...

34 views

தெய்வம் தந்த சொந்தமா - 1

அத்தியாயம் - 1

சர்வேஸ்வரன் அந்த நூலகத்துக்கு உள் நுழைய அங்கிருந்த அனைவரும் தலை நிமிர்ந்து அவனைப் பார்த்துப் புன்னகை சிந்த, ஒருத்தி மட்டும் முகம் சுருக்கி கண்ணில் கோபத்தை தேக்கி அவனை முறைத்து இருந்தாள்.

சர்வா பல் தெரிய சிரிக்க, அவனின் வசீகர புன்னகையை உள்ளே ரசித்தவள், வெளியில் முகத்தை மாற்றாது அப்படியே பார்த்து அவனை முறைத்து வைத்தாள்.

சர்வா அவனுக்குப் பிடித்த புத்தகத்தை எடுத்து அதைப் பற்றி விவர புத்தகத்தில் குறிப்பிட்டு விட்டு அவனின் ஜன்னல் ஓர இருக்கை சென்று அமர்ந்தான். ஜன்னல் வழியே வெளியே தெரிந்த காட்சிகளைக் கண்டவனின் மனது புத்துணர்வு பெற்று இருந்தது.

சர்வா தினம் வருவதே இதற்குத் தான், இந்த இயற்கையை ரசிக்கத் தான்.! உடலை வருடும் குளிரும், மனதை வருடும் இயற்கையும், கண்ணுக்கு எட்டிய தூரம்வரை மலையும் அதைத் தழுவும் பனியும் என அவன் ரசிக்க ஆயிரம் காட்சிகள் அங்கே.! அத்துடன் இலவச இணைப்பாக வாசிப்பும் ஒரு குவளை மசாலா தேநீர் என அவனின் பகல் பொழுது இனிமையாகக் களிந்தது.

சர்வா அவன் கையில் இருந்த புத்தகத்தை வருடிப் பார்த்தான். ஜேன் ஆஸ்டனின் எழுதிய 'சென்ஸ் அண்ட் சென்சிபிலிட்டி' என்னும் காதல் கதை. உலகின் தலை சிறந்த காதல் கதைகளில் இதுவும் ஒன்று. நாயகி மரியன்னே டாஷ்வுட் மற்றும் நாயகன் கர்னல் பிராண்டன் இரு மாறுபட்ட குணாதியங்கள் கொண்டவர்களின் காதல் கதை. காதல் எதிர்பாராத விதமாக யாருக்கும் பூக்கக்கூடும் என்பதையும், மகிழ்ச்சியைக் கண்டறிவதற்கு வயது ஒரு தடையல்ல என்பதையும் இந்தக் கதை கற்றுக்கொடுக்கிறது.

புத்தககுறி கண்டறிந்து புத்தகத்தைத் திறந்தவன் வாசிப்பை தொடங்கி இருந்தான். கதையின் ஒரு இடத்தில் மரியாவை பிராண்டன் அவனின் இல்லம் அழைத்துச் செல்வது போலவும், மரியா அதைக் கண்டு ரசிப்பது போலவும் காட்சிகள் வர, சட்டென அவன் ஞாபக அடுக்குகளிலிருந்து அவனது மோனா எட்டிப் பார்த்தாள்.

அவனும் கடந்த காலத்தில் ஒரு நாள், உரிமையாக அவளின் கைப்பிடித்து, காதலோடும், ஆயிரம் ஆயிரம் காதல் கனவுகளோடும், அவர்கள் வாழப் போகும் வீட்டை அவளுக்குக் காட்டி இருக்கிறான். எத்தனை அருமையான நினைவு அது? காதலும் கனவும் நிறைவேறாது போய் இருந்தாலும், அந்த நாளை? அவளோடு செலவழித்த பொக்கிஷ பொழுதுகளை, முதல் காதலின் நினைவுகளை நினைத்து மென்னகை உதிர்த்து இருந்தான். இதழோடு கண்களும் கண்ணீரை புத்தகத்தில் உதிர்த்து இருந்தது.

“சர்வா. டீ ஆறுது…” கரமாகக் குரல் வரவும், சிந்தைனையில் மூழ்கி இருந்தவன் நிமிர, அவன் எதிரில் அதே கடுக்கடு முகத்துடன் நின்று இருந்தாள் சக்தி.

“தேங்க்ஸ்” சர்வா சொல்ல,

“என்ன தேங்க்ஸ்? எழுந்து வெளிய போங்க.”

“முடியாது.”

“அப்ப டீயை கொடுங்க.”

“என்னைப்பார்த்தா டீக்கு புக் தொட்டு தின்னுற மாதிரி இருக்கா உனக்கு?”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. இது என் லைப்ரரி, இங்க நான் சொல்றதை நீங்கச் செய்து தான் ஆகனும். செய்ய முடிஞ்சா வாங்க, இல்லையா வர வேண்டாம். இங்க யாருக்கும் எந்தக் கஷ்டமும் இல்ல.” சக்தி சொல்லவும், எழுந்து வெளியே சென்று இருந்தான்.

அவன் வெளியே வரவும், அவன் அருகில் புன்னகையுடன் வந்து நின்றான் ராம்.

“தினம் திட்டு வாங்கனுமா அண்ணா? அக்காவைப் பத்தி தான் உங்களுக்குத் தெரியுமே?”

“உங்க அக்காவுக்கும் தான் என்னைத் தெரியும். ஆனா தினம் என்கிட்ட கத்துறா”

“அதுக்கு உலகமே இந்தப் புத்தகம் தான். சரியான புத்தகப்பேய்.” ராம் சொல்லவும் சர்வா முகத்தில் புன்னகை.

“நேத்து சொல்லிக்கொடுத்த கெமிஸ்ட்ரி படிச்சியா? எதுவும் சந்தேகம் இருக்கா?”

“அதெல்லாம் எதுவும் இல்ல அண்ணா. படிச்சுட்டேன். இன்னிக்கி வந்து உங்களுக்கு எழுதிக் காட்டுறேன்.”

“இன்னிக்கி வேண்டாம் ராம். நாளைக்கு வா. வெளிய சாப்பிட்டு, லாங் டிரைவ் போகப் போறேன்.”

“ஓகே அண்ணா. நான் போய் விட்ட இடத்திலிருந்து படிக்கிறேன்.”

“நாவல் படிக்க என்ன ஆர்வம்? ஓடு.” சர்வா சொல்லவும் உள்ளே ஓடி இருந்தான்.

மதியம் 12.45 வரை அங்கே இருந்தவன் வாசிப்பை முடித்து நிமிர, நூலகமே காலியாக இருந்தது. சர்வா எழுந்து, புத்தகக் குறிப்பில் பக்கங்களைக் குறிப்பிட்டு, அவனின் கையெழுத்தும் இட்டு, புத்தகத்தை உரிய இடத்தில் வைத்து விட்டு, வெளியே கிளம்ப, சக்தி வாசலில் அமர்ந்து உணவைப் பிரித்துக் கொண்டு இருந்தாள். அவள் முகத்தில் இருந்த ரசிப்பும், கண்ணில் தெரிந்த ஒளியும் சர்வாவை உசுப்பி விட, மெல்ல அவள் அருகில் போய் நின்றான்.

“என்ன வேணும்?”

“என்ன சாப்பாடு சக்தி?”

“கொஞ்சம் கூட நாகரிகமே இல்ல தானே உங்களுக்கு?”

“ப்ச்… உன் கண்ணில் இருந்த ஆர்வம் பார்த்துக் கேட்கத் தோணுச்சு கேட்டேன். ஆனாலும் இந்தக் கம்பஞ்சோறுக்கு இத்தனை பில்ட்அப் கொடுத்து இருக்க வேண்டாம்.”சர்வா சொல்லவும், சக்தி முறைத்து,

“கிளம்புங்க சார். பசிக்குது… என் மூடை கெடுக்காத்தீங்க.”

“சாரி. என்ஜாய் யூர் மீல்.” சர்வா நகர, சக்தி கம்பு சாதம் வைத்து அதில் சூடான கறி குழம்பை ஊற்றிச் சாதத்தில் கலந்து வாயில் வைத்துக் கண்மூடி அனுபவித்து இருந்தாள். காரில் அமர்ந்து இந்தக் காட்சியைக் கண்டவனுக்கு வாயில் எச்சில் ஊறியது.

இல்லம் வரவும் அவனுக்காகச் சிக்கன் பிரியாணி, இறால் வறுவல் எனச் சமையல் தயாராக இருக்க, அதில் எல்லாம் விருப்பம் போகாது மனம் கம்பஞ்சோறு கேட்க, புன்னகைத்து கொண்டான் சர்வேஸ்வரன். உணவை முடித்துக்கொண்டு படுக்கை அறைக்கு வந்தவன் பால்கனி சென்று அமர்ந்து இருந்தான்.

அவனுக்கு அலைபேசி ஒலி எழுப்பி, குறுஞ்செய்தி வந்து இருப்பதை சொல்ல, அலைபேசி தொடுத்திரையில் போக்கை வாயுடன் சிரித்தான் வேலன். நிலா - முகில் இருவரின் மகனான வெற்றி வேலன். அவன் சிரிப்பில் சர்வாவின் முகமும் மலர்ந்து போக, கீழே நிலா செய்தி அனுப்பி இருந்தாள்.

வரும் வாரம் வெற்றிக்கு மொட்டை அடித்துக் காதுக்குத்த போவதாகவும், முடிந்தால் விஷேசத்தில் கலந்துக்கொள்ளுங்கள் என நிலா அன்பாய் அழைத்து இருந்தாள். அவளின் நட்பில் மனம் நிறைந்தாலும், இன்னும் அவனுள் தயக்கங்கள் மீதம் இருந்தது.

வெற்றியைக் கண்ணில் நிறைந்தவன், அவன் தந்தைக்கு அழைப்பு கொடுத்தான். இரண்டாம் சத்தத்தில் எடுத்து இருந்தார்.

“ சர்வா எப்படிப்பா இருக்க? சாப்பிட்டியா? உங்க அம்மா உனக்குப் பிடிச்ச எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு வைச்சு இருக்கா, பையனுக்குப் பிடிக்குமேன்னு இப்ப தான் உன்னை நினைச்சேன். நீயே லைன்னில் வந்துட்ட…”

“ நான் இங்க பிரியாணி சாப்பிட்டேன். நீங்கச் சாப்பிடுங்கப்பா. நான் நல்லா இருக்கேன். நீங்களும் அம்மாவும் எப்டி இருக்கீங்க?”

“நாங்க நல்லா இருக்கோம் சர்வா. நீ உடம்பை பர்த்துக்கோ கண்ணா…”

“சரிப்பா… அப்பா… நிலா மகனுக்குக் காதுகுத்தி மொட்டைப் போடப் போறாங்க. உங்களால முடியும்னா… நேரம் இருந்தா ஒரு முறை பார்த்திட்டு வாங்கப்பா. நிலா எனக்கு மெசேஜ் அனுப்பி இருக்கா”

“சரி சர்வா. நான் செந்தில்கிட்ட பேசிட்டு போய்ட்டு வரேன். நீ அம்மா கூடவும் ஒருமுறை பேசுப்பா.”

“போங்கப்பா… ஃபோன் பண்ணா உடனே எப்ப வர, கல்யாணம் பண்ணிக்க இதான். என்னால முடியாது.” சர்வா மறுக்க,

“அம்மா அப்படி என்னப்பா தப்பா கேட்டா? இன்னும்…”

“ நான் வைக்கிறேன்.” சொன்னவன் அழைப்பை முடித்து இருந்தான். ஏனோ அவன் மனதை அவனால் கூடப் புரிந்துகொள்ள முடியாத நிலை.

நிலா அவனின் மோனா. முன்னால் காதலி, இப்போது அவனை முற்றும் அறிந்த தோழி, அவளின் மீது இவன் கொண்ட நேசம் மாறாது என்றாலும் அதை அவளிடம் பகிர முடியாத நிலை.

அவள் வாழ்வில் பெரும் புயல் வீசி ஓய்ந்து, இப்போது தான் சுகமாய் இருக்கிறாள். அவளை அன்போடும், காதலோடும் தாங்க அவளின் கணவன் முகிலினியன், அவர்களின் காதலுக்கும் அன்புக்கும் சாட்சியாக வெற்றிவேலன் என நிலா நிறைவாகத் தான் இருக்கிறாள். அதைக் கண்டு இவனுக்கும் மகிழ்வு தான். பொறாமையோ, கோபமோ, வருத்தமோ கடுகளவும் இல்லை தான். ஆனாலும் இந்த மனம் எதையோ இழந்து, எதையோ தேடி அலைகிறது.

தொழிலிலிருந்து விலகி, நண்பனின் விருந்து இல்லத்தில் வந்து முடங்கி ஒன்றரை வருடங்கள் முடிந்து விட்டது. இன்னும் அவனால் அவனின் மன சோர்வை போக்க முடியவில்லை. என்ன செய்தால் தீரும் இந்த வலி? இப்படியே சோர்ந்து, அழிந்து போவது தானோ விதியென மனம் வருந்தி அமர்ந்து இருந்தான்.

மாலை மணி நான்கை நெருங்க, இருக்கையில் அமர்ந்து வாசிப்பில் இருந்தவன் எழுந்து அவனைச் சுத்தம் செய்து கொண்டு வெளியே சென்றான். அந்த நேரத்திற்கே கட்டையைப் போட்டு நெருப்பு மூட்டி இருந்தனர். மெல்ல அதன் அருகில் சென்று அமர்ந்தவனுக்கு சுந்தர் தேநீர் கொடுக்க, புன்னகை முகத்துடன் வாங்கி கொண்டான்.

“ஏன் தம்பி ராத்திரிக்கு உங்களுக்கு என்ன செய்யட்டும்?” சுந்தர் கேட்க,

“உனக்குப் பிடிச்ச அக்கி ரொட்டி செய்யேன்.” சர்வா கூறவும்,

“அதை நாளைக்கு செய்யுறேன். இப்போ பஞ்சு போலத் தோசை விட்டுத் தரேன். மதியம் பிரியாணி சாப்பிட்டு, உக்கார்ந்தே இருந்து இருக்கீங்க, ரொட்டி வேண்டாம் தம்பி.”

“முடிவு பண்ணிட்டு வந்து என்கிட்ட கேட்பீங்களா சுந்தர் நீங்க?” சர்வா எந்தக் கோபமும் இல்லாது புன்னகை முகமாகக் கேட்க,

“ அதெல்லாம் இல்ல தம்பி. உங்களுக்கு ரொட்டி தான் வேணும் சொன்னா அதையே செய்யுறேன். உங்களைப் பத்திரமா பார்த்துக்க சொல்லி விமல் தம்பி சொல்லி இருக்காரு, அதான் கேட்டேன்.”

“உங்க விருப்பம்போல எதை வேணாலும் செய்யுங்க. இன்னிக்கி சாப்பிட வெளிய போகனும்னு இருந்தேன்… இப்ப மனசே சரியில்ல.”

“உன்கிட்ட ஒன்னு கேட்டா தப்பா நினைக்கக் கூடாது…” சுந்தர் தயங்கி கேட்க,

“கேளுங்க சுந்தர்… இதென்ன தயக்கம் என்கிட்ட?”

“உங்களுக்கு அப்படி என்ன தம்பி பிரச்சனை. விமல் தம்பி சொன்னவரை நீங்கப் பெரிய கோடீஸ்வரர், அம்மா அப்பாக்கு ஒரே பையன். பெரிய படிப்பு, பெரிய தொழில் செய்யுறீங்க. ஆனா அதுக்கான சந்தோசமே இல்லையே தம்பி? உங்களுக்கு என்ன குறை? ஏன் எதையோ இழந்த மாதிரி இருக்கீங்க?”

“எனக்குக் குறை எல்லாம் எதுவும் இல்ல சுந்தர். சின்ன இழப்பு தான் காதல் தோல்வி. அதுவும் என்னை என் மோனா லவ் பண்ணவே இல்லன்னு தெரியாம ஒருதலையா காதலிச்சு, அதுக்கு பிறகு வந்த காதல் தோல்வி.”

“ சரியா புரியலையே தம்பி.”

“ மோனா என் அப்பாவோட ஃப்ரெண்ட் பொண்ணு, என்கிட்ட தொழில் கத்துக்க வந்தா, நானும் கத்துக் கொடுத்தேன். ரொம்ப திறமையான பொண்ணு, சத்தமா கூடப் பேசத் தெரியாது அவளுக்கு, கோவமே வராதா இவளுக்குன்னு தோணும் எனக்கு, அவ அமைதி தான் என்னை ஈர்த்தது. நான் என் காதலை அவளுக்குச் சொல்றதுக்கு முன்னாடி, வீட்டில் எங்களுக்குக் கல்யாணம் முடிவு பண்ணிட்டாங்க. எங்களுக்கு நிச்சயம் நடந்தது, கல்யாணத்துக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடி அவளைக் காணோம். அப்புறம் நான் அவளைப் பார்க்கும்போது இன்னொருத்தர் மனைவியா இருந்தா…”

“தம்பி… என்ன சொல்றீங்க? உங்க மேல அந்தப் பொண்ணுக்கு விருப்பம் இல்லையா? நிச்சயம் வரை எதுவும் ஏன் சொல்லல?”

“அது அவ சூழ்நிலை சுந்தர். மோனா மேல தப்பே இல்ல. இப்படியொரு நிலை வந்தா எந்தப் பொண்ணும் இதைத் தான் செய்வா.” சர்வா கூற, சுந்தர் அவன் முகம் பார்க்க, புன்னகைத்தவன், நிலா பற்றிய விவரங்களை எல்லாம் கூற, சுந்தர் அதிர்ந்து போய் இருந்தார்.

“பாவம் தம்பி அந்தப் பொண்ணு, தவிச்சு போய் இருக்கும் தானே?”

“ ஆமா… என்கிட்ட சொல்லி இருந்தா, அவளை இவங்க கண்காணாத இடத்துக்குக் கூப்பிட்டு போய் இருப்பேன். என் மோனாவை சந்தோசமா என் நெஞ்சில் தாங்கி இருப்பேன். அவ சொல்லவே இல்ல சுந்தர் அதில் எனக்கு அவ மேல பயங்கர வருத்தம்.”

“இப்ப அவங்க எப்படி இருக்காங்க?” சுந்தர் கேட்கவும், சர்வேஸ்வரன் முகம் எல்லாம் பிரகாசிக்கப் புன்னகைத்து இருந்தான்.
“ராணி போல இருக்கா, அவளைக் கண்ணில் வைச்சு தாங்குற புருஷன், அழகான பையன், அன்பான அண்ணன், ஆதரவான அண்ணி, அக்கறையான குடும்பம். நிறைவா இருக்கா சுந்தர். நிலா புருஷன் முகில் இருக்கான் பாருங்க, அவனைப் போல அன்பான ஒருத்தனை உங்களால பார்க்கவே முடியாது. நிலாவை குழந்தைபோலப் பார்த்துப்பான். அவனுக்குப் பொக்கிஷம் மாதிரி அவ, அவங்க ரெண்டு பேருக்கு நடுவிலும் இருக்கிற புரிதலும், காதலும் பார்க்கவே அவ்ளோ அழகா இருக்கும்.”

“நிலாமா சந்தோசமா தானே தம்பி இருக்காங்க. உங்களுக்கும் அதில் சந்தோசம் தான். அப்புறம் ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்காம இப்படி தனியா இருக்கீங்க? தொழில், பெத்தவங்களை எல்லாம் விடக் காதல் தோல்வி பெருசா தம்பி?”

“அவளுக்கும் எனக்கும் மூணு வருஷ பழக்கம். அதில் ஆறு மாசம் எங்க கல்யாண பேச்சில் கடந்தோம். எனக்கு அவ சம்மதம் சொன்னது அவ அப்பாவுக்காக, அவர் ஆசைக்காக, என்னை நேசிச்சு இல்ல. ஏன், அவ கஷ்டத்தைக் கூட என்கிட்ட பகிர முடியாத அளவுக்குத் தான் நான் அவகிட்ட நடந்து இருக்கேன். என்மேல நம்பிக்கையே இல்ல தானே? நேசிச்ச நான் அவளுக்கு நான் இருக்கேன்னு நம்பிக்கை கொடுத்து இருக்கனும் தானே? ஒரு வாரப் பழக்கத்தில் முகில் கொடுத்த நம்பிக்கையை என்னால ஏன் தர முடியல? நிலாவை நான் இழந்துட்டேன் சுந்தர். என்னோட காதல் அவளுக்கு எதையுமே கொடுக்கல. அந்தக் குற்ற உணர்வு என்னைக் கொல்லுது. கையில் இருக்கும்போது அவளையும் அவ உணர்வுகளையும் பாதுக்காக்க தெரியாத என்னை நினைச்சு எனக்கே வெறுப்பா இருக்கு. என் கனவெல்லாம் என் அலட்சியத்தால் நிறைவேறாம போய்டுச்சு சுந்தர். என்னால அதிலிருந்து மீள முடியல.”

“நிலாமா அவங்க தங்கச்சிக்காகச் சொல்லாம இருந்து இருப்பாங்க தம்பி. அப்பாக்காகப் பண்ணாலும், தனக்கு பிடிக்காத ஒருத்தரை எந்தச் சுய அறிவு உள்ள பொண்ணும் கல்யாணம் செய்துக்க மாட்டா, அந்தச் சூழ்நிலையில் உங்ககிட்ட சொல்ல முடிஞ்சு இருக்காது. நீங்க எதையும் தப்பா யோசிச்சு மனசை கலங்க வைக்காதீங்க தம்பி.”

“தாங்க்ஸ் சுந்தர்.”

“ நீங்க ரெஸ்ட் எடுங்க நான் சமையலை பார்க்கிறேன்.” சொல்லிவிட்டு சுந்தர் உள்ளே செல்ல, சர்வாவின் அலைபேசி இசைத்தது. முகில் என்ற பெயரைத் திரையில் கண்டதும் சர்வா ஆச்சரியமாக அழைப்பை எடுத்து இருந்தான்.

© GMKNOVELS