...

14 views

மீனாட்சி
"என்னடி மீனாட்சி, கோழி வாடை எட்டு ஊருக்கும் மணக்குது?, வீட்டுக்காரன் ஊர்ல இருந்து வந்துட்டான? ". மீனாட்சியின் சிரிப்பில் எப்பொழுதும் தொனிக்கும் இறுக்கம் அன்று இல்லை, மாறாக பெண்மையின் பலம் கொண்ட திமிர் சற்று தைரியமாக எட்டிப் பார்த்தது. அதை வெட்கம் என்று எண்ணி "என் ராசாத்தி ! ஒன் சிரிப்பு மாதிரியே சந்தோசமா எப்பவும் இருப்ப தாயி நீ", என்று வாழ்த்தி நகர்ந்தாள் பக்கத்து வீட்டுக்கார கிழவி. அவள் பெயர் என்னவோ தெரியாது, கொட்டுக்கார கிழவி என்றால் ஊரில் பிரபலம்.
கைபேசி விடாமல் அனத்திக் கொண்டிருந்தது, இரு முறை அப்பா அழைத்திருக்கிறார், பல முறை சிதம்பரமும். மீனாட்சி அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. தொலைக்காட்சியில் இசை ஒளிபரப்பும் சேனல் ஒன்றைத் திருப்பினாள். "Let me tell a குட்டி story ..." ஒலித்தது, கைபேசி யும் சேர்ந்து தான். பாடல்கள் ரசிப்பது மீனாட்சி உயிருடன் கலந்த ஒன்றாக இருந்தது திருமணத்திற்கு முன்பு. ஏனோ தன்னையே பலவருடங்கள் கழித்து பார்ப்பது போல் தோன்றியது மீனாட்சிக்கு.
வீட்டினுள் நுழைய முன்பே தெருவே அலறும்படி " என்னடி ....என்ன, எவ்ளோ திமிரு உனக்கு, போன் பண்ணா எடுக்காம..கழுதைக்கு பாட்டு கேக்குதோ பாட்டு", என்று கொத்தாக கழுத்தொடு சேர்த்து மீனாட்சியை தூக்கினான் சிதம்பரம். "சொல்லுடி, உங்க அப்பண்ட்ட காசு வாங்கி வைக்க சொன்னேனா இல்லையா?? சொன்னத செய்யாம என்னடி பாட்டு கேக்கு தோ? இப்போ எனக்கு பணம் வரல கழுத்த அறுத்துவிட்டு ருவென் பாதுக்க" என்றவன் சற்று வாயடைத்து தான் போனான், மீனாட்சிக்கு பதில் கூட பேசத் தெரியுமா என்று.
" கழுத்த அறுத்திருவெண்ணு அவன் சொன்னானா...இல்ல நீ சொல்றியா?"
சிதம்பரத்தின் கோபம் எல்லை மீறியது, " அப்போ நீயாடி என் உசுர அடமானத்துக்கு வச்சிட்டு வந்திருக்க" , என்று அவன் கையை ஓங்குவதர்க்கும், அவன் காதோடு எவர்சில்வர் தட்டு மோதி ஓசை எழுப்புவதற்கு உம் சரியாக இருந்தது.
தொலைக்காட்சியில் அடுத்த பாடலாக " வாத்தி coming ஒத்து.." ஒளிக்கத் தொடங்கி இருந்தது.
அதிர்ச்சி, மிரட்சி, பயம் என்று அனைத்து உணர்வுகளின் பிடியிலும் நின்றவனைப் பார்த்து " என்ன அடி பலமோ! , மூச்சையும் கூட காங்கள! ..இங்க பாரு உன் குடுமி இப்போ என் கையில....பொத்திட்டு இருக்கணும் வெளங்குதா", என்றவள் இன் குரல் அவன் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அவனை சற்றும் சட்டை செய்யாமல் சமைத்து வைத்திருந்த கறியையும், சோற்றையும் தட்டில் நிரப்பி பல நாட்கள் கழித்து அன்று மனநிறைவுடன் திருப்தியுடன் உண்டு முடித்தாள். சிதம்பரம் சிலையானான். " வாத்தி coming ஒத்து.." பாடலுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

- நிவே 🙂

#tamilstories #tamil #tamilpost