...

35 views

எனக்கென உன்னைத் தந்து - 5
அத்தியாயம் - 5

“எப்படி இருக்க அகில்?”

“ம்ம்… நல்லா இருக்கேன் அக்கா.”

“என்னடா குரலே ஒரு மாதிரி இருக்கு? உடம்பு எதும் சரியில்லையா?”

“தலைவலி அக்கா. வேற ஒன்னும் இல்ல.”

“நர்மதா எங்க? அவ எப்டி இருக்கா? வேலைக்கு போக தொடங்கிட்டியா?”

“எதுக்கு இத்தனை கேள்வி? எனக்கு தலவலிக்குது அக்கா. நாளைக்கு பேசறேன்.” அகில் சட்டென அழைப்பை முடித்து விட, ஆர்த்தி கண் கலங்கி இருந்தாள்.

சதீஷ் அவள் பேசுவதை ஒலிபெருக்கியில் கேட்டு இருக்க, அவனும் அமைதியாய் அமர்ந்து இருந்தான்.

“எதோ பிரச்சனை தான் போலங்க. ஒருநாளும் அவன் இப்படி ஃபோன் வெச்சது இல்ல. பிள்ளைகளை கேட்காம, உங்களை கேட்காம, எனக்கும் பதில் சொல்லாம வைக்கிற பையன் இல்ல அவன். நம்ம ஒரு எட்டு பெங்களூர் போய்ட்டு வருவோமா?” ஆர்த்தி கேட்க,

“நீயா எதையாவது கற்பனை பண்ணிட்டு பேசாத ஆர்த்தி. அவனுக்கு உண்மையாவே தலை வலி போல, அங்க அவன் மாமியார் வீட்டில் இருக்கான். இப்ப நம்ம போறது சரி வராது. நான் மாமாக்கிட்ட சொல்றேன். அவரும் அத்தையும் போய்ட்டு வரட்டும். அப்புறமா நம்ம போவோம்.” சதீஷ் கூற,

“பொங்கல் தெக்கில் விழுந்த நேரத்தில் இருந்தே என் மனசு சரியில்லப்பா. சூது வாது அறியாத பையங்க அவன். எனக்கு என்னவோ அவனை இப்பவே பார்க்க தோணுது.”

“நாளைக்கு மதியம் வீடியோ கால் அடி. ஆபீஸில் தானே இருப்பான்? முகம் பார்த்து பேசு. இப்ப அழ கூடாது புரியுதா?” சதீஷ் சொல்லவும் ஆர்த்தி சரியென்று தலையாட்டி இருந்தாள்.

சதீஷ் கையோடு மாமனாரை அழைத்து ஒரு எட்டு சென்று பார்த்துவிட்டு வர சொல்ல, மருமகனின் வார்த்தைக்கு மறு பேச்சு பேச முடியவில்லை அவரால், அவர் சரியென கூறவும் இருவருக்கும் பயண ஏற்பாட்டை செய்து இருந்தான் சதீஷ்.

நர்மதா அறைக்குள் வந்தவள் உடைமாற்றி விட்டு வந்து அவன் பின் நிற்க, அகிலேஷ் அவளை முறைக்க, நர்மதா முகத்தில் அதற்கு எந்த வித எதிர்வினையும் இல்லை.

“எழுந்து உள்ள வந்தா தூங்கலாம்.”

“எனக்கு தூக்கம் வரல. நீ போய் தூங்கு.”

“அகிலேஷ் எதுக்கு இந்த கோவம் இப்ப? சட்டையில் கூட எனக்கு அனுசரிச்சு போக கூடாதா?”

“இதே கேள்வியை தான் நானும் கேக்குறேன். சட்டையில் கூட உன் விருப்பம் தான் நடக்கனும் இல்ல? ஏன் அனுசரிக்க உன்னால முடியாதா?”

“அகில் இது டின்னர் பார்ட்டி. என்னோட ஏற்பாடு. எல்லாரும் மெரூன் தான் போடணும் சொன்னது நான், நீங்களே அதை செய்யலன்னா என்னை எல்லாரும் என்ன நினைப்பாங்க?”

“அப்ப உனக்கு என் உணர்வு முக்கியம் இல்லையா நர்மதா?”

“இனிமேல் இப்படி எதையும் சொல்ல மாட்டேன் போதுமா?” நர்மதா கையெடுத்து கும்பிட்டு சொல்லவும், அகிலேஷ் எழுந்து சென்று படுக்கையில் படுத்து இருந்தான்.

நர்மதா அவனின் பின்னே அமர்ந்து மெல்ல அவன் தலை வருட, சட்டென அவன் திரும்பி பார்த்து முறைக்கவும் அவளின் கையை எடுத்து இருந்தாள். இதுவரை அவனே அத்தனை கோபப்படுவான் என்று அவனுக்கே தெரியாது. அவளின் முகத்தையே பார்க்காது அடுத்த நாள் எழுந்து கிளம்பி அலுவலகம் சென்று இருந்தான். அவனின் இருக்கையில் அமரவும் நண்பர்கள் கிண்டல் செய்ய, அதில் அவன் முகத்திலும் புன்னகை.

மதிய உணவு நேரத்தில் ஆர்த்தி அழைக்க, அழைப்பை ஏற்று இருந்தான். ஆர்த்தியின் முகம் ஆராய்ச்சியாக முகத்தை பார்க்க, அவனோ கண்ணை சுருக்கி மன்னிப்பை கேட்டு இருந்தான்.

“எப்படி இருக்கு இப்ப?”

“நல்லா இருக்கேன் அக்கா. வா சாப்பிடலாம்…”

“நர்மதா என்ன சமைச்சு கொடுத்தா?” ஆர்த்தி ஆவலாக கேட்க,

“அவளுக்கு சமைக்க நேரம் இருக்கா அக்கா? அதும் இல்லாம அவளுக்கு சமைக்க தெரியாது. எதையாவது கேட்டு என்னை சோதனை எலியா மாத்திட போறா…” அவன் சிரிப்புடன் சொல்ல,

“அவ அம்மாக்கு சமைக்க தெரியும் தான? அவங்க உங்களுக்கு டிஃபன் கட்டி தர கூடாதா?”

“அக்கா, இப்ப தான் நாங்க வாழவே தொடங்கி இருக்கோம். எதோ பகல் ஷிப்ட் ரெண்டு பேருக்கும் கிடைச்சு இருக்கு, அதுவே அபூர்வம். இதில் இதெல்லாம் ஒரு விஷயமா? போக போக எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்.” அகிலேஷ் சொல்ல, ஆர்த்தி நிறைவாகவே எதையும் உணரவில்லை.

“சரி நர்மதா எப்படி இருக்கா? உங்களுக்குள்ள எல்லாம் சரியா இருக்கா?”

“அவ என்னையும் அவ விருப்பம் போல நடந்துக்க சொல்லும் போது, எரிச்சலா தான் இருக்கு. ஆனா அவளுக்கு நானும் எனக்கு அவளும் தானே வாழ்க்கை முழுக்க? புரிதல் வர வரைக்கும் அவளை அனுசரிச்சு தான் போகனும்.” அகிலேஷ் சொல்ல, ஆர்த்தி கண் கலங்க,

“அக்கா என்ன நீ இதுக்கு போய்? இதெல்லாம் புதுசா கல்யாணமான ஜோடிக்கு இடையில் நடக்கிறது தான். நீயும் தானே மாமா மேல புகார் வாசிச்ச? இப்ப பாரு அவர் இம்சை இல்லாம இருக்க முடியுதா? அதே போல ஒரு நாள் நானும் என் பொண்டாட்டி இம்சை இல்லாம இருக்க முடியலன்னு சொல்வேன். அருண் போல ஆனாலும் ஆச்சரியப்பட ஒன்னும் இல்ல.” அகிலேஷ் சொல்லி சிரிக்க, ஆர்த்தியும் சிரித்து இருந்தாள்.

“அம்மாவும், அப்பாவும் இந்த வார கடைசி வராங்க டா. பார்த்துக்க…”

“சரிக்கா. யுவா கேட்ட மண்டலா ஆர்ட் புக் ஆர்டர் பண்ணிட்டேன். அதோட கலர் பென்சில், ஜெல் பென் எல்லாமே போட்டாச்சு. ரெண்டு நாளில் வந்துடும். ஜீவாக்கு கலரிங் புக் ஆர்டர் போட்டு இருக்கேன். சண்டை வராம இருக்க, நான் வரும் போது நீ கேட்ட லினென் சில்க் வாங்கிட்டு வரேன்.” அகிலேஷ் சொல்லவும்,

“அவளுக்கும் எதாவது வாங்கி கொடுடா. எனக்கு செய்யுறது இனி குறைவா இருக்கட்டும்.” ஆர்த்தி சொல்ல,

“அவ விருப்பம் போல எதுவும் நடக்கனும் அவ்ளோ தான் அவளுக்கு, மத்தபடி எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல. நீ அவளை நினைச்சு தயங்காத எப்பவும் போல இரு. உனக்கு சொல்லல தான? அம்மாகிட்ட அவ கொஞ்சம் வாய் விட்டா, நான் சொன்னதும் எனக்காக மன்னிப்பு கேட்டா தெரியுமா?” அகிலேஷ் சொன்னவன் அன்று நடந்ததை விளக்கி சொல்ல, ஆர்த்தி முகத்தில் தெளிவு வந்தது.

“சரிடா சாப்பிட்டு வேலையை பாரு, எனக்கும் கிளாஸ் இருக்கு. நாங்களும் லீவ் கிடைச்சா வரோம். ரெண்டு பேரும் பத்திரமா இருங்க.” ஆர்த்தி கூற, அவனும் சரியென வைத்து இருந்தான்.

மாலை அவன் இல்லம் வரும் போது வீட்டில் மஞ்சு மட்டுமே இருக்க, அவன் நேராய் படுக்கை அறைக்குள் சென்று மறைந்து இருந்தான். அகில் குளித்து வரவும், அவனுக்கு காஃபி கொடுத்து இருந்தாள் மஞ்சு.

“அக்கா, மாமாவும் அத்தையும் எங்க?”

“ பெரிய சார், எப்பவும் எங்காவது வெளிய போய்டுவார் தம்பி. சில நேரம் மாசக்கணக்கில் வெளியூர் போயிடுவார். பெரிய மேடம் எப்பவும் ப்ரெண்ட்ஸ் வீடு, ஷாப்பிங், டூர் இப்படி வெளிய போற ஆளுங்க. ரெண்டு பேரும்
வீடு தங்குறதே அபூர்வம். மேடம் தனியா இருக்காங்க தான் என்னை வேலைக்கு வைச்சாங்க.”

மஞ்சு சொன்ன பதிலில் அகிலேஷ் பல கேள்விகளுக்கு பதில் தேடி இருந்தான்.

“ராத்திரி சாப்பாடு என்ன செய்யட்டும் தம்பி?”

“சப்பாத்தி போடு, கூடவே காரமா வெண்டைக்காய் பொரியல், தயிர் பச்சடி செய்.” வீட்டின் உள் நுழைந்த நர்மதா சொல்ல, மஞ்சு வேகமாக தலை அசைக்க, படுக்கை அறைக்குள் சென்று இருந்தாள்.

நடுஹாலில் அமர்ந்து இருக்கும் அவன் மீது அவளின் கடைக்கண் பார்வை கூட விழவில்லை. அதை குறித்து கொண்ட அகிலேஷ் அவனின் வேலையை மட்டும் பார்த்து கொண்டு இருந்தான். இரவு உணவு வேளையில் மஞ்சுவை அனுப்பிவிட்டு இவளே அவனுக்கு பரிமாற அகில் எதையும் சொல்லாது உண்டு எழுந்து இருந்தான்.

இரவு அறைக்குள் வந்தும் எந்த பேச்சும் இல்லாது அவன் அமைதியாக படுத்து விட, நர்மதா அவன் அருகில் வந்து அமர்ந்து இருந்தாள்.

“இன்னும் என்மேல கோவமா உங்களுக்கு?”

“எனக்கு கோவம் எல்லாம் அத்தனை சீக்கிரம் வராது. வந்தாலும் ரொம்ப நேரம் இருக்காது. எனக்கு இருக்கிறது வருத்தம்.”

“சாரி. இனிமேல் இப்படி நடக்காது.”

“ம்ம்… சரி.”

“அம்மாவும் அப்பாவும் வெளியூர் போய் இருக்காங்க. கன்னியாகுமரிக்கு…”

“சரி.”

“சாரிப்பா… பிளீஸ்…” நர்மதா முகம் சுருக்கி கெஞ்ச, அவளை இழுத்து அவன் மீது போட்டு இருந்தான். சண்டைக்கு பின் சமாதானமும் உண்டாக, அடுத்த நாள் அவனே எழுந்து காஃபி போட்டு அவளுக்கு காலை உணவும் செய்து இருந்தான்.

மஞ்சு வீட்டிற்குள் வரும் போதே, சாம்பார் வாசனை வர, அவசரமாக சமையல் அறைக்குள் நுழைந்து இருந்தாள்.

“அச்சோ தம்பி நீங்க ஏன்?”

“ஹலோ ஹலோ அக்கா… ஏன் இந்த பதட்டம்? நான் சீக்கிரமே எழுந்துட்டேன். அதான் என் பொண்டாட்டி சாப்பிட இட்லி சாம்பார் செய்தேன். நீங்களும் சாப்பிட்டு சொல்லுங்க என் சமையலை…” சொன்ன அகிலேஷ் காஃபி உடன் அவர்களின் அறைக்கு சென்று இருந்தான்.

நர்மதா எழும் போதே அவளுக்கு பெட் காஃபி கொடுக்க, அகிலை அள்ளி அணைத்து இருந்தாள்.

“நான் எல்லாம் சீக்கிரம் எழுந்தா, லாக் இன் பண்ணிட்டு உக்கார்ந்துடுவேன். நீங்க அப்படியே வேற மாதிரிப்பா… சமையல் எல்லாம் செய்து அசத்துறீங்க.” நர்மதா கேட்க,

“எல்லா நேரமும் வேலையே பார்த்தா, வீட்டையும் வீட்டில் உள்ளவங்களையும் யார் பார்க்கிறது? அதும் புது பொண்டாட்டி அடிக்கடி முரண்டு பிடிக்கும் போது ஆஃபீஸ் வேலையை மட்டும் எப்படி பார்க்கிறது?”

“நான் முரண்டு பிடிக்கிறேன்னா? எனக்கு சில விஷயம் என் விருப்பம் போல தான் வேணும். அதை மீறி யார் எதிர்த்து ஒரு வார்த்தை பேசினாலும் என்னால தாங்க முடியாது. இத்தனை சீக்கிரத்தில் டீம் லீட் பதவி எல்லாம் எனக்கு சும்மா வரல. நான் பிடிச்ச முரண்டுல தான் வந்தது.”

“ஆபீஸில் பிடிக்கிற பிடிவாதம் வேற நம்மு, என்கிட்ட என்ன பிடிவாதம் உனக்கு? அப்புறம் முகம் சுருக்கி சாரி எல்லாம் கேட்டு என்னை டெம்ப்ட் பண்ணிட்டு... உனக்கும் எனக்கும் இடையில கசப்பா எதுவும் வேண்டாமே” அகில் கேட்க, நர்மதா அவனின் இதழ் தீண்டி இருந்தாள்.

முத்தம் முற்றுப் பெறாது தொடர, அவனின் ஆடை விலக தொடங்கி இருந்தது. இருவரின் உணர்வுகளும் உச்சம் கேட்க, கூடி களித்திருந்தனர். அகிலேஷ் கண் அசந்து தூங்க நர்மதா அவனை எழுப்பி விட்டாள்.

“எழுந்திறீங்க அகில்… ஆபீஸ் போக வேண்டாமா?”

“காலையில சும்மா இருக்காம தூண்டி விட்டு, இப்ப ஆபீஸ் போக வேண்டாம்னு கேக்குற?”

“இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் சாரி.”

“மறுபடியும் முதல இருந்து மன்னிப்பு கேட்க போறியா?” அகிலேஷ் கை விரித்து கண்ணடித்து கேட்க, நர்மதா அவன் கையை தட்டி விட்டு உடை மாற்ற தொடங்கி இருந்தாள்.

அகிலேஷ் அவன் வர தாமதமாகும் என்னும் செய்தியை அனுப்பி விட்டு, அவன் சமைத்த உணவை அவளுக்கு ஊட்டி விட நர்மதா கண் விரிந்து, அவன் கன்னத்தில் முத்தம் வைத்து விட்டு கிளம்பி இருந்தாள். அகிலும் கிளம்பி வர, மஞ்சு அவனை கண்டு புன்னகைக்க,

“அக்கா மாவு அரைச்சு வைக்க முடியுமா? நாளைக்கு என் அப்பாவும் அம்மாவும் வராங்க.”

“சரி தம்பி.”

“அப்படியே பாலும், கொஞ்சம் சாப்பிட பண்டமும் வாங்கி வையுங்க. காசு… எவ்ளோ வேணும்?”

“ காசு வேண்டாம் தம்பி. பக்கத்து வீதியில் உள்ள சூப்பர் மார்கெட்டில் தான் பொருள் எல்லாம் வாங்குவேன். மேடம் பணத்தை மாச மாசம் பில் பார்த்து கொடுப்பாங்க.” மஞ்சு சொல்ல, சரியென்று கூறி கிளம்பி இருந்தான்.

© GMKNOVELS