...

36 views

எனக்கென உன்னைத் தந்து - 4
அத்தியாயம் - 4

தேனிலவு முடித்து வந்த நாள் முழுவதும் இருவரும் தூங்கி ஓய்வு எடுக்க, அடுத்த நாள் காலையில் நர்மதா வேலைக்கு கிளம்பி இருந்தாள்.

“எனக்கு இன்னிக்கி ஒரு நாள் லீவ் இருக்கு நம்மு, உனக்கு இல்லையா?” அகிலேஷ் கேட்க,

“எனக்கும் இருக்கு தான். ஆனா, லீவ் நாளோட வேலையும் இருக்கு. என் டீம் எப்ப எதை செய்வாங்கன்னு தெரியாது. அதான் கிளம்பிட்டேன்.” நர்மதா சொல்ல,

“சரி, நான் இன்னிக்கி வீட்டில் இருந்தே வேலை பார்க்கிற எண்ணத்தில் இருக்கேன். நான் வந்து உன்னை ஆபீஸில் விடவா?”

“கார் டிரைவ் பண்ண தெரியுமா உங்களுக்கு?” அவள் கேட்க,

“எனக்கு தெரியாது மா.”

“அப்ப வர வேண்டாம். இன்னிக்கி என் பிரெண்ட்ஸ் கூட டின்னர் இருக்கு. ஈவ்னிங் கிளம்பிடுங்க, நான் வந்து உங்களை பிக் பண்ணிப்பேன். ரெண்டாவது கப்போர்ட் உள்ள இன்னிக்கி நீங்க போட வேண்டிய ட்ரெஸ் இருக்கு. மறக்க கூடாது, வேலை இருக்குன்னு சொல்ல கூடாது. நான் தான் பிளான் ஆர்கனைஸ் பண்றேன்.”

“ஆங்… அப்புறம், மஞ்சு வருவா, அவகிட்ட உங்களுக்கு என்ன சாப்பிட வேணும்னு சொல்லிடுங்க. அம்மாவும் அப்பாவும் இன்னிக்கி வீட்டில் இருக்க மாட்டாங்க. சோ உங்களுக்கு மட்டும் தான். ஆர்டர் பண்ணி சாப்பிட போற ஐடியா இருந்தா, அவளை வீட்டை சுத்தம் பண்ணிட்டு போக சொல்லுங்க எதுவும் சமைக்க வேண்டாம்.” நர்மதா சொல்ல சொல்ல, அனைத்திற்கும் சரியென்று தலையாட்டி வைத்தான்.

அவள் கிளம்பி விட இவனும் குளித்து அவனுக்கு என்று ஒரு காஃபி போட்டு வந்து லாக் இன் செய்து இருந்தான். அவன் வேலையில் மூழ்கி இருக்க, வீட்டின் அழைப்பு மணி அடித்தது. அகிலேஷ் எழுந்து சென்று கதவை திறக்க, மஞ்சு நின்று இருந்தாள்.

“வாங்க…” அவன் அழைக்க மஞ்சு நேராக சமையல் அறைக்குள் நுழைந்து இருந்தாள்.

அகிலேஷ் அவன் படுக்கை அறைக்குள் சென்று இருக்க, மஞ்சு காலையில் நர்மதா போட்டு இருந்த பாத்திரங்களை கழுவி சமையல் அறையை சுத்தம் செய்து இருந்தாள். பின் அகிலேஷ் அறைக்கு முன் வந்து நின்றவள் அவனை அழைக்க தயங்க, அகிலேஷ் எதற்கோ தலை நிமிர்ந்தவன் சட்டென படுக்கையை விட்டு எழுந்து இருந்தான்.

“என்ன விஷயம் அக்கா? ஏன் இங்க நிக்கறீங்க.?”

“நர்மதா மேடம் உங்ககிட்ட கேட்டு சமைக்க சொன்னாங்க சார். உங்களுக்கு என்ன சமையல் வேணும்னு சொன்னா சமைப்பேன்.” மஞ்சு சொல்ல,

“எனக்கு சாப்பாடும் ரசமும் வேணும் கூடவே ரெண்டு முட்டை போட்டு ஒரு ஆம்லெட் போதும்கா. எனக்கு குடிக்க சுடு தண்ணி சூடு தரீங்களா நான் கிரீன் போட்டு குடிச்சுப்பேன்.” அகிலேஷ் சொல்ல, சரியென்று சென்று இருந்தாள்.

பத்து நிமிடத்தில் ஒரு கோப்பையில் சுடு நீர் வர, அதை தொடர்ந்து ரசத்தின் வாசம் வந்தது. முட்டை பொரித்து, சாதமும் செய்து வைத்தவள். வீட்டை துடைக்க தொடங்கி இருந்தாள். மீண்டும் அவன் முன் அவள் தயங்கி நிற்க, அகிலேஷ் இம்முறை எழுந்து ஹால் சென்று இருந்தான். வேலையை முடித்தவள் கிளம்ப வேண்டி அவன் முன் நிற்க,

“ வேலை முடிஞ்சா கிளம்புங்க அக்கா. நானே பரிமாறி சாப்பிட்டுப்பேன்.” அகிலேஷ் சொல்ல,

“ நான் வீட்டுக்கு போய்ட்டு வரேன் சார். ஒரு அரை மணி நேரமாகும் பிளீஸ்…” மஞ்சு தயங்கி கேட்க இவன் சரியென்று கூறி இருந்தாள். அவள் கிளம்பி செல்ல ஹாலில் அமர்ந்தே வேலையை பார்க்க தொடங்கி இருந்தான்.

மறுபடியும் வீட்டின் அழைப்பு மணி அடிக்க எழுந்து இவன் கதவை திறக்க, மஞ்சு குளித்து வந்திருந்தாள். அவள் மீண்டும் நேராக சமையல் அறைக்குள் நுழைய, இவன் மீண்டும் அவனின் வேலையில் கவனம் செலுத்த, உணவுகளை எடுத்து உணவு மேஜையில் வைக்க தொடங்கி இருந்தாள். அகிலேஷ் அதை கண்டு எழுந்து வர, உணவை பரிமாற தொடங்கி இருந்தாள்.

அமைதியாய் உண்ண தொடங்கியவன் தட்டில் கலவை காய்கறி பொரியலை மஞ்சு வைக்க, அகிலேஷ் அதையும் அமைதியாய் உண்டு இருந்தான். மஞ்சு அவன் உண்ட தட்டை எடுக்க வர,

“அக்கா நானே எடுப்பேன். நீங்க ஏன் இதெல்லாம் செய்றீங்க?”

“இல்ல சார் போன முறை நீங்க எடுத்த போதே மேடம் முறைச்சாங்க. என்கிட்ட கொடுங்க சார்.”

“தின்ன தட்டை கூட கழுவ முடியாத அளவுக்கு நான் சோம்பேறி இல்ல. நர்மதா எதுவும் சொல்ல மாட்டா, நீங்க கவலையை விடுங்க.” சொன்னவன் அவனே தட்டை எடுத்து சென்று சுத்தம் செய்து வைத்து இருந்தான்.

மஞ்சு பரிமாறிய பாத்திரங்களை எடுத்து வந்து கழுவ போட்டவள் அதை சுத்தம் செய்ய, அகிலேஷ் டிவியை போட்டு விட்டு அமர்ந்து இருந்தான். மஞ்சு மீண்டும் அவன் முன் தயங்கி நிற்க,

“சொல்லுங்க அக்கா…”

“வேற எதும் வேலை இருக்கா சார்?”

“வீட்டை சுத்தம் செய்ய சொல்லி மட்டும் தான் நர்மதா சொன்னா, மத்தபடி வேற எதுவும் சொல்லல, உங்களுக்கு வேலை அவ்ளோ தான்னா கிளம்புங்க அக்கா.”

“சார் என்னை அக்கான்னு எல்லாம் சொல்லாதீங்க பிளீஸ்.” மஞ்சு சொல்ல, அகிலேஷ் அவளை புரியாது பார்க்க,

“மேடமுக்கு உறவு முறை வெச்சு கூப்பிட்டா பிடிக்காது. அதான் சார்…”

“உங்களைப்பத்தி சொல்லுங்க மஞ்சு அக்கா.”

“நான், என் அப்பா, என் மகன் அவ்ளோ தான் சார் எங்க வீட்டில், கல்யாணமாகி, விவாகரத்தும் ஆகிடுச்சு. பையன் நாலு படிக்கிறான்.” மஞ்சு சொல்லி முடிக்க,

“அப்ப நீங்க எனக்கு அக்கா முறை தான். என் அக்கா வயசு தான் உங்களுக்கு, என்னால மரியாதை இல்லாம எல்லாம் பேச முடியாதுங்க அக்கா. நான் கோவைக்கு சொந்தக்காரன். மரியாதை எங்க இரத்திலேயே இருக்கு. அதனால என்கிட்ட இதை எல்லாம் சொல்லாதீங்க. அப்புறம் நான் உங்களுக்கு தம்பி வயசு. நீங்க என்னை தம்பின்னு கூப்பிட்டா மட்டும் பேசுங்க. இல்லையா என்கிட்ட நீங்க எதையும் சொல்லவும் வேண்டாம். கேட்கவும் வேண்டாம். சரிங்களா அக்கா?” அகிலேஷ் சொல்லி முடிக்க, மஞ்சுவின் கண்கள் கலங்கி போனது.

“ நான் வரேங்க தம்பி.” அவள் சொல்லவும் அகிலேஷ் சிரித்த முகத்துடன் அனுப்பி வைத்தான்.

மாலை அவன் ஆறு மணிக்கு நர்மதாவின் கட்டளைக்கு இணங்கி, குளித்து வந்து, அவள் சொன்ன உடையை எடுக்க, மெரூன் நிற சட்டை அவனை பார்த்து சிரிக்க, அகிலேஷ் பெருமூச்சு விட்டு இருந்தான். அவனுக்கு சுத்தமாய் பொருந்தாத நிறம் அது. இதுவரை அவன் அந்த நிறத்தில் வீட்டிற்கு போடும் பனியன் கூட எடுத்தது இல்லை. சட்டையை உள்ளே வைத்தவன் அவனுக்கு பிடித்த நீல நிற சட்டை அணிந்து, அதற்கு சாம்பல் நிற பண்ட் போட்டு தயாராகி இருந்தான்.

6.30க்கு வீட்டின் உள்ளே நுழைந்தவள் அவனை கண்டு முறைக்க,

“எனக்கு மெரூன் பிடிக்காது நம்மு, அதான் எனக்கு பிடிச்ச ப்ளூ.” அவன் சொல்லவும் இவளின் முகம் இறுகி போனது.

“நான் காலையில் உங்ககிட்ட என்ன சொன்னேன்? பார்ட்டி ஏற்பாடு செய்யுறது நான், எல்லாருக்கும் இன்னிக்கி ட்ரெஸ் கோட் மெரூன் தான். போய் சட்டையை மாத்துங்க.” நர்மதா சொல்ல,

“எனக்கு மெரூன் ஷர்ட் வேண்டாம்.”

“உங்களை நான் மாத்த சொன்னேன்.”

“என்னால முடியாது. இதான் எனக்கு பிடிச்சு இருக்கு.” அகிலேஷ் சொல்ல,

“அப்ப மாத்த முடியாது அப்படி தான?”

“ஏய்… நம்மு இதென்ன சின்னப்பிள்ளை மாதிரி, எனக்கு மெரூன் கலர் பிடிக்காதுமா பிளீஸ் என்னை வற்புறுத்தாம, நீ கிளம்பி வா போவோம்.” அகிலேஷ் சொல்ல,

அவளோ அசையாது நிற்க, அகிலேஷ் அதற்கு மேல் சொல்ல ஒன்றும் இல்லை என்பது போல அமர்ந்து விட, நர்மதா அறைக்கு சென்று குளித்து உடைமாற்றி அவளின் வேலைகளை பார்க்க தொடங்கி இருந்தாள். ஹாலில் அமர்ந்து இருந்தவன் எழுந்து வந்து படுக்கை அறையை பார்க்க, அவளோ நைட்டியை அணிந்து கொண்டு அவளின் மடிக்கணினி உடன் அமர்ந்திருக்க, அகிலேஷின் பொறுமை பறந்து இருந்தது.

“டின்னர் பார்ட்டி என்னாச்சு?”

“சட்டையை மாத்தினா இப்பவும் போலாம். இல்லையா மஞ்சு வருவா சமைக்க…”

“இதென்ன நர்மதா பிடிவாதம்? சட்டையில் என்ன இருக்கு?”

“அதே தான் நானும் கேக்கறேன். சட்டையில் என்ன இருக்கு? மாத்துங்க.”

“ ஒரு மணி நேரம் ஆகுமா பார்ட்டி போய்ட்டு வர? அதுக்கு எந்த சட்டையா இருந்தா என்ன நர்மதா?” அகிலேஷ் கேட்க, அவள் எதையும் சொல்லவில்லை.

உன்னோடு என் பேச்சு அவ்வளவு தான் என்பது போல அமர்ந்து விட்டாள். அவளின் அலைபேசியில் அவளின் நட்புகள் அழைக்க, அழைப்பை ஏற்று வந்துகொண்டு இருக்கிறோம் என்று நர்மதா பதில் கொடுக்க, அகிலேஷ் அவளின் பிடிவாதம் பார்த்து அதிர்ந்து இருந்தான்.

இறுதியாய் அவளின் பிடிவாதம் வென்று இருக்க, அகிலேஷ் தான் உடை மாற்றி இருந்தான். நர்மதா கிளம்பி வர அமைதியாய் அவளோடு சென்று அவள் ஆர்டர் செய்த உணவுகளை பெயருக்கு என்று உண்டு, அவளின் நண்பர்கள் உடன் அளவாய் கலந்துவிட்டு, இருவரும் சிரித்த முகத்துடன் விடைபெற்று இல்லம் வந்திருந்தனர். ஆனால் அகிலேஷ் அவளின் பிடிவாதத்தால் உடைந்து போய் இருந்தான். முதல் முறையாக அவனின் திருமண வாழ்வின் மீதான பயம் ஒன்று எட்டிப் பார்த்தது. அந்த பயத்தை அவனால் எளிதாய் கடந்திடவும் முடியவில்லை.

ஆர்த்தி குலதெய்வ கோவிலுக்கு சென்று வந்த நாளிலிருந்து எதோ யோசனையில் தான் கழித்தாள். தம்பியிடம் உன் இல்லற வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று நேரடியாய் கேட்டிட முடியாது என்பதால் அவனின் புலனத்தில் அவன் மாற்றும் புகைப்படங்கள், ஸ்டேட்டஸ் என்று பார்த்து அவளே சில யூகங்களை செய்து கொண்டு மனதை அமைதியாக்க போராடிக் கொண்டு இருந்தாள்.

கோவிலுக்கு செல்லும் வழியில் கார் பஞ்சராகி, பொங்கல் தெற்கில் விழுந்து, தேங்காய் கெட்டுப்போய் என எதுவும் நல்லதாய் நடக்கவே இல்லை. பொங்கல் தெற்கில் விழுந்த போதே பயந்து போனவள் கதறி தெய்வத்தின் முன் அழுது இருந்தாள். இதில் தேங்காய் கெட்டு போனதை பூசாரி சொல்லவும் அதிர்ந்து அமர்ந்து இருந்தாள். சதீஷ் தான் அவளுக்கு ஆயிரம் சமாதானம் சொல்லி அவர்களின் வீட்டுக்கு அழைத்து வந்து இருந்தான்.

தம்பி தேனிலவு செல்லும் செய்தி அவளுக்கு சற்று நிம்மதியை கொடுத்து இருந்தாலும், அவளின் உள் உணர்வு அவளுக்கு எதையோ சொல்லிக்கொண்டே இருந்தது. இன்னதுதான் என்று அறிந்து கொள்ள முடியாமல் ஆர்த்தி தவித்துக் கொண்டு இருக்க, அங்கே அவளின் எதிரில் வந்து அமர்ந்தான் சதீஷ்.

“டீச்சர் என்ன பண்றீங்க? என்ன பயங்கரமான யோசனை?” சதீஷ் கேட்க,

“அகிலுக்கு ஒரு ஃபோன் போடுங்கப்பா. அவனோட பேசி எப்படி இருக்கான்னு கேளுங்க.”

“என்னடி உன் தம்பிக்கு கல்யாணம் தானே நடந்து இருக்கு? அவன் ஒன்னும் நர்மதாக்கு சொந்தமான பொருள் இல்ல. உன் தம்பிக்கு, நீயே கூட கூப்பிட்டு பேசலாம்.” அவன் சொல்ல, இவளே அழைத்து இருந்தாள்.

நர்மதா செய்த வேலையில் கோவத்தில் அமர்ந்து இருந்தான் அகிலேஷ். அவர்கள் இருவரும் இல்லம் வரும் போது தான் நர்மதாவின் பெற்றோரும் இல்லம் வந்து சேர்ந்து இருந்தனர். அவர்களின் முன் இவன் கோபத்தை காட்ட முடியாது அமைதியாய் அறைக்குள் சென்றவன், சட்டையை கழட்டி எறிந்து விட்டு இலகுவான உடைக்கு மாறி பால்கனி வந்து அமர்ந்து இருந்தான். அவனின் அலைபேசியில் ஆர்த்தியின் பெயரை கண்டவன் பெருமூச்சை விட்டு அவனை சமன் செய்து கொண்டு அழைப்பை ஏற்று இருந்தான்.
© GMKNOVELS