...

29 views

தெய்வம் தந்த சொந்தமா - 5
அத்தியாயம் - 5

“நான் இப்ப சொல்ல போறது பெரிய ரகசியம் சக்தி. இதை எக்காரணத்தை கொண்டும் யாருக்கும் நீங்க வெளிய சொல்லிட கூடாது.”

“கண்டிப்பா சொல்ல மாட்டேன் சர்வா. நீங்க சொல்லுங்க.”

“நிலா எஸ்.எம் பார்மா செந்தில் முருகன் பொண்ணுன்னு தான் இப்ப வரை சொல்லிட்டு இருக்காங்க. ஆனா அவ அவங்களுக்கு பிறந்த பொண்ணு இல்ல. நிலா பத்தின உண்மைகள் எங்க நிச்சயத்துக்கு சில வாரத்துக்கு முன்னாடி தான் அவ அம்மாக்கு தெரிஞ்சு இருக்கு. நான் இங்க அவ அம்மான்னு சொல்றது செந்தில் முருகன் மனைவி பத்மாவை, பத்மா, அவங்களுக்கு குழந்தை பிறந்து இறந்துட்டு இருந்த நேரம், அவங்க ரெண்டாம் குழந்தையும் இறந்து போகவும், அனாதை இல்லத்தில் இருந்து ஒரு வார குழந்தையான நிலாவை இறந்த குழந்தையோட இடத்துக்கு மாத்தி இருக்காங்க.”

“பத்மா அத்தையோட அம்மா செய்த இந்த சுயநல செயல் தெரியாத பத்மா அத்தையும், செந்தில் மாமாவும் நிலாவை ராணி போல வளர்த்தாங்க. அவங்களுக்கு ரெண்டு வருஷம் கழிச்சு காவ்யா பிறந்தா, அப்ப பத்மா அத்தையோட அம்மாக்கு நிலா மேல பயங்கர எரிச்சல். நிலா முதல் பொண்ணா எல்லா இடத்திலும் மரியாதையை வாங்கவும், அவங்களுக்கு தவிப்பு. உண்மையை சொல்லவும் முடியல, நிலாவை ஏத்துக்கவும் முடியல. கடைசியா அவங்க மரணப்படுக்கையில் இந்த உண்மையை எல்லாம் பத்மா அத்தைக்கு சொல்லிட்டாங்க.”

“நிலாவை வளர்த்த பாசம் அவங்களுக்கும் இருக்கவும் அவங்க அப்ப நிலாவை எதுவும் செய்யல. அந்த நேரத்தில் தான் முருகன் மாமா எஸ். எம் பார்மாக்கு தொழில்முறை வாரிசா நிலாவை அறிவிச்சார். அதோட எங்க கல்யாண பேச்சும் நடந்தது. அப்ப தான் காவ்யா என்னை நேசிக்கிறதை சொல்லி இருக்கா, உடனே பத்மா அத்தை நிலாவை விரோதியா பார்க்க தொடங்கிட்டாங்க. காவ்யாக்கு கிடைக்க வேண்டிய தொழில், வாழ்க்கை அத்தனையும் நிலாக்கு கிடைக்கவும். அவகிட்ட உண்மையை சொல்லி வீட்டை விட்டு துரத்தி விட்டாங்க.”

“என்ன சொல்றீங்க சர்வா? நிலாவை அனாதைன்னு சொல்லியா வெளிய அனுப்பி விட்டாங்க? எப்படி சொல்ல முடிஞ்சுது?”

“ ஆமா சக்தி. என் நிலா யாருக்கு பிறந்தான்னு எல்லாம் யாருக்கும் தெரியாது. ஆனா அவ செந்தில் முருகன் மகளாக செல்வ சீமாட்டியா தான் வளர்ந்தா, அவளை அனாதையா எடுத்த அதே இல்லத்தில் கொண்டு போய் விட்டு வந்து இருக்காங்க. எவ்வளவு துடிச்சு போய் இருப்பா, அவ அடையாளமே மாறி போய், யாரு அவ சொந்தமுன்னு நினைச்சாலோ அவங்களை இழந்து, வீடு இல்லாம, பாதுகாப்பு இல்லாம, புது இடத்தில் புது மனுஷங்க கூட, ஆதரவு இல்லாத ஒருத்தியா, நல்ல வேலை கடவுள் அவளுக்கு முகிலை அனுப்பினான். அவர் மூலமா இப்ப அவளுக்கு பாதுகாப்பான, அன்பான ஒரு வாழ்க்கை கிடைச்சு இருக்கு. முகில் இல்லாம போய் இருந்தா நிலா என்ன எல்லாம் கஷ்டத்தை கடந்து இருக்கனுமோ?”

“முகில் தான் நிலா பக்கத்தில் இருந்தவரா? அவருக்கும் நிலாக்கும் எப்படி அறிமுகம்? அவர் உங்க அளவுக்கு வசதியான ஆள் போல தெரியலையே?” சக்தி கேட்க,

“முகிலினியன்… அவர்கிட்ட பணம் இல்ல தான் சக்தி. ஆனா குணம் இருக்கு. அள்ள அள்ள குறையாத அன்பு இருக்கு. நிலாவை எப்படி பார்த்துப்பார் தெரியுமா? கண்ணுல வைச்சு தாங்குவேன் சொல்வாங்க இல்ல? அப்படி தாங்குவார். என் காதலை பார்த்து வியந்து நிக்குற, ஒரு முறை அந்த மனுஷன் நிலாவை தாங்குறதை பார்த்தா இப்படி கூட காதலிக்க முடியுமான்னு கேட்க தோணும். முதல் முறை நானே அசந்து போய்ட்டேன் தெரியுமா? எங்க அப்பா அம்மாக்கு அப்புறம் நான் பார்த்த ஆதர்ச தம்பதிகள் அவங்க தான். நிலா…. எப்படிப்பட்ட பொண்ணு? அத்தனை வசதி வாய்ப்பில் வளர்ந்த பொண்ணு சாதாரண வீட்டில், நடுத்தர குடும்பத்தில் நிறைவா வாழ்றா அதுக்கு காரணம் முகில் தான். அவரோட அன்பு தான் அவளை அங்க பொருந்தி போக வெச்சு இருக்கு. நிலாவை முகில் அனாதை இல்லத்தில் தான் பார்த்து இருக்கார். இல்லத்தில் பொறுப்பில் இருந்த வள்ளிநாயகம் அம்மா தான் நிலாவுக்கு முகில் கூட கல்யாணம் செய்து வெச்சு இருக்காங்க. முகிலும் அந்த இல்லத்தில் வளர்ந்தவர் தான். அவருக்கும் உறவுன்னு சொல்லிக்க பெருசா யாரும் இல்ல. அதே இல்லத்தில் அவரோட வளர்ந்த வில்லியம், கலையரசி ரெண்டும் பேரும் தான் அவருக்கு உறவு. இப்ப எல்லாரும் ஒரே குடும்பமா இருக்காங்க.”

“அதான் நிலா நல்லா தானே இருக்காங்க? நீங்களும் சந்தோசமா தான் அதை சொல்றீங்க… பின்ன ஏன் உங்களுக்குள்ள இந்த மன அழுத்தம்? நிலாவை இன்னும் காதலிக்கறீங்களா சர்வா?”

“சக்தி… நிலா இப்ப அடுத்தவன் பொண்டாட்டி. பிறர் மனை நோக்குதல் தவறுன்னு எனக்கும் தெரியும். அவளோட எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் என்னால உதவி செய்ய முடியல. என்னை நண்பனா இப்ப பார்க்கிற அவ, அன்னிக்கு பார்க்கல. என்கிட்ட அவ நிலையை சொல்லி இருந்தா, இதை இன்னும் கவனமா கையாண்டு இருக்கலாம். நிலா அனுபவிச்ச கஷ்டம் எவ்ளோ தெரியுமா? என் காதல் அவளுக்கு எதையுமே கொடுக்கல சக்தி. என்னால என்ன செய்ய முடிஞ்சுது நிலாக்காக? இப்ப எந்த விதத்தில் நான் உதவ போனாலும் வேண்டாம் சர்வான்னு சொல்லியே புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் என்னை தள்ளி நிறுத்திடுறாங்க. ரொம்ப வற்புறுத்தினா அது முகிலோட தன்மானத்தை சீண்டினது போலாகிடும் தான் விலகி நிற்கிறேன். நிலா மேல எனக்கு இப்ப காதல் எல்லாம் இல்ல. அவ எங்க இருந்தாலும் நிம்மதியா சந்தோசமா இருக்கனும். அதுக்காக நான் எதையும் செய்ய தயாரா இருக்கேன். என்னால அவளுக்கு எதையும் செய்ய முடியாத வலி, குற்ற உணர்வு என்னை கொல்லுது.”

“என்னை நிலாக்கிட்ட கூப்பிட்டு போறீங்களா? எனக்கு நிலாவையும், முகிலையும் அறிமுகம் செய்து வையுங்களேன்.”

“இப்ப என்னால முடியாது சக்தி. நான் போன வாரம் நிலாவை கொஞ்சம் கோவமா பேசிட்டேன். அதனால முகில் என்மேல கோவமா இருக்கார். என்னால இப்ப அவரோட பேசவே முடியாது. கொஞ்ச நாள் போகட்டும்.” சர்வா கூறவும், சக்தி எதையும் சொல்லாது எழுந்து செல்ல,

“சக்தி… ஒரு நிமிஷம்.. நீ யாரையும் காதலிச்சது இல்லையா? இல்ல உன்னை யாரும் காதலிச்சது இல்லையா? இதை கேட்க கூடாது தான். ஆனாலும் எனக்கு மனசு உறுதிட்டே இருக்கு. ஏன் உனக்கு டிவோர்ஸ் ஆச்சு?” சர்வா கேட்க,

“அது பெரிய கதை. அதை சட்டுன்னு எல்லாம் என்னால சொல்லிட முடியாது. எனக்கு அதை சொல்ல மட்டும் இல்ல. யோசிக்க கூட தெம்பு இல்ல. ஆனா சொல்றேன் ஒருநாள் கண்டிப்பா…” சொன்னவள் அவளின் நூலகம் உள்ளே சென்று இருந்தாள்.

சர்வேஸ்வரன் இல்லம் வந்தவன் அமைதியாய் பால்கனியில் சென்று அமர்ந்து இருக்க, சுந்தர் அங்கே வந்தார்.

“அந்த பொண்ணு சக்தி ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கு தம்பி. அந்த பொண்ணோட அப்பா, அண்ணனாங்க யாரும் சரியில்ல. சக்தி புருஷனும் இந்த பொண்ணை ரொம்ப கொடுமைப்படுத்தி இருக்கான். கடைசியில சக்தி பொண்ணு குடும்பம் நடந்த தகுதி இல்லாதவன்னு சொல்லி அவன் விவாகரத்து கேட்டு, இந்த பொண்ணும் கொடுத்து இருக்கு.” சுந்தர் கூறவும், சர்வா அவனை கேள்வியாக பார்க்க,

“நம்ம ஏரியா எஸ்ஐ சொன்னாரு, அவர் வீட்டில் இன்னிக்கி விருந்து, அவர் பொண்ணுக்கு முதல் பிறந்த நாள். நானும் கூட வேலைக்கு போய் இருந்தேன். அப்ப அவர்கிட்ட சக்தியை பத்தி கேட்டேன். சொன்னாரு..”

“நீங்க எதுக்கு அவர்கிட்ட சக்தியை பத்தி கேட்டீங்க?”

“சக்தி பொண்ணு வீட்டுல ஒரு வருசம் முன்னாடி எவனோ வந்து கத்தி ஆர்ப்பாட்டம் செய்து இருக்கான். ரோட்டில் நின்னு கத்தவும், அந்த வழியா வந்த விமல் தம்பி உதவி செய்து போலீசை கூப்பிட்டு விட்டு இருக்கார். அன்னிக்கி நடந்தின விசாரணை வெச்சு இப்ப எஸ் ஐ தம்பி விவரம் சொன்னார். விமல் தம்பிக்கும் சக்தியை பத்தின முழு விவரம் தெரியாதுன்னு சொன்னார்.”

“சுந்தர்.. நான் என்ன கேட்டேன்? நீங்க என்ன சொல்றீங்க?”

“விமல் தம்பிகிட்ட நீங்க சக்தியை பத்தி கேட்டு இருப்பீங்க போல, விமல் தம்பி என்னை கூப்பிட்டு சக்தி ஏன் இங்க வரா? நீங்க ஏன் சக்தியை பத்தி விசாரணை பண்றீங்கன்னு கேட்டாரு? விவரம் சொல்லவும் எதும் சொல்லாம வைச்சுட்டார். நீங்க சக்தியை பத்தி தெரிஞ்சுக்க முயற்சி பண்றீங்கன்னு தான் விவரம் கேட்டு சொன்னேன். ஆனா போலீஸ் தம்பியும் முழு விவரம் சொல்லல. அவரும் மேலோட்டமா தான் விவரம் சொன்னார்.

“நீங்க எதும் யார்கிட்டேயும் கேட்க வேண்டாம் சுந்தர். இப்படி நம்ம விசாரிக்கிற விஷயம் சக்திக்கு தெரிஞ்சா வீண் மன சங்கடம். இதெல்லாம் இனிமேல் என்னை கேட்காம செய்யாதீங்க சுந்தர். “ சர்வா கொஞ்சம் கடுமையாய் சொல்ல, சுந்தர் சரியென தலையாட்டி இருந்தார்.

அதன்பின் வந்த சில வாரங்கள் சக்தியும் சரி, சர்வேஸ்வரனும் சரி ஒருவரை ஒருவர் தவிர்த்து இருந்தனர். காரணம் இருவருக்கும் அவர்களின் பிரச்சனை கண்ணை விட்டு மறைந்து அடுத்தவர் பிரச்சனைக்கு தீர்வு காண யோசிக்க ஆரம்பித்து இருந்தனர். சர்வாவின் எண்ணங்களில் சக்திக்கு என்ன கொடுமை நேர்ந்தது இருக்கும் என்ற யோசனை. சக்திக்கு என்ன செய்தால் இவன் சரியாவான் என்று சிந்தனை. இருவரின் மனமும் ஒருவரை ஒருவர் நாடுவது புரிய இருவருமே நாகரிகம் கருதி விலகி நின்றனர்.

எத்தனை விலகி நின்றாலும் மனம் மற்றவர் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருந்தது. அன்று சர்வா வீட்டில் அமர்ந்து அவன் அப்பா கேட்டிருந்த தகவலை திரட்டிக்கொண்டு இருக்க, சக்தி அவனை காண வந்து இருந்தாள்.

“வாங்க சக்தி..”

“உங்களுக்கு இருக்கிற கவலை நிலாக்கு உங்களால் உதவி செய்ய முடியல அப்படின்னு தானே?”

“ஆமா…”

“எட்டி இருந்தா எப்படி உதவ முடியும்?”

“புரியல சக்தி…”

“அவங்களை விட்டு இத்தனை தூரம் விலகி நின்னா எப்படி அவங்களுக்கு என்ன தேவைன்னு தெரியும்? உங்க தொழிலை நீங்க பார்த்துட்டு இருந்தா உதவிக்கு வந்துட்டு போன்னு சொல்லலாம் இல்ல? நிலாவை உங்களுக்கு உதவ சொல்லி கேளுங்க. நிலா உங்களுக்காக வருவாங்க.” சக்தி சொல்லவும் சட்டென சர்வாவின் முகம் ஒளிர்ந்தது.

“அதோட இதையும் யோசிங்க… நிலா மட்டும் இல்ல. நிலா போல பல அனாதைகள் இருக்காங்க நம்ம நாட்டில், திறமை இருந்தும் அதுக்கான வாய்ப்பு இல்லாம, படிக்க முடியாம, நல்ல வேலை இல்லாம, நிறைய விஷயம் இல்லாம இருக்காங்க. இதோ மனசு கஷ்டம் சொல்லிட்டு ஒரு வருஷமா நீங்க தொழில் பார்க்காம இருந்தாலும் எந்த வசதிக்கும் குறைவு இல்லாம இருக்கீங்க. ஆனா பல பேர் எத்தனை கஷ்டம் இருந்தாலும் ஒரு நேரம் சாப்பாட்டுக்காக இந்த நிமிஷமும் ஓடிட்டு தான் இருக்காங்க. எல்லாருக்கும் நிலா போல வலிக்கும். நிலாவுக்கு கூட இப்ப அவங்களை தாங்க குடும்பம் இருக்கு.. அதுவும் இல்லாதவங்க நிலையை யோசிங்க. நாம நல்லா இருக்க மட்டும் உழைக்கிறது இல்ல பிறப்புக்கான அர்த்தம். பிறர் வாழ கைக் கொடுக்கிறதில் தான் இருக்கு. உங்களால் முடியும்.. யோசிங்க.” சக்தி கூறிவிட்டு விடைபெற்று இருக்க, சர்வேஸ்வரன் சிந்தனையில் மூழ்கி இருந்தான்.

© GMKNOVELS
@GMKNOVELS