...

11 views

அஞ்சு ரூபா பாட்டி

குறுங்கதை :4

வீடுகொள்ளா சனமும்.. வாசல் கொள்ளா வாகனமும் நின்றிருக்க..

அதுவரை வீட்டிற்கு முன்புறம் உள்ள முகப்பு பகுதியில் தனக்கென தானே அமைத்துக்கொண்ட ஒரு குடிசைக்குள் வசித்திருந்த அந்த கிழவி இன்று அந்த வீட்டின் நடு முற்றத்தில் படுத்திருந்தாள்..

கோடை.. வாடை என வெயிலுக்கும் மழைக்கும் அந்த குடிசையை விட்டு வெளியேறாத அந்த கிழவி இன்று நடுவீட்டில் படுத்திருக்கிறாள்..

அவளை சுற்றிலும் அவளுடைய மகள்கள் மகன்கள் மருமகள்கள் பேரன் பேத்திகள் என எல்லோரும்
அவளை பிரிந்த சோகத்தை
அனுபவித்துக்கொண்டிருந்தனர்..

தனக்கு தேவையான எதற்காகவும் அடுத்தவரை எதிர்பார்க்க கூடாது என்பதில் மிக தெளிவானவர் என
யார் யாரோ அந்த கிழவியை பற்றி புலம்பிக்கொண்டிருந்தனர்..

நம்முடைய பழக்கமே அதானே
யாராவது இறந்துபோய்விட்டால் தான்..அவர் அப்படி இருந்தார்.. இப்படி வாழ்ந்தார் என்று பேசுவோம்..

உயிரோடு இருக்கும் போது..
அவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்..
அவர்களுக்கு என்ன தேவையென்று எதுவும் யோசிக்ககூட மாட்டோம்

ஆனால்..
அந்த குடிசைக்குள் நிறைந்து கிடக்கும் பனை ஓலையும்..
அவள் பின்னி முடிக்காத அந்த ஓலை கூடைகளுக்கும் தான் தெரியும்.. அவள் எத்தனை பெரும் சுயமரியாதைகாரி என்று..

தன் கணவனுக்கு பிறகு தன் தேவைகளுக்காக ஒருபோதும் யாரிடமும் கை நீட்டகூடாதென்பதில் அவ்வளவு பிடிவாதம் அவளுக்கு..

வாயோதிகம் தன் முதுகை
வளைத்த பின்பு
தான் பெற்ற பிள்ளைகளுக்கு தான் ஒரு சுமையென இருந்து விடக்கூடுமென்று..

இத்தனை காலம் தனக்கே தனக்கான ஒரு இருப்பிடத்தை உருவாக்கி கொண்டு தள்ளியே இருந்துவிட்டாள்..

அவளுக்கு வழித்துணையாய் ஒரு ஊன்று கம்பு போதுமானதாக இருந்தது..

அவள் செய்து கொடுக்கும் ஓலை கூடைகளுக்கு பதிலாக கிடைக்கும் பணத்தில் தன் பேரன் பேத்திகளுக்காக அவ்வப்போது அங்காடி வாங்கிக்கோங்க என ஐந்து ரூபாய் கொடுப்பாள்..


பக்கத்து தெருமுனையில் இருக்கும் கடைக்கு தனக்கு தேவையான பொருள் வாங்கி தரும் சிறுவர்களுக்கும் கையோடு ஐந்து ரூபாய் கொடுத்துவிடுவாள்..

அவள் தரப்போகும் ஐந்து ரூபாய்க்காக சிறுவர்களில்
யாரை கூப்பிட்டாலும் நா.. நீனு போட்டி போட்டுக்கொண்டு ஒடி வருவார்கள்..

அதனாலேயே அந்த பாட்டிக்கு
அஞ்சு ரூபா பாட்டி னு பேரு வேற..

இனி அந்த சிறுவர்களின் உதவி
அந்த பாட்டிக்கும்.. அந்த பாட்டி கொடுக்கும் அஞ்சு ரூபா அந்த சிறுவர்களுக்கும் கிடைக்க போவதில்லை..

தன் இறுதி சடங்கிற்கு தேவையான
பணத்தையும் தன் சேலை முந்தானையில் சேமித்து வைத்துவிட்டு..

இதோ...

அந்த கிழவிஅவளுடைய ஊன்று கம்புக்கு விடைக்கொடுத்து மீண்டும் தன் கிழவனின் கரங்களை பிடிக்க
புறப்பட்டு விட்டாள்.... ✍️


© sha💕jan