...

11 views

ரசிகை
சிந்துஜா...... அம்மாவின் குரல் அலாரம் அடித்தது. சுருக்கமாக கூப்பிட சொன்னா கேட்க மாட்டாங்க. சலித்து கொண்டே பெட்டை விட்டு எழுந்தாள்.

இன்னைக்கு எவ்வளவு முக்கியமான நாள். மறந்ததை நினைத்து தலையில் தட்டிக் கொண்டாள். அவள் மிகவும் ரசிக்கும் ஒரு கவிஞரை இன்று பேட்டி காண போகிறாள்.

அவன் ஒன்றும் புதியவன் இல்லை. கல்லூரி படிக்கும் போதே தெரிந்தவன் தான்.கலை நிகழ்ச்சி ஒன்றில் அவன் கவிதை படிக்க அவள் மட்டுமே கை தட்டியது அவன் கவனத்தை ஈர்த்தது. நிகழ்ச்சி முடிந்து அவனோடு ஒரு தேநீர் அருந்தி கொஞ்சம் பேசிவிட்டு பிரிந்தனர். அதுக்கு அப்புறம் இன்று வரை பெரிதாக ஒன்றும் தொடர்பு இல்லை.

இன்னும் அவனுக்கு நம் ஞாபகம் இருக்குமா?? கேள்வியோடு குளியலறை சென்றாள்.

அவசரமாக தயார் ஆகி டைனிங் டேபிள் வந்தால் செம டிபன். அவளுக்கு பிடித்த புட்டு சட்டென உதடு குவித்து விசில் அடித்து விட்டாள். அடுத்த நொடி "சிந்துஜா" என்ற அம்மாவின் கண்டன குரலில் ஒரு சின்ன நிலநடுக்கமே வந்தது. 'மா..சாரி மா' வார்த்தையாலும் கண்களாலும் கெஞ்சிய மகளை பார்த்து சிரித்து விட்டாள் மேகலை.

'இதுக்கு நீ புள்ளையாவே பொறந்து இருக்கலாம். ஆம்பள மாதிரி டிரெஸ்சு கண்ட நேரத்துல வேலை, போதாததுக்கு இந்த விசில் பழக்கம் வேற.' அம்மாவின் அர்ச்சனை அருமையான புட்டு இரண்டையும் ஒன்றாக சுவைத்து கொண்டே மொபைலில் சேய்தி அனுப்பி கொண்டிருந்தாள்.

அவசரமாக கிளம்பி தன் பெப் வண்டியில் கொஞ்சம் வேகமாகவே பத்திரிகை ஆபீஸ் வந்து சேர்ந்தாள். அதற்குள் ஒரு நலன் விரும்பி ஆசிரியர் கோபத்தை காதில் ஓதி விட்டு போனது.

சமத்தாக முகத்தை வைத்து கொண்டு உள்ளே செல்ல அனுமதி கேட்டு நுழையவும் கதவை இழுத்து அவன் வெளியே வரவும் தடுமாறி விழ போன அவள் தோள் பற்றி நிறுத்தினான் காலை முதல் அவள் மகிழ்ச்சிக்கு காரணமான கவிஞன் கதிர்.

அவன் முதுகின் பின் ஆசிரியர் முகம் தெரிய உணர்வுகளை அடக்கி அவனுக்கு வணக்கமும் நன்றியும் சொல்லி அவனை தாண்டிச் சென்று ஆசிரியர் முன்பு நின்றாள்.

இதயம் வேகமாக துடிக்கும் ஓசை அவள் காதுக்கே கேட்டது. வாசலில் யோசித்தவாறு நின்றவனை ஆசிரியர் 'வாங்க கதிர் பேட்டி எடுக்கப் போகும் மகாராணி வந்துட்டாங்க' விளையாட்டாய் அவர் பேசியதை மற்ற நேரத்தில் ரசிப்பவள் தான்....சொல்ல போனால் உரிமையோடு சரிசமமாய் பேசுவாள்.

இன்று வார்த்தையும் வரவில்லை விட்டால் போதும் என்று இருந்தது. நல்ல வேளை அவரும் மேலே பேசாமல் 'சார்க்கு ரொம்ப அவசரமா பாண்டிச்சேரி போகனுமாம். ஒன்னு பேட்டிய கார்ல போகும்போது வெச்சுகலாம் இல்லனா வேற நாள் பார்க்கலாம்னு சொல்ல அவரே நேர்ல வந்து இருக்காரு. மேடம் என்ன சொல்றீங்க ‌.' தகவலை கிண்டலுடன் சொல்லி முடித்தார்.

யோசிக்க நேரமில்லை. இன்று விட்டால் அப்புறம் எப்போ கிடைக்கும் இந்த வாய்ப்பு? ஒருவேளை கிடைக்காமல் வேறு யாரிடமாவது ஒப்படைக்க படலாம்.

சட்டென 'சார் நான் கூட போய் பேட்டி முடிச்சு பஸ்ஸில் ரிட்டர்ன் வந்துடறேன்.' இவள் பதிலை கேட்டதும் அருகில் நின்றவன் உடல் தளர்ந்து மூச்சு சீரானது. ஆசிரியரிடம் விடைபெற்று வெளியே வந்தவள் கார் சாவியை எடுத்து அவன் கார் அருகில் சென்ற போது தான் அவனை முழுவதுமாக பார்த்தாள்.

கவிஞனின் அடையாளம் இல்லாமல் வெள்ளை ஜீன்ஸ் கரும் பச்சை டீ சர்ட் கண்ணில் கூலர், வுட்லாண்ட் ஷு என ஒரு நடிகனை போல் இருந்தான். அவளையும் அறியாமல் முதல் முறையாக அவள் பார்த்த எளிய தோற்றம் வந்து போனது.


பயணத்தில் அவள் நிருபராக மாறி கேள்வி கேட்க அவன் கவிஞனாக பதில் சொல்லிக் கொண்டு வந்தான். வழியில் இருவரும் ஒரு உயர்தர உணவகத்தில் மதிய உணவை முடித்த போது கிட்டத்தட்ட அவள் பேட்டியும் முடிந்து இருந்தது.

மீதம் இருந்த தூரத்தை கடக்க அவன் காரில் பாடல் ஒலிக்கவிட இசையுடன் தொடர்ந்தது பயணம்.

பாண்டிச்சேரி பஸ் ஸ்டாண்டில் நிறுத்துமாறு அவள் சொன்னபோது. 'அதற்க்கு முன்னாடி நீங்க ஒருத்தர சந்திக்கனும்' என்றான்.
புரியாமல் அவள் விழிக்க மேற்கொண்டு எதுவும் பேசாமல் கார் சென்றது.

பெண்கள் விடுதி முன் அவன் காரை நிறுத்த. சற்று நேரத்தில் உள்ளே இருந்து வந்தாள் ஒரு வெள்ளை உடை தேவதை வெளியே வந்தாள். இவனை கண்டதும் அவள் முகம் மலர்ந்த விதம் அவர்கள் உறவை உறுதிப்படுத்தியது.

வந்தவள் கரம் பற்றி அவன் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்ல உடனே சிந்துவும் தன் வாழ்த்துக்களை தெரிவித்தாள்.

அவள் சிரித்த போது கன்னத்தில் விழுந்த குழியும். கருமையான விழிகளும் நெற்றியில் புரண்ட கூந்தலும் அவளே ஒரு கவிதை போல் இருந்தாள்.

அவனை கண்ட மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயிருந்தாள் கொஞ்சம் நேரம் பொறுத்தே‌ அவன் உடனிருந்த சிந்துவை கவனித்தாள். ஒரு கேள்வியோடு அவளை பார்க்க. சிந்து தான் யார் என அறிமுகம் செய்ய முயற்சி செய்யும் முன் அவன் 'இவள் சிந்து... என் முதல் ரசிகை' என்றான்.

தான் கேட்டது உண்மையா கற்பனையா என்று திகைத்து அவள் நிற்க. தேவதை அவள் கரம் பற்றி குலுக்கினாள். 'உங்களை பற்றி நிறைய சொல்லி இருக்கார். நான் உங்கள ஒருமுறையாவது பார்க்கனும் ஆசைப்பட்டேன்.
நீங்க அன்னைக்கு என்கரேஜ் பன்னதால தான் நிறைய எழுதனும்னு தோனுச்சுனு அடிக்கடி சொல்வார். ரொம்ப ரொம்ப சந்தோஷம் உங்கள பார்த்ததுல' தேவதை மூச்சு விடாமல் பேசினாள்.

அவள், அவன் மூலம் தெரிய விரும்பியதை தேவதை மூலம் தெரிந்து கொண்டாள். பஸ் ஸ்டாண்ட் வரும் வரை அவனுடன் எதுவும் பேசவில்லை. சென்னை பேருந்தில் அவள் ஏற போகும் நேரத்தில் அவன் கைகளை குலுக்கி நன்றி.... அனைத்திற்கும் என்றான்.

ஒரு புன்னகையை பதிலாக தந்து பேருந்தில் தனியாக இருந்த இருக்கையில் அமர்ந்தவளுக்கு விசில் அடிக்க தோன்றியது...
மெல்லிய விசில் ஒலியுடன் அவள் பாடிய பாடல் "சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே"

kumuda Selvamani
#கும்ஸ்


© Meera