...

11 views

வணக்கம் WhatsApp
இறைவனின் முன் மனம் உருக பள்ளிஎழுச்சிப் பாடி,கலங்கிய கண்களோடு தரிசனம் முடிந்து வெளியே வந்த தேவகியை வழி மறித்த காயத்ரி, “மாமி ஏன் முகம் வாட்டமா இருக்கு”என்று விசாரித்தாள். அவள் கேள்விக்கு சிறு புன்னகையை பதிலாக தந்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினாள்.

 

கண் கலங்கும் அளவிற்கு தேவகிக்கு எந்த பிரச்சனையும் இல்லை,இரண்டு மகன், மகளுக்கு இணையான மருமகள்கள்,பேரன், பேத்திகள், “குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா” என பாடும் அளவுக்கு அழகான வாழ்க்கை.

 

ஆனாலும், இன்று அனைவர் கைகளிலும் நீக்கமற நிறைந்து இருக்கும் மொபைல் போன் தான் தேவகியின் முதல் எதிரி, அவள் கண்ணோட்டத்தில் மொபைல் ஒரு இராவணன்.தனக்கு அருகிலேயே அனைவரும் இருந்தும் தொலைவில் உள்ளது போல உணர வைத்தது மொபைல் தான் என்பதில் மிகுந்த வறுத்தம் அவருக்கு.

 

அன்று பேச்சு வழக்கில் மூத்த மருமகள் சுமதிக்கு,பள்ளியில்  நல்லாசிரியை விருது கிடைக்க இருப்பதை,இளைய மருமகள் சுதா அயல் நாட்டிலிருந்து தொலைபேசி மூலம் கூறினாள். தனக்கு கூடத் தெரியமல் சுதாவிற்குஎப்படி தெரிந்தது என்று தேவகிக்கு புரியவில்லை.மாலை இனிப்புகளுடன் வந்த சுமதி, “நோட்டிஸ் போர்டில் போட்வுடன்whatsapp family groupல் போட்டேன் அத்தை அதனால் சுதாவிற்கு தெரிந்தது” என கூறினாள்.இந்த ஒரு விஷயம் அல்ல பல முறை இது போல நடந்து உள்ளது,கொண்டாட்டங்களும்,கஷ்டங்களும் whatsapp ல் பகிர்ந்து கொள்ளப்படுவதால் தேவகி, தான் மிகவும் தனித்து விடப் பட்டதாக உணர்ந்தாள்.

 

இன்னும் ஒரிரு வாரங்களில் வெளி நாடு செல்ல இருக்கும் தனது பேரனை நினைத்தப் போது பெற்றவளை விட வளர்த்த தேவகி மிகவும் கலங்கிப் போனாள். தன் இளைய மகன் அயல் நாடு சென்று அங்கேயே குடும்பத்தோடு தங்கிவிட்டப் போது கூட கலங்காத மனம் இப்போது பேரன் போகும் போது தவித்தது.

 

லேசாக தலைவலிக்க,சோர்வுடன் அமர்ந்து இருந்தார் தேவகி.அத்தையின் சோர்வினை கண்ட சுமதி அவருக்குப் பிடித்த பில்டர் காப்பி கலந்து வந்து கொடுத்தாள்.லேசாக ஜுரம் போல் தெரிய“அத்தை என் கூட வாங்க ஹாஸ்பிடல் போயிட்டு டாக்டரை பார்த்து விட்டு வரலாம்” என அழைத்தாள்.தேவகிக்கும் அதுவே சரி எனப்பட சுமதியோடு புறப்பட்டாள்.

 

நீண்ட நாட்களுக்குப் பிறகு அவள் ஹாஸ்பிடல் வந்துள்ளாள். நிறைய மாற்றத்தை உணர்ந்தாள்.இவர்கள் உள்ளே சென்ற நேரம் டாக்டர் தன்னுடைய மொபைலில் வீடியோகால் மூலம் யாருக்கோ மருத்துவ குறிப்பு கொடுத்துக் கொண்டிருந்தார்.மறுமுனையில் இருந்த நபர் டாக்டருக்கு கோடானுகோடி நன்றிகளை தெரிவித்துக் கொண்டிருந்தார்.

 

டாக்டர் தேவகி மாமியை பரிசோதித்து லேசான ஜுரம் தான் எனக்கூறி மேலும் சில பரிசோதனை செய்து சில மருந்து மாத்திரைகளை எழுதித் தந்தார். ஒரு குறிபிட்ட மாத்திரை இல்லாமல் போக,உடனே சுமதி ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வரவழைத்தாள். மதியம் மருமகள் தந்த கஞ்சி மற்றும் மாத்திரைகளை போட்டுக் கொண்டு அவள் கட்டளை படி கண் மூடி படுத்தவள் மனதில் ஏதேதோ எண்ணம் அலைமோதியது.

 

இன்று டாக்டர் தனது மொபைல் மூலம் எங்கோ இருந்த நோயாளிக்கு மருத்துவம் பார்த்ததும்,சுமதி எந்த அலைச்சலும் இன்றி வேண்டிய விஷயங்களை வீட்டுக்கே வரவழைப்பதும் தேவகிக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது.கொஞ்சம் தன் கடந்த கால வாழ்கையை நினைத்துப் பார்த்தாள்.

 

சரியான நேரத்தில் மருத்துவ வசதி கிடைக்கமல் இளம் வயதில் இழந்த தாயின் நினைவும்.குடும்பத்தோடு தேவகி சுற்றுலா சென்றிருந்த சமயத்தில் தந்தையின் இதயம் நின்று போக விவரம் அறியாமல் எல்லாம் முடிந்து தந்தையின் புகைபடம் மட்டுமே கண்டு கதறியதும். உடல் நலம் சரி இல்லாத குழந்தையை குலதெய்வம் கோவிலுக்கு அழைத்து சென்ற போது,மருந்து எடுத்து செல்ல மறந்து அங்கே எதோ ஒரு மருந்தை வாங்கி கொடுத்து பிள்ளையை அவசர சிகிச்சையில் சேர்க்கும் அளவுக்கு போனதும்.அலுவலகத்திற்கு விடுமுறை போட்டு விட்டு வீட்டுவரி, கரண்ட் பில், school fees, பேங்க் வேலை என தன் கணவர் அலைந்ததும் தேவகியின் மனதில் படம் போல் ஓடியது.

 

நீண்ட சிந்தனைக்குப் பிறகு ஒரு தெளிவான முடிவுக்கு வந்தவளாய் தேவகி தன் படுக்கையில் இருந்து எழுந்தாள்.

    

சுமதி மூலம் விஷயம் அறிந்து இளைய மகன்,மருமகள் மற்றும் பேத்திகள் தொலைபேசி மூலம் தேவகியை நலம் விசாரித்தனர்.

 

மாலை அவள் செல்ல பேரன் சுரேஷ் அவள் அறைக்கு வந்து அவள் அருகில் அமர்ந்து “உனக்கு ஏன்னச்சு sweety” என்றான்.அவன் தேவகியை பாட்டி என அழைத்தை விட  sweetyஎன அழைத்தது தான் அதிகம். சிரித்து கொண்டே அவன் கண்ணம் தொட்டு முத்தம் இட்ட தேவகியை பார்த்து “நான் சிங்கபூரில் இருந்து உங்களுக்கு என்ன வாங்கி வரனும்” என கேட்டான். சில வினாடிகள் யோசித்த தேவகி“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், நீ சந்தோஷமாக போயிட்டு வா” என்று கூறினார். மிகவும் அடம்பிடித்து மீண்டும் மீண்டும் பேரன் கேட்டதும்,தேவகி தயங்கியவறே“எனக்கு சிங்கபூரில் இருந்து ஒன்றும் வேண்டாம்,இப்போது நீங்களெல்லாம் வைத்து இருப்பது போல ஒரு மொபைல் வாங்கித் தரமுடியுமா என கேட்டார்”.சுரேஷ் மிகவும் சந்தோஷமாக எழுந்தான்,கொஞ்சம் இருங்கள் பாட்டி இதோ வருகின்றேன் என கூறி சென்றான்.

 

இரவு உணவின் போது சுரேஷ் அனைவர் முன்னிலையிலும் புத்தம் புது ஆன்ராயிட் மொபைலை பாட்டிக்கு பரிசாக அளித்தான்.புதிதாய் பிறந்த குழந்தையை வாங்குவது போல அந்த மொபைலை ஆசையோடு வாங்கினாள் தேவகி. உணவுக்குப் பின்னர் அவளை காண வந்த பேத்தி ரம்யா “புது மொபைலா கலக்குங்க பாட்டி” என கூறியதோடு நில்லாமல். பாட்டிக்கு புரியும்படி மொபைலை இயக்குவது எப்படி என பொருமையாக சொல்லி கொடுத்தாள்.

 

அடுத்த நாள் கோவிலுக்கு தனது புது மொபைலை எடுத்துச் சென்று தேவகி காயத்ரியிடம் காட்டினார்.காயத்ரியும் அவள் பங்குக்கு தேவகிக்குப் பாடம் எடுத்ததோடு நிற்காமல் தேவகியின் என்னை தனது“பள்ளிஎழுச்சி groupல்”சேர்த்து விட்டாள். மேலும்whatsapp எப்படி உபயோகிப்பது எனவும் சொல்லிக் கொடுத்தாள்.

 

அதிகம் பேசாத அவள் மகன் கூட ஒரு நாள் தன் தாயருகே அமர்ந்துyoutubeல் தன் தாய்க்கு பிடித்த சரோஜா தேவியின் பாடல்களை எப்படி போட்டுப் பார்ப்பது என சொல்லிக் கொடுத்தான். தான் கைபிடித்து அ’னா ஆ’வன்னா சொல்லி கொடுத்த மகன் இப்பொழுது தனக்கு சொல்லித் தருவதை நினைத்து தேவகி மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.

 

ஒரு இரண்டு மூன்று நாட்களுக்குள் மொபைல் தேவகிக்கு ஓரளவுக்கு பழக்கமாகியது.இப்பொதெல்லாம் தேவகி மாமி ரொம்ப பிசி. அவர் மொபைலில் ஏகப்பட்ட குருப்ஸ். பக்தி நிறைந்த விஷயத்தை போட பள்ளியெழுச்சி குருப்,பேமிலி குருப், சம்மந்தி குருப், பெண்கள் குருப் எனக் குறை ஒன்றும் இல்லை. பேரனோ அன்றாடம் தான் பார்க்கும் காட்சிகளை உடனுக்குடன் பாட்டிக்கு அனுப்பிக் கொண்டிருந்தான். அருகில் இருப்பவரை தொலைவில் உள்ளது போல உணர வைத்த மொபைல்  இன்று தொலைவில் உள்ளவர்களை அருகில் அழைத்து வந்தது.தேவகிக்கு இப்போது மொபைல் இராவணன் அல்ல லீலைகள் காட்டும் கண்ணன் ஆனது.

 

அன்று சுரேஷ் சிங்கபூர் செல்லும் நாள், அவனை வழியனுப்ப தேவகியும் விமான நிலையம் சென்றாள். விடைபெற்று அவன் உள்ளேச் சென்ற பிறகு தேவகி whatsapp ல் பேரன் எண்ணுக்குச் சில பூங்கொத்துக்களை அனுப்பினாள். சில வினாடிகளில் சுரேஷ் பதிலுக்கு விரல் உயர்த்திக் காட்டியவாறே தன்னுடைய புகைபடத்தை பாட்டிக்கு அனுப்பினான். சுரேஷ் நேரில் நிற்பதாகவே பாவித்து அந்த மொபைலுக்கு திருஷ்டி கழித்தாள் தேவகி.

kumuda Selvamani
#கும்ஸ்
#WritcoStoryPrompt118
Why do we often look for someone to blame when there is a problem? Tell us in story writing what you think about it.
© Meera