...

11 views

மனம் வேண்டும் அக்கறை
கண்ணீர் கோடுகளுடன் அந்தச் சுருங்கிய தேகமுடையாள் உதட்டை பிதுக்கி பயந்த வண்ணம் அமர்ந்திருந்தார். அவரது இயலாமையில் நடந்த விடயம் அது.இருந்தும் யாரேனும் ஏதேனும் சொல்லிவிடுவார்களோ என்ற அச்சம். அவரது இயலாமையை அவரை குற்றம் சாட்டிட நகராது அவ்விடத்திலே அமர்ந்து கண்ணீர் வடிக்க, அங்கு வந்த கமலம் அவர் அருகே வந்தார்.

"என்னமா ஏன் அழுதிட்டு  இருக்கீங்க?" வந்தவரை ஏறெடுத்து பார்க்க முடியாமல் தலைகுனிந்தவர், " இல்ல கமலம் நான் உன்னை கூப்டலாம் நினைச்சி எந்திரிக்கறதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு" என்று  பயந்தவாக்கில் அவர் மெத்தையிலே கழித்து விட்ட இயற்கை உபாதையை காட்ட,

"இதுக்கு தான் அழுதிட்டு இருக்கீங்களா? இப்போ என்ன உங்களால முடியல இப்படி ஆகிடுச்சி ! அதுக்காகவா குழந்தை போல அழறது? கூப்ட்டு விஷயத்தை சொன்னா வந்து சுத்தம் பண்ணிடா போறேன் இதுக்கேன் மா அழறீங்க?"

"இல்லடிமா, நீ போய் என்னுடைய..."அவரால் சொல்ல கூட முடியவில்லை," ஐயோ அழாதீங்க மா ! இதுவும் என் வேலை  தான். வாங்கற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை பார்க்கணும் இல்லையா ! இருங்க சுத்தம் பண்றேன்" என்று உள்ளே சென்று  தண்ணீர் விளக்குமாறுடன் வந்து சுத்தம் செய்ய இறங்க, அப்போது தான் குளித்து விட்டு புத்தம் புது மலராய் வந்த  எயினி. கமலம் சுத்தம்  செய்வதை கண்டு அவளுக்கு கொமட்டிக் கொண்டு வர வெளியே சென்று வாந்திய எடுத்துவிட்டாள்.

கண்கள் கலங்க, வயிற்றை பிரட்டி எடுத்த வாந்தியில் வயிறு கொஞ்சம் வலிக்க, காற்றை சுவாசித்தபடி நின்றாள். வேலை முடிந்து கமலம் வெளிய வர அவரைப் பிடித்துக் கொண்டு, "எப்படிக்கா இதெல்லாம்  உங்களால முடியிது. கொஞ்ச நேரம் நின்ன எனக்கே  வாந்தி வந்திடுச்சி,நீங்க சுத்தம் வேற செஞ்சிருக்கீங்க, கிரேட் கா நீங்க"எனப் பாராட்டு பத்திரம் வாசித்தாள்.

"என் வேலைய தானமா செஞ்சேன். இதுல என்ன கிரேட்?" சாதாரணமாக மொழிய, " வேலையா இருந்தாலும் அடுத்தவங்களோட... சுத்தம் பண்றதுக்கு எவ்வளவு  பொறுமை சகிப்பு தன்மைவேணும்.  நீங்க பண்றது பெரிய வேலைக்கா" என்று புகழ்ந்தாள்.

"இதெல்லாம் பொதுவா பொண்ணுங்களுக்கு இருக்கிறது தான்.  ஆனால் சிலர்  அதை  உணரல. சோத்துல  கை வைக்கும் போது தான், பெத்த குழந்த  குழந்தை ஆய் போகும் உடனே அவ   சாப்பிடாம அப்படியே சோத்தை போட்டுட்டு  குழந்தை சுத்தம் பண்ண போயிடுவா ! அது போல இதுவும்" என்றிட, "ஆனா அவங்க உங்க அம்மா இல்லையே !" எனவும் சிரித்தவர், "எங்க அம்மா  எனக்கு இந்தமாறி வேலைய என் பொண்ணுக்கு குடுக்க கூடாதுனு முன்னாடியே செத்து போச்சி,  அதுதான் அவங்களுக்கு பண்ண வேண்டியத இங்க இருக்கிறவங்களுக்கு பண்ணிட்டு இருக்கேன். இங்க வந்தவங்க எல்லாம் நம்மல நம்பி வந்தவங்க தான், இங்கயாது நம்மல கவனிச்சி , அக்கறை காட்ட மாட்டாங்களா  ஏங்கற இந்த மனுஷன்களுக்கு இதை செய்றதுல என்ன வந்திட போகுது?" புன்னகையுடன் சொல்லி விட்டு சென்றார்.

அவரை வியப்பாக பார்த்தவர், தன்னை சுய அலசல் செய்தாள்.


© All Rights Reserved