...

18 views

அவள் தான் வேண்டும்!


டேய் நித்தீஸ் ...முழுசா முப்பது வயசு முடிஞ்சாச்சு....இன்னும் இப்படியே இருந்தா எப்படிடா...??_ நீர் கோதிய விழிகளோடு அவன் நாடியை பிடித்துத் தன் பக்கமாய்த் திருப்பினாள் தாய் ஸ்டெல்லா.

ஏறிட்டுப் பாராமலே இமைகளைக்
கவிழ்த்தப்படி ,உதட்டில் வெற்றுப் புன்னகையைக் காட்டினான் ... ! அதனூடே அவன் இதயம் கனத்துத் துடிப்பதை உணர முடிந்தது அவளால்...!

ஏண்டா...உனக்கு நான் எத்தனை முறை சொல்லிட்டேன்....எவளையாவது மனசில வச்சிரிக்கியா....? சொல்லுடா....?_ தோளில் கை வைத்து உலுக்கினாள்.

அது....வந்து....அப்படில்லாம் இல்லமா...._
ஏதோ இருக்குமா என்று கேட்டது அவ்வார்த்தைகள் அவளுக்கு.

இங்கப் பாருடா.. ...முப்பத்தைந்து வருசத்திற்கு முன்பே உங்கப்பாவும் நானும் சாதியையோ மதத்தையோ பார்க்காம காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டோம்....
யாருக்கும் அது பிடிக்கல .
எங்க அம்மா தற்கொலை பண்ணிக்குவேன்னு கத்தினாங்க.......! அவுங்க அப்பா ...அதான் என் மாமனார் என்னை நேரிலேயே வந்து கொன்னுடுவேன்னு ரொம்பவே மெரட்டிட்டுப் போனாரு ....!
அதைப் பற்றியெல்லாம் நாங்க கவலையே படல....

யாருக்கும் தெரியாம சென்னைக்கு வந்து...உன்னையும் பெத்து....நாங்க நல்லா வாழலையா என்ன..?_

சொல்லுடா உன் மனசில காதல் இருக்குன்னு எனக்குத் தெரியுது... அது யாராக இருந்தாலும் பரவாயில்ல. சொல்லு ...இன்னைக்கே போய் கேட்டு முடித்திடுவோம்....
அவுங்க வீட்ல தர மறுத்தா கூட்டிட்டு வாடா....நாம மகளா பார்த்துக்குவோம்...._ அன்பு தெரித்தது அமைதியான அந்த வார்த்தைகளில் இருந்த சாந்தத்திலும்...!

அம்மா....அது...இல்லமா...நீங்க ஏத்துக்க மாட்டீங்க...எனக்குத் தெரியும்...., _ தலை நிமிராமலே சொல்லி முடித்தான்....!

லேசான புன்னகை நொடி நேரத்தில் தோன்றி மறைய விழிகள் அகன்று சுருங்கியது ஸ்டெல்லாவுக்கு...!

அட டா ஒருவழியா ஒத்துக்கிட்டான்....உதட்டில் பூத்த சிரிப்பை உள்ளுக்குள்ளையே உதிர்த்துக் கொண்டாள்...!

*சொல்லுடா"......மகனுக்கே மகளாய் மாறி குழந்தை போல் சிணுங்கினாள்...அவளது குறலில் கொஞ்சல் தொனித்தது.

அம்மா...அது ....நம்ம ஊருல்ல..._ ஆரம்பித்தான்.

எந்த ஊருன்னா என்ன....நீ சொல்லுப்பா....!

நம்ம ஊர்ல இருக்கிற சின்ன பள்ளிக் கூடத்தில டீச்சரா இருக்கும் மல்லிகா...._ ஒரே மூச்சில் கொட்டி முடித்தான்....!

யா...யாரு...அ..ந்த புருஷன் இல்லாத ஒரு மகனோட இருக்குதே......_ வாய் பிழந்தபடி அவன் கண்களுக்குள் ஊடுருவினாள் நெற்றிச் சுருங்க தன் கோபவிழிகளால்...!

குனிந்து நின்றிருந்தவன் கைகளை நெஞ்சிற்கு குறுக்கே கட்டியபடி நிமிர்ந்து நின்றான், முகத்தை சற்று திருப்பியபடியே..._ அதில் அவனது உறுதியும் எதிர்ப்பை எதிர்பார்த்த அவனது தெளிவும் தெரியவர அதிர்ந்து போனாள் !

ஒரு நிமிடத்தையும் தாண்டியது
மௌன பதங்கள்...!

ஸ்டெல்லா மூச்சுவிடும் சப்தம்
நித்தீசின் செவிப்பறையில் வந்து வந்து மோதி எதிர்ப்பலைகளின் தீவிரத்தை சொற்களின்றியே உணர்த்திக் கொண்டிருந்தது.....!

இங்க பாருடா.....! கோபம், வெறுப்பு, எரிச்சல் அனைத்தும் கலந்திருந்தது அந்த அழைப்பில்...!

செவிசாய்ப்பதைப் போல் திரும்பினான் நித்தீஸ்.!

ரோட்டில போகும் பிச்சைக்காரியை வேண்டுமானாலும் நீ கூட்டிட்டு வா...சேர்த்துக்கிறேன்...
ஆனா...ஒருத்தன் கூட வாழ்ந்து ஒரு பிள்ளையையும் பெத்து வச்சிருக்கும்....அந்த விதவைய இங்க கூட்டிட்டு வந்து எங்களை கேவலப் படுத்திடாத.....நாங்க அதை ஏற்போமுன்னு கனவிலேயும் நெனைக்காத....மறந்திடு....
ச்சீ.....அசிங்கம்....!_ அத்தனை வெறுப்போடு எரிச்சலையும் அவள் முகத்தில் அவன் இதுவரை கண்டதே இல்லை.

என்னம்மா அசிங்கம்...?நானென்ன அடுத்தவன் மனைவியையா கள்ளத்தனமா கூட்டிட்டு வாறேன்னு சொல்லி விட்டேன்...?_சற்றே குரலை உயர்த்தி தான் கேட்டான்

இங்க பாருடா....இந்த மாதிரி சமூகச் சேவையெல்லாம் பேச வேணும்ன்னா நல்லாயிருக்கும்...நடைமுறைக்கு சரிவராது....!

இல்லம்மா....நான் விரும்பிட்டேன்....அதோட நான் இதை சேவையென்றெல்லாம் எண்ணல...எனக்கு அவள் மீது உண்மையிலேயே காதல்....! இதிலென்ன தவறு?_

ஆணித்தரமாய் எழுந்த அவனது வினாவில் தடுமாறினாள் உள்ளுக்குள்...

ஏய்...இந்த அசிங்கத்தைதான் செய்வேன்னா....என்னை நீ உயிரோட பார்க்க முடியாது...._ பார்த்துக்கோ..கெர்ச்சனை அதிகமானது

பதிலுக்கு அலட்சியமாக தன் முகத்தை வேறு திசைக்கு மாறியபோது தான் கவனித்தாள் .... *இதற்கெல்லாம் நான் பயப்படுகிறவனல்ல*....என்ற அவனது உடல் மொழியை!!

என்னங்க......!!

அலறியபடியே கணவர் இருந்த மாடி அறையை நோக்கி ஓடியவள் விக்கித்து நின்றாள்...

எந்தவித சலனமும் இன்றி லேசான புன்னகையை காட்டியவராய் படிக்கட்டுகளில் இருந்து
இறங்கி கொண்டிருந்தார் கணவர் தங்கமணி ...!

நானும் எல்லாவற்றையும் கேட்டேன்....என்றது அவரது முகபாவம்....

என்ன ஸ்டெல்லா.... நானும் எங்கப்பாவை போல அந்தப் பெண்ணிடம் போய் கொலை மிரட்டல் விட்டு வரவா....?? சிரித்தபடியே கேட்டார் தங்கமணி.

ம்....சொல்லு ஸ்டெல்லா....
கொஞ்சம் நினைச்சுப் பாரு ...

முப்பதைந்து ஆண்டுகளுக்கு முன்னால் சாதி மதம் பாராம கட்டிக்கிறது இப்போதைய சமூகத்துச் சூழலைவிட பெரிய அசிங்கமா தான் அன்றைய காலகட்டத்தில் இருந்தது .... நாம அதையெல்லாம் மீறி வாழ்ந்து காட்டலையா...??

அதே போல தான் இதுவும். இன்னும் முப்பது ஆண்டுகள் கூட ஆகாது...மிக சகஜமாக கணவனை இழந்த பெண்களை திருமணம் செய்வதும் காதலித்து கரம் பிடிப்பதும்...இப்போதும் எந்த தவறும் இதிலில்லை..

இது நல்ல மாற்றம் தானே....இதை ஏன் நாம் எளிதாக எடுக்க கூடாது....
இதில் என்ன இருக்கு? ஏன் இப்படிப் பதட்டப் படுகிற நீ....??

எல்லாவற்றிலும் சமத்துவம் விரும்பி, பேசி மகிழும் நீயே இப்படி நடந்து கொள்வது எனக்கு ஆச்சரியமா இருக்குமா..._ அவளை பார்த்தபடியே கூறினார்.

ஸ்டெல்லா....மனதிற்குள் அமைதியாகி கொண்டிருப்பது அவளது கண்களில் தெரிந்தது...

அப்பா....._ என்றவன் அவர் தோளில் சாய்ந்து முகம் பதித்து விம்மினான்...
வழிந்தோடிய கண்ணீரில் அவனது காதலின் வெற்றியும் எதிர்ப்பின் தாக்கமும் கரைந்தோடியது...!

மொழிகள் மௌனமாகின...
மெல்ல அணைத்த தந்தையின் கரங்கள் அவன் தலையைத் தடவி அரவணைத்தது...

மெல்லிய அன்னையின் விரல்களின் ஸ்பரிசத்தையும் முதுகில் உணர்ந்தான்...!

துளிர்விட்டது இன்பத்தின்
இலைகள்...உயிர்மரக்கிளைகளில்...!!

_ Dr.ஜான்சிபால்ராஜ்