...

26 views

தெய்வம் தந்த சொந்தமா - 2

அத்தியாயம் - 2


“சொல்லுங்க முகில் எப்படி இருக்கீங்க?”

“நல்லா இல்ல சர்வா…” முகில் கூறவும்,

“என்னாச்சு முகில்? எதுவும் பிரச்சனையா?”

“நிலா இருக்கும்போது எனக்கு என்ன குறை இருக்க போகுது சொல்லுங்க? நான் நல்லா இருக்கேன். ஆனா நீங்கச் செய்யுற எதுவும் நல்லா இல்ல. உங்க வீட்டுக்குக் காதுகுத்துக்கு அழைக்க வந்தோம். உங்க அம்மா ரொம்ப பேசிட்டாங்க. நிலா சிரிச்சிட்டே அதைச் சமாளிச்சா, உங்க மேல உள்ள மரியாதைக்காகத் தான் அமைதியா இருந்தேன்.”

“சாரி முகில். அம்மா எதோ ஆதங்கத்தில் பேசி இருப்பாங்க. தப்பா நினைக்காதீங்க. நான் அம்மாகிட்ட பேசி நிலாகிட்ட மன்னிப்பு கேட்கச் சொல்றேன்.” சர்வா பணிந்து போக,

“அவங்க எதுக்கு மன்னிப்பு கேட்கணும்? ஒரு பெத்த தாயிக்கு இருக்க வேண்டிய ஆதங்கம் தான் அது எல்லாம். இதுக்கு எல்லாம் காரணம் நீங்க, இன்னும் என் பொண்டாட்டியை மறக்கல தானே நீங்க? இன்னும் உங்க மனசு மாறல தானே? இது தப்பு சர்வா. எல்லாத்தையும் விட்டுப் போய்ப் பொறுப்பில்லாம உக்கார்ந்து இருக்கீங்க. அவங்க இதுக்கு எல்லாம் காரணம் நிலா தான்னு சொல்றாங்க. நம்ம நேசிச்ச ஒருத்தருக்கு நாமளே கஷ்டம் கொடுக்கக் கூடாது சர்வா.”

“உங்க மனைவி நிலா என் நினைவில் கூட இல்ல முகில். என் மோனாவை மொத்தமா மறக்க, நான் செத்து தான் போகனும். எனக்கு மன சோர்வு அதான் தனிமையை தேடி வந்தேன். இதுக்கும் உங்க மனைவிக்கும் சத்தியமா எந்தச் சம்பந்தமும் இல்ல. என்னால உங்களுக்கு ஏற்பட்ட மன காயத்துக்கு மன்னிச்சுடுங்க முகில்.”

“சர்வா இன்னும் எத்தனை நாளுக்கு என்னைக் குற்ற உணர்வில் தவிக்க விடப் போறீங்க?” முகில் கேட்கவும்,

“உங்களுக்கு எதுக்கு முகில் குற்ற உணர்வு? தப்பு எல்லாம் என் பக்கம். எதையும் யோசிக்காதீங்க. எல்லாம் சீக்கிரமே சரியாகிடும். அப்புறம், சென்னை வந்து இருக்கீங்களா?”

“நிலா அவங்க அப்பாவை நேரில் பார்த்து, சேர்ந்து விசேசத்துக்கு கூப்பிட்டு தான் ஆகனும்னு சொல்லிட்டா, அதான் கிளம்பி வந்துட்டோம். அப்படியே உங்க வீட்டுக்கும் சொல்ல வந்தோம். நேரம் இருந்தா நீங்களும் வாங்க, பழனி கோவிலில் தான் விசேஷம். அப்புறம், அம்மாவும், அப்பாவும் உங்கள பத்தின கவலையில் தான் இருக்காங்க. அவங்களுக்காகவாது கல்யாணம் பண்ணிக்கோங்க சர்வா. என் குற்ற உணர்வும் தீரும்.”

“சீக்கிரமே எல்லாத்தையும் சரி பண்ணிடுறேன் முகில்.”

“எனக்கு உங்க மேல அக்கறையும் அன்பும், மரியாதையும் இருக்கு. நமக்குள்ள இருக்க இந்த உறவு நிலைக்கனும்னு நான் விருப்புறேன். என் விருப்பம் நிறைவேற, நீங்கத் தான் மனசு வைக்கனும் சர்வா. ஒரு நிமிஷம் இருங்க நிலா பேசனும்னு சொல்றா”

சர்வா அமைதியாக இருக்க, முகில் நிலாவிடம் அலைபேசியை கொடுத்து நகர்ந்து இருந்தான்.

“சர்வா முகில் என்மேல உள்ள அன்பில் பேசிட்டார். சாரி எதையும் மனசில் வைக்காதீங்க. உங்க விருப்பம்போல இருங்க சர்வா. என்னால தான உங்களுக்கு இதெல்லாம்?

“நிலா பிளீஸ். இது என் தப்பு. என்னோட ஏமாற்றம். இதில் நீ எங்க வந்த?”

“ஒரு நிமிஷம் நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லனும். கேட்டுறுங்க பிளீஸ். எனக்கு உங்க மேல நிறைய மரியாதை இருந்தது, இப்பவும் இருக்கு, எப்பவும் இருக்கும். அப்பா நீங்கத் தான் மாப்பிள்ளைன்னு சொன்னப்ப, சத்தியமா எனக்கு உங்க மேல காதல் இல்ல. எல்லாரும் காதலிச்சு கல்யாணம் பண்றது இல்லையே? நிச்சயம் முன்னாடி தான் எனக்குக் காவ்யாவோட விருப்பமும், என்னைப்பத்தின உண்மையும் தெரியும். இருந்தும் நிச்சயம் மேடை ஏறக் காரணம், அப்பா. அதுக்காக உங்களை பிடிக்கலன்னு எல்லாம் சொல்லமாட்டேன். விதி என்னை முகில் கையில் சேர்க்காம இருந்திருந்தா உங்க கையில் தான் என்னை ஒப்படைச்சு இருப்பேன். ஏன்னா, என் அப்பாக்கு அப்புறம் எனக்கு நம்பிக்கையான ஒருத்தர் நீங்க மட்டும் தான்.”

“அப்ப ஏன் நிலா நீ என்கிட்ட உன் கஷ்டத்தைப் பகிர்ந்துக்கல? நீ சொல்லி இருந்தா, விதியையே உனக்காக மாத்தி எழுதி இருப்பேன்.”

“காவ்யா பாவம் சர்வா. அவளுக்குக் கிடைக்க வேண்டிய எல்லாத்தையும் அப்பா எனக்குக் கொடுத்துட்டார். அவ என்கிட்ட வேணும்னு கேட்டது உங்களை மட்டும் தான். உங்களை நேசிக்காத என்னைவிட, உங்களை உயிரா நேசிக்கிற காவ்யா அந்த இடத்துக்கு வரட்டும் தான். உங்ககிட்ட சொல்லல.” நிலா சொல்லவும், முதல் முறையாகச் சர்வா அவனின் கோவத்தை அவளிடம் கொட்டி இருந்தான்.

“பைத்தியமா உனக்கு? ஏன் நிலா உனக்குத் தெரியாதா உன்னை நான் நேசிச்சது? நம்ம வீட்டைப் பார்க்க வந்த அப்ப நானே உன்கிட்ட என் காதலை சொன்னேன் தானே? என் காதல் உனக்கு விளையாட்டு இல்ல? நீங்க அக்காவும் தங்கையும் கைமாத்திக்க நான் என்ன புடவையா? இல்ல பொம்மையா? எனக்கும் மனசும் உணர்வும் இருக்குன்னு உனக்குப் புரியல தானே? என்னை காதலிச்சாலா உன் தங்கச்சி? நீ என்னை விட்டுக் கொடுத்ததால் நான் அவளுக்கு வேண்டாமாம். அவ்ளோ தான் அவ காதல் முடிஞ்சுது. அவளே சம்மதம் சொல்லி இருந்தாலும் அவளை நான் கல்யாணம் செய்து இருக்க மாட்டேன். புரியுதா உனக்கு? நீ சொல்லாம விட்டு இப்ப காயப்பட்டு நிக்கிறது நான் தான்.”

“இல்ல சர்வா… நான் இதை எதிர்பார்க்கல. எனக்குத் தெரியாம… சாரி… சாரி சர்வா.” நிலாவின் குரல் உடையவும், சர்வேஸ்வரன் தெளிந்து இருந்தான்.

“சாரி நிலா. எனக்குக் கொஞ்ச நாள் வேணும். என்னை நானே சரி பண்ணிட்டு உன்கிட்ட பேசறேன். எனக்கு உன் உணர்வுகள் புரியுது நிலா. உன் மேல எந்தத் தப்பும் இல்ல. சூழ்நிலை மாறிப் போனதுக்கு நீ என்ன செய்ய முடியும்? இதை இனிமேல் நம்ம பேசிக்கவே வேண்டாம். எதையும் யோசிக்காத, அம்மா பேசினதை மறந்திரு. நான் சரியாகிடுவேன்.”

“இல்ல சர்வா…“

“போதும் நிலா. எனக்குப் புரியுது. பிளீஸ்… பேசிப் பேசி ரணம் பண்ணிக்க வேண்டாம். முடிஞ்சது முடிஞ்சு போச்சு. நீங்க எதையும் யோசிக்காம, நிம்மதியா வெற்றியோட விசேஷ வேலையைப் பாருங்க.” சர்வா கூறவும் நிலா சரியென அழைப்பை முடித்து இருந்தாள்.

சர்வா சரிந்து இருக்கையில் அமர்ந்து, தலை நிமிர வான் நிலா அவனைப் பார்த்திருந்தது பெருமூச்சு விட்டவன் எழுந்து அறைக்குள் சென்று அடைந்து இருந்தான். இரவு உணவுக்கு வராதவனை, அழைக்கச் சுந்தர் செல்லவும், உணவு வேண்டாம் என்று மறுத்திருந்தான்.

அடுத்த நாள் காலையில் எழுந்து அமர்ந்தவனுக்கு தலைவலி. நேற்று நிலாவின் குரல் உடைந்து அவள் வருந்தியது நினைவுக்கு வர, சர்வேஸ்வரன் மீண்டும் படுக்கையில் விழுந்து இருந்தான். காலை மணி பத்தாகியும் எழுந்து வராதாவனை நினைத்துச் சுந்தருக்கு ஒரு பக்கம் கோவம் வந்தாலும், இன்னொரு பக்கம் பாவமாக இருந்தது.

‘ எந்தத் தவறும் சர்வேஸ்வரன் பக்கம் இல்லை. அவன் நிலாவுக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை. நிலாவும் அவனை ஏமாற்ற வேண்டி எதையும் திட்டமிட்டு செயலாற்றவும் இல்லை. அவர்களின் சூழ்நிலை வஞ்சித்து விட்டது. இதற்கு யார் பொறுப்பேற்று கொள்வது? எல்லாம் அறிந்து இருந்தும் இந்தச் சர்வேஸ்வரன் எதற்காக அவன் மீதே இத்தனை கடுமையாக நடந்து கொள்கிறான்?’ சுந்தர் சிந்தனைகளோடு சர்வாவின் அறை கதவை தட்ட,

“எனக்கு எதும் வேண்டாம் சுந்தர். தேவை இருந்தா நானே உங்களைக் கூப்பிடுவேன்.” சர்வாவின் குரல் மட்டும் கேட்க, சுந்தர் இரு நிமிடங்கள் அங்கேயே தயங்கி நின்று, பின் விலகிச் சென்று இருந்தான்.

மாலை நேரத்தில் வேதியியல் படிக்க வந்த ராம் காத்திருக்க, சுந்தர் மீண்டும் வந்து அழைக்க, சர்வா அறையை விட்டு வெளியே வந்து இருந்தான். சர்வாவின் முகத்தில் இருந்த சோகமும் சோர்வும் சுந்தரை மனம் வருத்த,

“ அண்ணா எனக்குக் கெமிஸ்ட்ரி முன்னாடி கொஞ்சம் காபி பிஸ்கெட் கொடுக்கச் சொல்லுண்ணா… ஸ்கூலிலிருந்து அப்படியே வரேன். பசிக்குது…” ராம் கேட்க, சர்வேஸ்வரன் சிரித்து இருந்தான். சட்டென வாய்விட்டுச் சிரித்தவனை கண்டு, சுந்தர் திகைத்து விழிக்க,

“ ஓ… பசிக்குதா உனக்கு? சரி சுந்தர் இவனுக்கு என்ன வேணும்னு கேட்டுச் சாப்பிட கொடு, அப்படியே எனக்குத் தோசை சுட்டு வை. நான் குளிச்சுட்டு வரேன்.” சர்வா சொல்லிவிட்டு நகர,

“ உங்க முகமே நீங்கச் சோர்வில் இருக்கிறதை சொல்லுது அண்ணா. அதான் காபி கேட்டேன். எனக்குத் தெரிஞ்ச வழி இதான்.” ராம் கூறவும்,

“ லவ் யூ டாக் குட்டிப்பையா… சுந்தர் பார்த்துக்கோ… “ சொல்லிவிட்டு சென்றவனை கண்டு ராம் புன்னகைக்க,

“ நேத்து ராத்திரியிலிருந்து உன் அண்ணா, சாப்பிட கூட வராம ரூமில் அடைஞ்சு இருக்கார். நீ வந்த பின்னத் தான் எழுந்து வெளிய வந்து இருக்கார். இதோ இப்ப உன்னால தான் சாப்பிடவும் போறார்.” சுந்தர் சொல்லவும்,

“ இந்தச் சர்வா அண்ணாக்கு அப்படி என்ன தான் பிரச்சனை சுந்தர் அண்ணா? “ ராம் கேட்க,

சுந்தர் அவனை அழைத்துக்கொண்டு சமையல் அறைக்குச் சென்றவன், சர்வா பற்றிய விவரங்களைக் கூறி இருந்தான். சர்வா உண்ண உணவும் அருந்தக் காபியும் தயாரித்து, ராம் கையிலும் தோசையை கொடுத்து இருந்தார்.

“ சர்வா அண்ணா என்ன தப்பு பண்ணார்? பாவம். எனக்கு அந்த நிலா அக்கா மேல பயங்கர கோவமா வருது. அவங்க தங்கச்சி மட்டும் தான் பாவமா? சர்வா அண்ணா பாவம் இல்லையா? சொல்லி இருந்தா சர்வா அண்ணாவை கல்யாணம் பண்ணிட்டு நான் செந்தில் முருகன் பொண்ணு இல்ல. இனிமேல் சர்வேஸ்வரன் பொண்டட்டின்னு நெஞ்சை நிமிர்த்தித் தைரியமா சொல்லி இருக்கலாம். இப்ப சர்வா அண்ணா தானே உடைஞ்சு போய் நிக்கிறார்.”

“ ராம்… இதெல்லாம் தம்பி முன்னாடி பேசி வைக்காத, அவருக்கு நிலாவை யார் ஒரு சொல் சொன்னாலும் மனசு தாங்காது. கோவத்தில் உன்னைப் பேசிடுவார். ஜாக்கிரதை.” சுந்தர் எச்சரிக்க, ராம் சாப்பிட்டு எழுந்து இருந்தான்.

பின் சர்வேஸ்வரன் உணவை உண்டு வந்து அமரவும், சுந்தர் காஃபி கொடுக்க, வாங்கி அருந்தியவனுக்கு தலைவலி பறந்த உணர்வு. ராம் கேட்ட சந்தேகம் அனைத்திற்கும் பதில் கொடுத்தவன். பின் ராம் உடன் அவன் இல்லம் வரை நடந்து சென்று அவனை வீட்டில் விட்டு, அவன் இல்லம் நோக்கி நடந்து கொண்டு இருந்தான். அப்போது எதிரில் வந்தால் சக்தி.

“ ஹாய் சக்தி…”

“ என்ன வேணும் உங்களுக்கு? நடு ரோட்டில் நின்னுட்டு எதுக்கு என் பெயர் சொல்லிக் கூப்பிட்டு இருக்கீங்க?”

“ உன்கிட்ட பேச நினைச்சது தப்பு தான். தெரியாம பேசிட்டேன் மன்னிச்சிடு.” சர்வா சொல்லவும், சக்தி அவனை முறைத்து விட்டு நகர்ந்து இருந்தாள்.

சக்தி நகர்ந்த பின்னும், அவனை ஒரு முறை தொட்டு சென்றது அவளின் கையில் இருந்த உணவுப் பை. அதிலிருந்து வந்த சூப் வாசனை அவனைத் தூண்டி விட, நடந்தவன் சூப் கடைக்கு முன் சென்று நின்று இருந்தான். சிக்கன் சூப், மோமோஸ் என உண்டவன் நடந்தே இல்லம் வந்து சேர்ந்து இருந்தான். சுந்தர் அவனுக்காகக் காத்திருக்க, சூப்பை அவன் கையில் கொடுத்து, அவன் உணவு உண்ட விவரத்தைக் கூறிவிட்டு அறைக்கு வந்தான்.

நடந்த நடை அவனுக்குச் சோர்வை கொடுத்து இருக்க உடை மாற்றிப் படுக்கையில் விழவும், அலைபேசி இசைத்தது. அலைபேசி எடுக்க, முகில் அழைத்துக் கொண்டு இருந்தான். சர்வா ஒரு நொடி தயங்கி அழைப்பை எடுக்க,

“ இன்னொரு முறை நீ என் நிலாவை அழ வெச்சா… இல்ல அழ வைக்க நினைச்சாலும் உன்னை என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. நீ நல்லா இருக்கணும்னு நாங்க நினைக்கக் காரணம் உன் பெருந்தன்மை. அவ்ளோ தான் உனக்கும் எங்களுக்கும் வேற எந்த ஒட்டும் இல்ல உறவும் இல்ல. இனி எந்த உறவையும் தூக்கிட்டு எங்க வீட்டுக்கு வந்துடாத அவ்ளோ தான் உனக்கு மரியாதை.”

“ நிலா நிலையிலிருந்து ஒரு நிமிஷம் யோசிச்சு இருந்தா, அவளைப் பேசி இருப்பியா நீ? நிலாவை காதலிச்சேன் சொன்ன தான? காதலிச்ச பொண்ணை இப்படி தான் காயப்படுத்தி பார்ப்பியா? என் நிலா குற்ற உணர்வில் அழறாயா… அதும் உன்னால… எனக்குப் பதறுது வலிக்குது… நீ நல்லா இருக்கனும்னு அவ நினைச்சது தான் தப்பா…? இன்னும் எத்தனை காலத்துக்கு நீ தூசியா எங்க கண்ணில் உறுத்த போற? சொல்லு… மன உறுத்தல் இல்லாத வாழ்க்கை என் நிலாவுக்கு கிடைக்குமா? கிடைக்காதா? முகிலினியன் கேட்க, சர்வா உடைந்து இருந்தான்.

“ என்னையும் மீறி வார்த்தையை விட்டேன் முகில். சத்தியமா நான் நிலாவை காயப்படுத்த நினைக்கல. இனிமேல் என்னால எந்தத் தொந்தரவும் இருக்காது. தூசியா கூட உங்க கண்ணுக்கும் கருத்துக்கும் நான் இனி வரமாட்டேன்.” சர்வா சொல்லவும் முகில் அழைப்பை முடித்து இருந்தான்.

கொஞ்சம் தெளிந்த மனது, மீண்டும் குழம்பி சோர்ந்து இருக்க, சர்வேஸ்வரன் எழுந்து பால்கனி சென்று அமர்ந்து இருந்தான். எதையோ கேட்கிறது மனது? ஏனோ தவிக்கிறது? எதற்காக? புரியாது தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தவன் கதறி இருந்தான். அழுகை என்னவென்று அறியாதவன் கதறி அழுது இருந்தான். அவனை அமைதியாய் தழுவிக் கொண்டது குளிர்.

© GMKNOVELS