...

7 views

எல்லையில்லா வாழ்வு....
நேற்றிரவு (29/03/23) 7 ம் அறிவு படம் பார்க்கும் போது
அங்கே கதாநாயகி கதாநாயகனிடம் இவர்கள் எல்லாம் Mentally challenged குழந்தைகள் என்று ஒரு இடத்தில் சொல்வார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த அபி என்னிடம் அதென்னக்கா Mentally challenged அப்டீன்னா என்னனு கேட்டாள் அதற்கு நான் சொன்னேன் மனநலத்தை எதிர்கொள்வதில்/ கையாள்வதில் அவர்களுக்கு சவால் இருக்கும். புரிந்து கொள்வதில், பேசுவதில், சிந்தனையில் அவர்களுக்கு சவால் இருக்கும். இதே போல் தான் உடலைக் கையாள்வதில் சிரமம் உடையவர்களை Physically challenged என்று சொல்வார்கள். இவ்விருவகையினருமே அவரவர் பாதிப்பு நிலையைப் பொறுத்து அவரவரது செயல்திறன் மாறுபடும் என்று சொன்னேன்.


அவளுக்கு இன்னும் நன்றாகப் புரிய வைக்க இப்போ எல்லாரும் நடந்து போறாங்க இல்லையா ஆனா நான்
கை பிடிச்சா தான நடந்து போற சில நேரங்களில் தவழ்ந்தும் போறேன்ல அந்த மாதிரி இன்னும் பலர் நகர்ந்தும் போவாங்க..... அதாவது ஒரு வேலையை அவங்களுக்கு எப்படி செய்ய வருமோ அப்படி செய்யறாங்க அவ்வளவு தான்! அவங்களுக்கு முடியாத போது நம்ம உதவலாம். மற்றபடி அவங்க எல்லாரும் நம்மல மாதிரி தான்.... என்று சொன்னேன்.
சேரிக்கா புரிஞ்சுது என்று சொல்லிக் கொண்டே விளம்பர இடைவேளை முடிந்து தொடர்ந்த படத்தைப் பார்க்க ஆரம்பித்தாள்.....

இங்கே நான் சொல்ல வருவது என்னவென்றால்

இப்படி ஒரு அவய மாறுதலோ அல்லது சிந்தனை மாறுதலோ உடையவர்களை முடியாதவர்களாக பார்க்க வேண்டிய அவசியமே இல்லை என்கிறேன்.....
இது பல வேறு உயிர்கள் நிரம்பிய உலகம் எல்லாமே இருகால் உயிரியாகவே உள்ளதா என்ன மனிதனைப் போல .... இல்லையல்லவா! நான்கு கால் எட்டுக்கால் ஏன் கால் இல்லாத உயிரினமும் உண்டு அது போலத்தான்
அவய மாறுதல் உள்ள மனிதர்களும் மாறுபட்டதால் ஒதுக்கத் தேவையில்லை.... இரக்கம் என்ற பெயரில் இல்லை இல்லை கிடையாது என்று சொல்லத் தேவையில்லை.... பல நேரங்களில் அவர்களின் இயல்பை ஊக்கப்படுத்தினால் போதும் அதுவே அவர்களின் வாழ்க்கைக்குப் போதுமானது.....


என்னிடமே சில நேரங்களில் எதற்கு உனக்கு கஷ்டம் சொல்லீருந்தா நாங்க யாரராவது வந்து எடுத்து தந்துருப்பம்ல அவ்வளவு தூரம் எதுக்கு தவழ்ந்து போன என்று பல முறை பரிவாக அன்பாக சொல்வதுண்டு.... கேட்பதுண்டு.... இக்கணம் வரை ..... ஆனால் அது சிரமமே அல்ல எனக்கு..... நீங்கள் ஓடி ஓடிச் செய்வதை நான் மெதுவாக நடந்து போயோ,தவழ்ந்து போயோ செய்கிறேன். உங்களுக்கு அரைமணி நேரம் எடுக்கும் வேலை எனக்கு ஒருமணி நேரம் எடுக்கலாம் உங்களுக்கு எளிதானவைகள் எல்லாம் எனக்குக் கடினமாகலாம், எனக்கு எளிதானவைகள் எல்லாம் உங்களுக்கு கடினமாக இருக்கலாம். அதற்கு நான் சிரமப்படுகிறேன் என்று பொருள் அல்ல! என் வானில் நான் சிறகடிக்கிறேன் என் இயல்பில் அவ்வளவே! எனக்கான வாழ்வை நான் உங்களுக்கு சுமையாக்க விரும்பவில்லை.....! என் வாழ்வு என்பது எனதின்பம்...... என் இயல்பை நீங்கள் என் இயலாமையாக்கி உங்கள் வட்டத்தில் என்னை அடைத்து அதில் என்னை அழுத்தி உங்களை நீங்களே என் பொருட்டு நொந்து கொள்கிறீர்கள்...... வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு கடினமில்லை! மற்றவர் வாழ்வை உங்கள் வட்டத்திற்குள்ளும் சதிரத்திற்குள்ளும் வரையறுத்து வைத்துக் கொண்டு அவர்களை சிராய்க்காதீர்கள்.... வாழ்க்கை வானினும் பெரியது! வரையறையே இல்லாதது எல்லாரும் வாழ்வதற்கானது! எனவே அவரவர் இயல்பை ஊக்குவியுங்கள்! அதுவே சிறப்பு!
முடியாதது ,கடினம், சிரமம் என்பதெல்லாம் இந்த மனிதனால் உருவகப்படுத்தியவையே தவிர உண்மையில் அப்படி எந்த ஒன்றும் இவ்வுலகில் இல்லை!

#அகரம்_தொடங்கி_அகிலம்_வரை
#தமிழ்நிழல்