...

22 views

அதிதி

© All Rights Reserved

"நீங்க எங்களோட வர மாட்டீங்களா...?"அவள் கழுத்தை கட்டிக் கொண்டு கேட்டாள் அதிதி.

தன் இதழ்களை கடித்து அழுகையை அடக்கியவள் தனக்கு வெகு அருகில் இருப்பவளின் முகத்திலிருந்த பிஞ்சு திராட்சை விழிகளையும் சிவந்த சிறிய ஜெர்ரி  இதழ்களையும் பார்வையிட்டு கொண்டே அவளுக்கு பதில் அளித்தாள்.

"என்னால உன்கூட வர முடியாது அதி !"என்றாள் அழுகையை உள்ளிழுத்தவாறு.
"ஏன்?"விவரமறியாது கேட்டது அந்த மழலை.

"ஏன்னா நான்..."என்று சற்று நிறுத்தியவள்" உன் அம்மா இல்லையே ! உன் கூட எப்படி வர முடியும்...?"என்றாள்.

"நீங்க தான் என்னைய  அம்மானு கூப்பிட சொன்னீங்க, அப்ப நீங்க எனக்கு அம்மா இல்லையா...?"

"உனக்கு அம்மாவா இருக்க ஆசை தான். ஆனா என்னால உனக்கு அம்மாவா இருக்க முடியாது"என்று  அடக்கி வைத்த கண்ணீரை வெளியே சிந்த,  அவள் கண்ணீரை தளிர் கரம் துடைத்து விட்டது.

"உன் அப்பா ஊருக்கு போகட்டும் , நீ என்னோட, என் கூட இருந்துடேன்"எனக் கேட்கவும் அம்மழலைக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

"அதிதி, டைம் ஆச்சு வண்டிலே ஏறு !"என அவன் கூறவும் அவசரமாக அவளது இரு கன்னத்திலும் முத்தங்களை அள்ளிக் கொடுத்து விட்டு காரில் ஏறிக் கொள்ள அவளை ஏக்கமாக பார்த்தாள் நதியா. 

"நதி ! ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட் மீ. எனக்கு அதிதி தான் உலகமே ! அவளையும்  என் கிட்ட இருந்து பறிக்க நினைக்கறது நியாயமா...?"
அவள் அமைதியாக இருந்தாள்.

"இன்னும் உனக்கு வருஷங்கள் ஓடிடல நதி. நீயும் உன் ஹஸ்பண்ட் சேர்ந்து பிளான் பண்ணுங்க... இல்ல... என்னை போல நீங்களும் அதிதி மாதிரி ஒரு குழந்தைய தத்தெடுத்த வளர்ங்க.

ஆனா ப்ளீஸ் அதிதிய  கேட்காத, என்ட இருந்து பிரிக்கணும் நினைக்காத... ஏற்கனவே  என் காதலை ஏத்துக்காத நீ  எனக்கு பெரிய வலி கொடுத்துட்ட, இப்போ அதிதியையும்  எங்கிட்ட இருந்து பறிச்சு என்னை அனாதையாக்கிட்டாத !

அதிதிய என்னால மாத்த முடியும். நீ உன்னை மாத்திக்கோ நதி. நான் வர்றேன்"என்று  அவனும் காரிலேறி கிளம்பிவிட்டான்.

கரு மேகங்கள் சூழ அவள் வாழ்க்கை இருண்டு விட்டது போல இருந்தது.அதே நேரம் அதிதி தன் வாழ்க்கையில் வந்த நாட்களை எண்ண, அக்கரு மேகங்கள் பொழியும் மழைச்சாரல் போல இருந்தது .

வறண்டு போன அவளது வாழ்நாட்களிலே  மகிழ்ச்சியின் ஊற்றாக வந்தவள் தான் அதிதி. அவள் யாரென தெரியாமல் அவளது வகுப்பில் மாணவியாக வந்தவள், பேசி பேசி தன்னை மயக்கியதை நினைக்க இதழில் மென்னகை பூத்தது.

"அம்மா இல்ல"என்று வாடிய முகத்துடன் சொன்னவளை பிள்ளை இல்லாத அவளோ வாரி அணைத்து "அம்மாவா நான் இருக்கிறேன்"என்று  சொல்ல பல முறை ஏங்கிருக்கிறாள்.

தாய் மகளென்று அந்தப் பள்ளியில் இருவரும் அன்பில் பிணைந்திருக்க, அவன் வருகை தான் அவளது நிதர்சனத்தை உணர்த்தியது .

அதிதியின் தந்தை என்று அவன் வந்த போது தன்நிலை என்னவென்று உணர்ந்தாள் பெண்ணவள். 

தன்னை ஒரு தலையாக  உருகி உருகி காதலித்த அவனை ' வேண்டாம் ' என்று மறுத்து விட்டாள் அன்று.  இன்று அவன் அதிதியின் தகப்பனாக வந்து நிற்க அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.

அவனது நலனை விசாரிக்க, காதல் நியாபகமாக திருமணம் செய்து கொள்ளாமல் அதிதியை தத்தெடுத்து  மகளாக வளர்ப்பதாக கூறியது நினைவில் வர நெஞ்சை அடைத்தது.

அதிதியை அவனிடமிருந்து  கேட்குமளவுக்கு அவர்களது அன்பு இருவரையும் பிணைக்க, அவனோ பயந்தான்.

நதியின் வாழ்க்கை அதிதியாலோ தன்னாலோ கெட்டு விடக் கூடாது என்று வேறு ஊருக்கு செல்ல  தீர்மானித்து விட்டு கிளம்பி விட, நதியாவால் அதிதியின் பிரிவை ஏற்றுக் கொள்ள முடிய வில்லை. குறுகிய நாட்களானாலும் கல்வெட்டுகளில் பதித்தது போல  அழியாத நினைவாகிப்போனாள்  இந்த அதிதி...