...

6 views

அப்பா
மழை வரப்போகுது
வரப்பு கொத்தியது போதும்
வீட்டுக்கு வாங்க அப்பா...

என்னை வாத்தியருக்கு
படிக்க வைக்க,
நீ வயகாட்டில் உழைச்சி
சம்பாதிச்ச காசையெல்லாம்
எனக்கே செலவழிச்ச...

நான் வாத்தியரா ஆகவில்லை;
நீ பட்ட கடனை தீர்க்கவில்லை,
வேலைக்கே போகாமல்
வீட்டுக்குள்ள நானிருக்க...

நீ மட்டும் வெள்ளந்தியா உழைக்கிற;
உன் உடம்ப கூட கவனிக்க மறந்துடற;
வேலைக்கே போகாதவனக்கு
மூன்று வேளையும் சோறும் போடுற...

ஆடு மாடு மேய்ச்சி;
அக்கம் பக்கம் கூலிக்கு ஓடி,
ஓய்வின்றி உழைச்சாலும்
உனக்காக அரைகாசு செலவழிக்க
அரைமணி நேரம் யோசிப்ப...

உன் பிள்ளை எனக்கு மட்டும்
தாராளமாய் செலவழிச்ச,
தன் மகனும் அரசாங்க
உத்தியோகத்தில் அமருவான்
என்றல்லவா நீயும் ஆசைவச்ச...

நீ நினைச்ச படி
படிச்சி பட்டமும் வாங்கினேன்;
அரசாங்க உத்தியோகத்திற்காக
தேர்வும் எழுதினேன்,
அடுத்த வருசம்
வேலை வந்திடுமென
சொல்லி சொல்லியே
வருசம் ஆறு ஏழு செலவழிச்சேன்...

வயசும் முப்பதாச்சி;
மூனு முடிச்சு போடும்
காலமும் நேரமும் கடந்தாச்சி;
இருந்தும் பயனென்ன அப்பா?

உன்னாசையை நிறைவேத்துல;
உனது உழைப்பிற்கு ஓய்வளிக்க முடியல;
உன்னை உட்கார வச்சி சோறு போடும்
பாக்கியமும் இன்னும் கிடைக்கலனு
இனியும் பொழம்பிட மாட்டேன் அப்பா...

அரசாங்க உத்தியோகம்
எனக்கு தேவையில்லை;
உன் வயகாட்டு வேலையே
எனக்கு பரவாவில்லை,
உன்னை போல உழைப்பாளியாய்
நானும் மாறப்போறேன் அப்பா...

வயல் உழது வாழ்வதே
சிறந்த உத்தியோகம்;
இனி உனக்கு ஓய்வுகாலம் ;
மழை வரப்போகுது
வரப்பு கொத்தியது போதும்
வீட்டுக்கு போங்க அப்பா!.
-சங்கத்தமிழன்