...

1 views

அந்தக் கழுதைக்கு மூளை இல்லை
முன்னொரு காலத்தில், ஒரு பசியெடுத்த சிங்கம், நரியிடம் சொன்னது: *எனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வா; இல்லையெனில் உன்னை சாப்பிட்டு விடுவேன்*.

நரி ஒரு கழுதையிடம் சென்று சொன்னது: *சிங்கம் உன்னை காட்டுக்கு ராஜாவாக முடிசூட்ட அழைத்து வரச்சொன்னது. நல்ல நாட்கள் வரப்போகின்றன*.

கழுதையும் சென்றது.

கழுதையைக் கண்டதும் சிங்கம் அதனைத் தாக்கியது, அதனால் கழுதையின் காதுகள் அறுபட்டாலும், கழுதை தப்பித்து விட்டது.

கழுதை நரியிடம் சொன்னது: *நீ என்னை ஏமாற்றிவிட்டாய். சிங்கம் என்னை கொல்லப் பார்த்தது.*

அதற்கு நரி சொன்னது: *சேச்சே, உன் தலையில் கிரீடம் சூட்டவே, சிங்கம் உன் காதுகளை அகற்றியது. வா மீண்டும் செல்வோம். வேண்டும் கிரீடம்.*

கழுதைக்கு அது சரி எனப் பட்டது, அதனால் திரும்பிச் சென்றது.

மீண்டும் கழுதையைத் தாக்கிய சிங்கம், இம்முறை அதன் வாலை அறுத்தது!

கழுதை மீண்டும் தப்பித்து நரியிடம் சொன்னது: *நீ பொய் சொல்கிறாய்; இதோ பார், சிங்கம் என் வாலை அறுத்துவிட்டது.*

நரி சொன்னது: *நீ அரியாசனத்தில் வசதியாக அமரவேண்டும் என்பதற்காகவே சிங்கம் உன் வாலை அகற்றியது. மீண்டும் செல்வோம். வேண்டும் அரியாசனம்.*

நரி கழுதையை மீண்டும் அழைத்து சென்றது.

இந்த முறை, சிங்கம் கழுதையைப் பிடித்து கொன்றது.

சிங்கம் நரியிடம் சொன்னது: *பலே பலே, எப்படி சிக்கி சீரழிந்தாலும், திரும்ப கழுதையை அழைத்து வந்துவிட்டாயே. போய் கழுதையின் தோலை உரித்து, அதன் மூளை, நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயத்தைக் கொண்டு வா.*

நரி கழுதையின் தோலை உரித்து, அதன் மூளையை சாப்பிட்டது; கழுதையின் நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயத்தை சிங்கத்திற்கு கொண்டு வந்தது.

சிங்கம் கோபமடைந்து கேட்டது: *மூளை எங்கே?*

நரி பதிலளித்தது: *அந்த கழுதைக்கு மூளை இல்லை அரசே. மூளை இருந்திருந்தால், காதையும், வாலையும் இழந்த பின்னர் உங்களை நம்பி மூன்றாம் முறை வந்திருக்குமா?*

(மூன்றாவது முறையாக ஏமாறும் கழுதைகளாக நாம் இருக்கவேண்டாம் என்று எச்சரிப்பதற்காக பலநூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பஞ்சதந்திரக் கதை இது)



/ப.பி/