புலிக்குறடு
© ஞானி
புலிக்குறடு..
புலிக்குறடு நான்கு கிலோமீட்டர் என்ற அறிவிப்போடு பாதி எழுத்துக்கள் மறைந்த நிலையில் எந்தநேரமும் கழன்று விழும் நிலையில் இருந்தது அந்தப் பெயர் பலகை. ஜல்லிக் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்பட்ட அந்த சாலையில் அனன்யா தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தாள்.
ஸ்ஸ் ப்பா ஓவர் வெய்யில் இல்ல ஸ்வெட்டிங் அதிகமா இருக்கு இன்னும் எவ்ளோ தூரம் போகனும்? என்னால முடியல,
திவ்யா குட்டி இன்னும் கொஞ்ச தூரம் தான் போயிடலாம் என்றவாறு சொல்லிக் கொண்டே காரை ஓட்டிக் கொண்டிருந்தாள் அனன்யா.
இந்த வில்லேஜ்லயா உங்க தாத்தா இருக்கார், ரோடு சரியில்ல டிரான்ஸ்போர்ட் வசதியில்ல ஷாப்பிங் மால் தியேட்டர் அப்படி இப்படின்னு ஒன்னு கிடையாது பாவம் இந்த வில்லேஜ்ல மனுசங்க எப்படி தான் வாழறாங்கனே தெரியல, ஏதோ நீ கூப்பிட்டியேனு வந்தேன் நமக்கு இந்த அட்மாஸ்பியர் சுத்தமா ஒத்துக்காது நம்ம லைப் ஸ்டைல் வேற? என்று அலுத்துக் கொண்டாள் வர்ஷா.
கூல் பேபி எங்க அம்மாவோட சொந்த ஊர் இது , எக்ஸாக்ட்டா இருபத்து ஏழு வருஷத்துக்கு முன்னால எங்க மம்மியும் டாடியும் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க, அது எங்க தாத்தா பாட்டிக்கு சுத்தமா புடிக்கல, அதுலயும் முக்கியமா எங்க மம்மியோட பெரிய பிரதர் கதிரேசன் அங்கிளுக்கு ரொம்ப கோபம். அதனால இந்த வீட்டு பக்கமே வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அப்போ எங்க டாடி மதுராந்தகத்தில் இருக்கிற ஒரு கம்பெனியில வேலை பார்த்துகிட்டு இருந்தாங்க, எங்க மம்மி ஸ்கூல் டீச்சர் அப்பாவுக்கு புரமோஷன் கிடைத்ததும் சென்னைக்கு வந்துட்டாரு அப்புறம் நான் பொறந்த உடனே அம்மா டிரான்ஸ்பர் கேட்டு இங்க வந்து செட்டில் ஆயிட்டோம். கிட்டத்தட்ட ஆறு வருஷமா எங்க கூட பேசாம பார்க்காம இருந்தாங்க, அப்புறமா என் தம்பி ஆகாஷ் பிறந்ததும் பேரன பாக்கணும்னு சொல்லி என் பாட்டி மட்டும் வந்தாங்க. கொஞ்ச நாள் கழிச்சு என் தாத்தாவும் வந்து பாத்துட்டு போனாரு அப்ப கூட எங்க அப்பாகிட்ட அவங்க ரெண்டு பேரும் பேசவே இல்ல. என்கிட்டயும் மம்மி கிட்டயும் பேசிட்டு ஆகாஷ்க்கும் எனக்கும் செயின் எடுத்து போட்டுட்டு பாத்துட்டு போயிட்டாங்க. இன்னிக்கு வரைக்கும் கதிரேசன் அங்கிள் எங்ககிட்ட பேசறதே இல்ல தாத்தா பாட்டி மட்டும் வருஷத்துக்கு ரெண்டு மூணு தடவ வந்து எங்கள பாத்துட்டு போவாங்க. அவங்களுக்கு என் மேலயும் ஆகாஷ் மேலயும் கொள்ளைப் பிரியம். இப்ப கொஞ்சம் வருஷமாத்தான் டாடி கிட்ட தாத்தா பாட்டி இரண்டு பேரும் பேசறாங்க அதனால நாங்க எல்லாரும் தீபாவளி பொங்கல் சமயத்துல இந்த ஊருக்கு வந்திட்டு போவோம். இந்த வருஷம் டாடி மீட்டிங்காக டெல்லி போயிட்டாரு, ஆகாஷ்க்கு எக்ஸாம் நடக்குது அதனால மம்மி ஆகாஷ் கூட இருக்காங்க, சோ என்ன மட்டும் போயிட்டு வர சொன்னாங்க அதனாலதான் ஒரு சேஞ்சுக்காக உங்களையும் கூப்பிட்டேன் என்று அனன்யா சொல்லி முடிப்பதற்கும் புலிக்குறடு ஊர் வருவதற்கும் சரியாக இருந்தது.
புலிக்குறடு நகரத்தின் பரபரப்புக்கு முற்றும் மாறுபட்டு அமைதியாக இருந்தது, நான்கைந்து காரை வீடுகளைத் தவிர முழுக்க மச்சு வீடுகளும் கூரை வீடுகளுமாக காணப்பட்டது. மூன்று தெருக்களும் அதிகபட்சமாக ஐம்பது வீடுகளும் இருந்தால் அதிகம் எனத் தோன்றியது, எல்லோர் வீட்டின் முன்பும் மரங்களும் வீட்டின் பின்னால் வயல்வெளிகளுமாய் காட்சியளித்தது,
அனன்யா தெருக்கோடியின் கடைசியில் இருந்த ஒரு வீட்டின் முன்னால் காரை நிறுத்தி இறங்கினாள். அந்த வீடு நாட்டு ஓடுகளால் வேயப்பட்டதாகவும் வீட்டின் முன்னால் பெரிய வேப்ப மரமும் அந்த மரத்தின் கீழ் கயிற்றுக் கட்டிலில் முதியவர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரைக் கண்டதும் அனன்யா ஓடிச்சென்று தாத்தா என்றவாறு கட்டியணைத்துக் கொண்டாள், அவளைக்கண்டதும் யாரு அனன்யாவா வாடி குழந்தை இப்பத்தான் இந்த தாத்தாவை பார்க்க உனக்கு நேரம் கிடைச்சுதா அம்மா அப்பா வரலையா ஆகாஷ் குட்டி எங்க என்று கேட்டுக்கொண்டே பொக்கை பல் தெரிய சிரித்தார்.
அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல தாத்தா, அப்பா வேலை விஷயமா டெல்லி போயிருக்காரு ஆகாஷுக்கு பரீட்சை நடக்கிறதால அம்மா கூட இருக்கான் அதனாலதான்...