இந்தச் சமூகம் எப்படி நடத்தியதோ...அப்படியே இந்தச் சமூகத்தில் நானும் நடந்து கொள்கிறேன் இதில் தவறென்று என்ன இருக்கிறது என்ற எண்ணம் அவனுக்குள் ஊறிப்போய் பல ஆண்டுகள் ஆயிற்று...

அவனது கோவம் கூடியது...
கண்கள் சிவந்தது...
ஒருவினாடி தாமதித்து... ஓ*** கேள்வியா கேட்கிற என்றவாரு அவரை நோக்கி தாக்க முனைந்த போது...

நிறுத்துயா.... என்ற குரல் கேட்டது...

தன்னை அதட்ட யாருக்கு தைரியம் உண்டு இங்கே... ஒருவேளை யாராவது உயர் அதிகாரியா இருக்குமோ...? என்ற எண்ணம் வினாடியில் அவன் மனதில் உதிக்கும் போதே அவனது பின்மண்டையிலிருந்து, கசிந்துகொண்டிருக்கும் எரிவாயு சுவிட்ச் போட்டதும் மின்பொறியால் குபீரென தீப் பிடிப்பதைப் போல உடலெங்கும் பயம் பரவியது...

அதிர்ச்சியோடு திரும்பிப் பார்த்தான்...

டீக்கடையின் உள்ளிருந்து வெளிவந்து கொண்டிருந்தான் ஓமக்குச்சி மாடசாமி...

யார்... தன்னைப் பார்த்தும் தினம் ஊழைக் கும்பிடு போடும் மாடசாமியா...??

ஒருபுறம் ஆச்சரியம் மறுபுறம் கோவம்...

சில வினாடிகள் ஸ்தம்பித்தன...

கடையிலிந்து வெளிவந்த மாடசாமி தனது  மடிக்காத கைலியை தொடையில் பிடித்து இழுத்து இடுப்பில் சொருகி தனது குச்சி மீசையை முறுக்கிபடி நெஞ்சை நிமிர்த்தி நின்றவாறு...

அவரு என்னயா தப்பு செஞ்சாறு... ஏன் அடிக்கற என நியாயம் கேட்டான்...

அவனைக் கண்டதும் ஏட்டு அன்பேந்தல், என்னடா ஓ*** குளிர்விட்டு போச்சா உனக்கு என்று கோவமாக மிரட்டல் விடுத்தான்...

மாடசாமி... ஹா... மொதல்ல பதிலச் சொல்லும்... அந்த ஆள எதுக்கு மிதிச்ச என ஆவேசத்தோட கேட்டான்...

கோவம் கொப்பளிக்க உச்சந்தலையில் நரம்புகள் வெடித்தது...
வெறி பிடித்த ஓநாய் போல ஏட்டு அன்பேந்தல்... மாடசாமியை தாக்க முற்பட்டான்... அப்போது இன்னோர் குரல் இடை மறித்தது...

யோவ் ஏட்டு நில்லு நில்லுயா...
என்னயா பிரச்சன... என்றவாறு அவனை மறித்தார் பலசரக்கு கடை சீனி அண்ணாச்சி...

சீனி அண்ணாச்சிக்கும் ஏட்டு அன்பேந்தலிற்கும் ஓரளவு நல்ல அறிமுகம் இருந்தது...

எப்போதும் அண்ணாச்சினு சொல்லும் ஏட்டு இப்போது யோவ் ஒதுங்கி போ... இதுல நீ தலையிடாத என ஒருமையில் பேசியபடி அருகே வந்த அண்ணாச்சியையும் தள்ளிவிட்டான்... ஆணவம் அவனை முழுமையாக தின்றிருந்தது...

அவனைச் சாந்தப்படுத்தவோ என்னவோ மழை மெல்லியதாய் தூரல் போடத் துவங்கியது...

அண்ணாச்சி நிலைதடுமாறி சற்று பின்னோக்கிப்போய் நடைமேடையில் ஆ... என்றவாறு சட்டென விழுந்தார்...
அவரின் புட்டத்தில் அடிவிழ இடுப்பு எலும்புகளில் வலி அதிர்ந்து படர்ந்தது...

இதைக்கண்டதும் அண்ணாச்சிக் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மணியனும், அம்பிகா என்ற திருநங்கையும்... ஐய்யயோ அண்ணாச்சிய அடிச்சுட்டானே... எனக் கதறியவாறு அவரைப் போய் தூக்கினர்...

பின்.. எங்க அண்ணாச்சியவா அடிச்ச உன்ன பொளந்துர்றேன் இன்னிக்கி... என்றவாறு எழுந்து ஓட முயன்ற அந்த ஆறடி மாமிச மலையை தடுத்து நிறுத்தினார் அண்ணாச்சி...

அண்ணாச்சி... அந்த பொட்ட பய கொரவலைய கடிச்சு துப்பிடுதேன் என்றவாறு வழியும் கண்ணீரோடும் ஆக்ரோசத்தோடும் எழுந்த அம்பிகாவையும் அடக்கினார் அண்ணாச்சி...

அவர்கள் இருவரின் எழுச்சியையும் பார்த்த ஏட்டு அன்பேந்தலுக்கு குலை நடுங்கியது...

ஏவே... சும்மாஇருவே... அந்தாளுதான் பாவம் கோவத்துல என்ன செய்யுதோம்னு தெரியாம செய்தாரு... நீங்க பாட்டுக்கு ஒன்னுகெடக்க ஒன்னு செஞ்சுட்டு இருக்காதேக... நான் பாத்துக்கறேன் என்றார்...

உடனே அம்பிகா... இல்ல அண்ணாச்சி உங்கள அடிச்சுட்டு அவன் உசிரோட போவக்கூடாது... என நரநரவென் பற்களை கடித்து ஆத்திரத்தோடு அவளது அருகே உடைந்து கிடந்த பிளாட்பார காங்ரீட் கல்லை எடுத்து வேகமாக ஏட்டை நோக்கி எரிந்தாள்...

அதிர்ஷ்டவசமாக ஏட்டு விழக... அது ரோட்டில் கிடந்த சாக்கடையில் பட்டு அங்கு ஊமையாய் நின்ற எல்லோர் மீதும் தெளித்து குளிப்பாட்டியது...

இதைக் கண்டதும் ஏவே... கிருக்குகூவ... சொல்லுதேம்ல... சும்மா இருவே... ஏலே மணியா...இவள உள்ள கூட்டிப்போல என்றவாறு எழ முயல...

அண்ணாச்சி பாத்து... பாத்து சாமி... என்றவாறு அழுது வடியும் உஷ்னக் கண்ணீரோடு அம்பிகாவும்... அண்ணாச்சியின் சொல்லிற்கு கட்டுப்பட்டு கண்நரம்புகள் புடைத்துச் சிவக்க, ஆத்திரத்தை அடக்கி, தனது பற்கள் உடையும்படி இறுகியத் தாடையுடன் கொலைவெறிப் பார்வையை  ஏட்டை நோக்கி வீசியவாறு மணியனும் அண்ணாச்சிக்கு எழ உதவினர்...

என்ன...ஏட்டு இப்படி பண்ணிடேகளே...
எதுவா இருந்தாலும் பேசித் தீத்துக்கலாமே... ஏ இப்படி கோவப்படுதீக என்றார் சீனி அண்ணாச்சி...

எதைப் பேச... நியாயம் தன்பக்கம் இல்லாத போது வாதாட நா எப்படி எழும்...
பேச்சு வார்த்தை நடத்தினால், தான் தோற்பது உறுதி என்று தெரிந்த அரசியல்வாதிகள் செய்யும் கலகங்களை எத்தனைமுறை கண்டிருப்பான்...

பொய்வழக்கில் கைதான அப்பாவிகள்
தன்பக்கத்து நியாயத்தை சொல்ல முனையும்போது உடைபடும் எலும்புகளின் சத்தத்தை எத்தனை முறை கேட்டு இரசித்திருப்பான்...

தன் தவறை ஏற்கவும் முடியாதே... மானம் மரியாதை என்ன ஆவது... அதெப்படி பேச்சு வார்த்தைக்கு இடம் கொடுக்க முடியும்...

ஏட்டு மீண்டும் கோவத்தில் உம்ம வேள மயித்தப் பாத்துட்டுப் போவும்... எல்லாம் இந்த கிழவனால வந்தது என்றவாறு மீண்டும் அந்த முதுமகனை அடிக்கப் போகும்போது...

ஏஏஏஏஏய்.... என்றக் குரல்... இல்லை இல்லை குறல்கள் கூட்டமாக கோரசாக கேட்டது... அந்தச் சப்தம், விழும் மழைத்துளிகளுக்குள் அதிர்வுகளை ஏற்படுத்தியது...

மழை சற்று கணத்துப் பெய்யத் தொடங்கியது...

அப்போது.. திடீரென ஏட்டின் முழங்கை எலும்பைத் தாக்கியது எங்கிருந்தோ வீசப்பட்ட ஒரு எடைக்கல்...

முழங்கை எலும்பில் பட்டதும் நரம்புகளில் சுரீர் என மின்சாரம் பாய சதை பிய்ந்து இரத்தம் கொப்பளிக்கத் தொடங்கியது...
வலி உயிரை அறுத்தது...

ஆ....என்றவாறு ஏட்டு அன்பேந்தல் சற்று நிலைகுலைந்து தடுமாறியபடி கல் வந்த திசையை நோக்கிக்கொண்டே அந்த முதுமகனின் அருகில் கிடந்த சாக்கடையில் விழுந்தான்...

அங்கே சாமானியக் கூட்டம்...
கண்களில் சிவப்பேறி சற்று ஆக்ரோசத்தோடு நின்றிருந்தது...

மழைத்துளிகள் அவர்களின் மீது படிந்திருந்த சாக்கடையை கழுவிக் கொண்டிருந்தது...

அவர்களின் கண்களை ஒருநொடிப் பார்த்ததும் அச்சம் மீண்டும் அவனை அப்பிக் கொண்டது...

ஏட்டு அடிபட்டு கீழே விழுவதைக் கண்டதும் அந்த முதுமகன் பதற்றத்தோடு வேணாய்யா... அடிக்காதீங்க... அடிக்காதீங்க... என்று கத்திக் கொண்டே
முதுமையின் தள்ளாட்டத்தோடு கீழே கிடந்த ஏட்டை நெருங்கி அவனின் கைகளில் கொப்பளிக்கும் இரத்தத்தை அழுத்திப்பிடித்தபடி அய்யோ இரத்தமா வருதே... வலிக்குமே புள்ளைக்கி... என்றவாறு உள்ளம் பதைபதைக்க ஒரு தகப்பன் மகனை ஏந்துவதுபோல... ஏட்டு அன்பேந்தலை அன்போடு தனது கரங்களில் ஏந்திக் கொண்டார்...

பின் ஏட்டைப் பார்த்து ரெம்ப வலிக்குதாய்யா... என கரகரத்தக் குரலில் கேட்டு அன்பொழுக கண் கலங்கினார்...

கரங்களில் கிடந்த ஏட்டு அன்பேந்தல் அந்த முதுமகனின் கருணையை கண்டு உணர்ந்த அந்த நொடியில் அவனது கண்களும் கலங்கியது...

அதிலிருந்து வடிந்தது ஆணவம் என்னும் ஒரு துளிக் கடல்...

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன 💐😃🙏

©முத்தரசு மகாலிங்கம்.
~*~

© Mutharasu Mahalingam