...

10 views

தாய்மை
காலையில் எழுந்ததிலிருந்து நூறாவது முறையாக தன் மகள் ஆத்மீகாவிடம் கூறிக் கொண்டிருந்தார் சோபனா.

பாப்பா, பாத்து பத்திரமா போய்ட்டு வரனும் சரியா? யாராவது தெரியாதவங்க எதாச்சும் கொடுத்தா வாங்க கூடாது. கூட படிக்குற புள்ளைங்க கூடவே போய்ட்டு, கூடவே வந்துடனும்.தெரியாத இடத்துக்குல்லாம் தனியா போய் மாட்டிக்க கூடாது. என்று அக்கறையும் பாசமும் நிறைந்த தாயாய் தன் மகளுக்கு அறிவுரை வழங்கி கொண்டிருந்தார் தாய் சோபனா.

அம்மா, என்னை இன்னும் சின்ன பொண்ணு மாதிரி ட்ரீட் பண்ணுறத ஸ்டாப் பண்ணுங்க. உங்க பொண்ணுக்கு இப்போ 18 வயசு ஆகிடுச்சி.  காலேஜ்க்கு போகப் போறா. ஆனா இன்னும் எல்.கே.ஜி பிள்ளை போல அட்வைஸ் பண்ணுறீங்க. என்று இடுப்பில் கையை வைத்துக் கொண்டு முறைத்துப் பார்த்த தன் மகளின் தலையை தடவி கொடுத்தார் தாய் சோபனா.

அப்படி இல்ல பாப்பா, இதுவரை அம்மா தான உன்ன ஸ்கூல்க்கு கூட்டுட்டு போவேன். நீ எங்க போனாலும் அம்மா துணைக்கு வருவேன். முதல் தடவை நீ தனியா போற, அதுவும் பஸ்ல. அதான் கொஞ்சம் பயமா இருக்கு. என்று கெஞ்சலும் கொஞ்சலுமாக கூறிய தாயை கட்டியணைத்த ஆத்மீகா,

என் செல்ல அம்மால்ல, நான் சொன்னா கேப்பீங்க தானா! முதலாவதாக உங்க பாப்பா இப்போ வளர்ந்துட்டா. இரண்டாவது  உங்க பாப்பா தனியா போகல. பிகாஸ், பஸ்ல நிறைய பேர் வருவாங்க. மூணாவது நீங்க உங்க பாப்பாவ கோழையா வளர்க்கல. எல்லாத்துக்கும் மேல  தன்னை தான் பாதுகாத்துக் கொள்வதே பெண்ணுக்கு அழகு அப்படின்னு நான் சொல்லல,  ஔவை பாட்டி சொல்லுறாங்க. சோ என் செல்ல அம்மா பயப்படமாம இருப்பீங்களாம், உங்க பாப்பா முதல் நாள் கல்லூரிக்குப் போய் மாஸ் காட்டிட்டு வருவாளாம். என்ன ஒகேயா?

என்று தாயின் கண்ணத்தில் முத்தமிட்டு பேருந்து நிலைத்தை நோக்கிச் சென்றாள் ஆத்மீகா. மான் குட்டி போல் துள்ளி செல்லும் தன் மகளை பார்த்த சோபனாவின் கண்களில் அவளை மழலையாய் கையில் ஏந்திய தினம் வந்து போனது. அந்த நாளை எப்படி மறக்க முடியும்? அது தானே சோபனாவின் வாழ்வையே புரட்டிப் போட்ட நாள். சோபனாவின் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுவதற்காக பிறந்தவள் தான் இந்த ஆத்மீகா. அந்த நாளை பற்றி நினைத்துக் கொண்டே வீட்டிற்கு வெளியே நின்றிருந்தவளை அக்கம் பக்கத்தினர் ஒரு மாதிரியாக பார்த்து வைக்க, மேலும் அங்கே நிற்க விருப்பம் இல்லாமல் வீட்டிற்குள் சென்றார் சோபனா.

பேருந்து நிலையத்தில்....

பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த நிழற்குடையில் அமர்ந்தவாறு, பேருந்து வரும் திசையைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆத்மீகா. இது வரை தாயுடன் ஸ்கூட்டியில் மட்டுமே பயணம் செய்து வந்ததால், முதல் முறை பேருந்தில் பயணிப்பதை நினைத்து சந்தோஷமாக இருந்தது ஆத்மீகாவுக்கு. அதே நேரம் இந்த பேருந்து பயணம் எப்படி இருக்குமென்ற ஆர்வமும் இருந்தது. பேருந்து வரவே தாய் அறிவுறுத்தியதின் படி முன்னால் பெயர் பலகையை சோதித்து, தன் கல்லூரிக்கு செல்லுமா என உறுதிசெய்து விட்டு பேருந்தில் ஏறினாள். பேருந்தில் அவ்வளவாக கூட்டம் இல்லை. எனவே ஒரு வசதியான ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தவள், மறக்காமல் பயண சீட்டையும் பெற்றுக் கொண்டாள். அவள் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் வேகமாக இறங்கியவளுக்கு அந்த பயணம் ஆனந்தமாக முடிவடைந்தது. இன்று தான் முதல் நாள் கல்லூரிக்கு செல்லுவதை நினைத்தவளுக்கு மிகவும் பரவசமாக இருந்தது. பள்ளி குழந்தைகள் கல்லூரி நாட்களை எதிர்பார்த்திருப்பதும், கல்லூரி மாணவர்கள் பள்ளி நாட்களை நினைத்து ஏங்குவதும் வாடிக்கை தானே. ஆத்மீகாவும் அதற்கு விதி விலக்கல்ல. முதல் நாள் என்பதால் ஒரு பாடவேளையும் நடைபெறவில்லை. தனக்கென ஒரு நட்பு வட்டாரத்தை உருவாக்கி கொண்டாள் ஆத்மீகா. அவளது துடிப்பான பேச்சும், பாரபட்சமின்றி அன்பை பொழியும் குணமும் எவரையும் அவளுடன் நட்பு கொள்ள செய்யும். கல்லூரி நேரம் முடிவடைய,  காலையில் ஒற்றையாய் கல்லூரிக்குள் நுழைந்தவள் மாலையில் தனக்கென சேர்ந்த நட்பு வட்டாரத்துடன் பேசி சிரித்தவாறு வெளியே வந்தாள். அவர்களிடம் விடை பெற்றவள் பேருந்து நிலையத்துக்கு வந்தடைய, தற்போது மீண்டும் அவளது பேருந்து பயணம் துவங்கியது. காலை போல் மாலையில் கூட்டம் குறைவாக இருக்கவில்லை. பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. படிகட்டில் தொங்கும் மக்கள், பலரின் இடிகள், காலால் தரப்படும் உதைகள் என எல்லாவற்றையும் கடந்து பாதுகாப்பாக பேருந்தின் மையப்பகுதியை அடைந்து பெருமூச்சி விட்டாள் ஆத்மீகா. தினம் தினம் பேருந்தில் பயணப்பதும் ஒரு போராட்டம் தான் போலும் என எண்ணிக் கொண்டவளின் கண்களில் விழுந்தது ஒரு காலியான இருக்கை. அத்தனை பேர் நின்று கொண்டிருக்கிறனர், ஆனால் ஏன் அதில் யாரும் அமரவில்லை? என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டாள் ஆத்மீகா. அது ஒரு இரட்டை இருக்கை. அதில் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். ஆத்மீகா சுற்றி நிற்பவர்களை ஒரு முறை பார்த்தாள். யாரும் அதில் அமர தயாராக இல்லை என்பது போல நின்று கொண்டிருந்தனர். சரி கிடைத்த வரை லாபம் என்று எண்ணியவாறு, நேராக அந்த இருக்கையில் போய் அமர்ந்தாள் ஆத்மிகா. அந்த இருக்கையில் அமர்ந்ததும் அந்தப் பெண் ஒரு மாதிரியாக அவளை திரும்பிப் பார்த்தாள். அந்த பார்வையில் ஏதோ ஒரு இறைஞ்சுதல் இருந்தது . அந்தப் பெண்ணின் பார்வையில் சொல்ல முடியாத சோகங்கள் தெரிந்தது . அவரைப் பார்த்து ஸ்நேகமாக புன்னகைத்தாள் ஆத்மிகா. அவர் ஒன்றும் வயதான பெண் இல்லை. சுமார் 27 வயது மதிக்கத்தக்கவராக தான் தெரிந்தாள். தன்னைப் பார்த்து புன்னகைத்த ஆத்மீகாவைப் பார்த்த அந்த பெண்ணும் பதிலுக்கு அழகாக சிரித்தாள். இயல்பாகவே நன்றாகப் பேசும் ஆத்மீகா அவரிடமும் பேசத் தொடங்கி விட்டாள்,

ஹாய், நான் ஆத்மீகா. நீங்க ? என்று அந்த பெண்ணை கேள்வியாக பார்க்க, அவளோ பதில் எதுவும் கூறாதவளாய் தன் முகத்தை திருப்பிக் கொண்டாள். அவருக்கு பதில் சொல்ல விருப்பமில்லை போலும், என்று ஆத்மீகா நினைக்க. அந்த பக்கம் ஜன்னல் வழியா வெளியே பார்த்து கொண்டிருந்த அவளது சோகமான முகம் அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆத்மீகா அந்த பெண்ணையே பார்த்துக் கொண்டிருக்க, அந்த பெண் திரும்பிய பாடில்லை.

அது பேசாது. பேசினால் அதோட குட்டு வெளியே வந்துரும்ல. நீ எழுந்துருமா. அதோட உட்காராத. என்று ஒருவர் கூற அவரது முகத்தை ஏறெடுத்துப் பார்த்தாள் ஆத்மீகா. அந்த நடுத்தர வயதுடையவரின் முகத்தில் ஒரு இகழ்சியும் ஏளனமும் தெரிந்தது. அவர் சொல்ல வருவது என்ன என்று ஆத்மீகாவுக்கு நன்றாகவே புரிந்தது.

ஏன் சார், பார்த்தா படிச்சவங்க போல தெரியுறீங்க. மனிதர்கள் அஃறிணை இல்ல, உயர் திணை. அது நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியனும்ன்னு இல்ல. என்று வாழைப்பழத்தில் ஊசியை இறக்குவது போல் வார்த்தையை வெளியே விட்டாள். அந்த மனிதனுக்கு ஆத்மீகாவின் வார்த்தைகள் சாட்டையால் அடித்தது போல் இருக்க, அவமானத்தால் அவரது முகம் கருத்தது. ஆத்மீகா தன் அருகே இருந்த பெண்ணிடம் திரும்ப, அந்த பெண்ணும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

அக்கா, இன்னும் நீங்க உங்க பெயர் என்னன்னு சொல்லவே இல்ல. என்று ஒரு பக்கமாக தலையை சாய்த்துக் சாதரணமாக கேட்டாள் ஆத்மீகா. அவள் தன்னை அங்கீகரித்துக் கொண்டதை அறிந்து ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தில் மூழ்கிய அந்த பெண், தனது கனீர் குரல்

என்னோட பெயர் மோகனா. என்று புன்னகையுடன் கூறினாள் அந்த பெண்.

மோகனா, சூப்பர் அக்கா. பெயருக்கு ஏற்ற மாதிரியே நீங்க ரொம்ப அழகு தான். உங்கள பாக்க எனக்கு கொஞ்சம் பொறாமையா இருக்கு போங்க. என்று உண்மையான ரசனையுடன் கூறியவளை பார்த்த மோகனா,

உண்மையாவா சொல்லுற, நான் அவ்ளோ அழகா இருக்கேனா, என்ற மோகனா தன் கையில் இருந்த அலைபேசியில் முன் பக்க கேமராவை ஆன் செய்து ஒரு முறை தன்னை ரசித்துக் கொள்ளவும் தவறவில்லை. இந்த வார்த்தைகளை யாராவது தன்னைப் பார்த்து சொல்ல மாட்டார்களா என எத்தனை முறை ஏங்கி இருப்பாள். அந்த ஏக்கத்தை எல்லாம் தீர்ப்பது போல் இருந்தது ஆத்மீகாவின் வார்த்தைகள்.

நீதான்மா நான் அழகா இருக்கேன்னு சொன்ன முதல் ஆளு. என்று பெரு மூச்சு விட்ட மோகனாவை பார்த்தாள் ஆத்மீகா.

அக்கா, என்னோட நிறுத்தம் வரப் போகுது. நீங்க இன்னைக்கு கண்டிப்பா என்னோட வீட்டுக்கு வரனும். என்றதும் பதறிப் போனாள் மோகனா.

நானா? உங்க வீட்டுக்கா? வேண்டாம் ஆத்மிகா. உன் வீட்டுல இருக்குறவங்க என்ன ஏத்துக்க மாட்டாங்க. அப்றம் உனக்கும் உன் குடும்பத்தார்க்கும் மன வருத்தம் வர நானே காரணமாகிடுவேன். என்று மனதில் எழுந்த சோகத்தை மறைத்து கொண்டு மறுப்பு கூறியவளை முறைத்த ஆத்மிகா,

அக்கா, நீங்க இப்போ என்னோட எங்க வீட்டுக்கு வரனும். இல்லைன்னா நான் உங்களோட சண்ட போடுவேன், அப்றம் பேசமாட்டேன். என்று சண்டையிடும் தொனியில் கூறியவளை கெஞ்சும் பார்வை பார்த்த மோகனா,

ஆத்மிகா நான் இன்னொரு நாள் வரேன்,இன்னைக்கு மட்டும் வேண்டாம். என்ற மோகனாவை இடைமறித்த ஆத்மீகா

போங்க அக்கா, நான் உங்களோட சண்டை. என்று முகத்தை திருப்பிக் கொள்ள, மோகனாவுக்கு  தன் வீட்டை விட்டு துரத்தப்படுவதற்கு முன் தன் தங்கையுடன் செல்ல சண்டையிட்டது நினைவுக்கு வந்தது. லேசாக கலங்கிய கண்களை யாருமறியாமல் துடைத்துக் கொண்ட மோகனா, தொடர்ந்து ஆத்மீகாவை தாஜா செய்ய முற்பட்டாள். அதோடு ஆத்மீகாவின் நிறுத்தமும் வந்து விட்டது. இறங்குவதற்காக எழுந்த ஆத்மீகா, அத்தனை நேரம் தாங்கள் பேசியதை கவனித்துக் கொண்டிருந்த  சகபயணிகளை ஒரு பார்வை பார்த்தவள், எதைப் பற்றியும் யோசிக்காமல் மோகனாவின் திடமான உறுதியான கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே அவளுடன் பேருந்திலிருந்து இறங்கினாள்.

ஆத்மீகா நான் சொல்லுறத கேளு. நான் உன்னோடு வந்தால், உங்க வீட்டில் உள்ளவர்கள் உன்ன திட்டுவாங்க. என்று சோகமாக கூறிய மோகனாவின் முன் கையை கட்டிக் கொண்டவளாக நின்ற ஆத்மீகா,

ஏன் திட்ட போறாங்க? நான் என்ன தவறா செய்ய போறேன்? சொல்லுங்க அக்கா. என்றவளுக்கு பதில் கூற முடியாமல் திக்கி திணறியவளாக,

அது இல்ல ஆத்மீகா. என்ன மாதிரியாவனவங்க, என்றவளை இடைமறித்த ஆத்மீகா,

உங்களுக்கு என்ன அக்கா. ஒரு ஆண் உடல் அளவில் பலமானவன். ஆனால் ஒரு பெண் மனதளவில் பலமானவள். ஆணைப் போல பெண்ணுக்கு உடல் பலம் இல்லாமல் இருக்கலாம். அதே மாதிரி பெண்ணைப் போல ஆணுக்கு மன பெலம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஆணைப் போல உடல் பலமும் பெண்ணைப் போல மன பெலமும் இருக்குற நீங்க தான் மனித இனத்தோட சிறந்த பரினாமம் அக்கா. என்ற ஆத்மீகாவை பார்த்து விரக்தியாக சிரித்தாள் மோகனா.

என்ன தான் இருந்தாலும், தாய்மை தானே பெண்ணுக்கான சொத்து. அது இருந்தா மட்டும் தானே இந்த சமூகம் ஒருத்தர பெண்ணா அங்கீகரிக்குது. இதுல எங்க எங்களோட உணர்ச்சிகளுக்கு மதிப்பு இருக்குது ஆத்மீகா. என்று கலங்கிய கண்களுடன் கூறியவளின் கையை ஆதரவாகப் பிடித்தாள் ஆக்மீகா.

அக்கா, குழந்தை பெற்றுக் கொள்வது தான் தாய்மையின் அடையாளன்னு யாரு சொன்னது? என்னோட வாங்க அக்கா. உங்களோட இந்த கேள்விக்கான பதில் எங்க வீட்டுல தான் கிடைக்கும். என்றவள் மோகனாவின் கையை பிடித்து தனது வீட்டுக்கு இழுத்துச் சென்றாள்.

வீட்டில் சோபனா வழி மேல் விழி வைத்து வாசற்படிலேயே காத்திருந்தார். இது அவரது செல்லமகள் வரும் நேரம். இன்று முழுவதும் அவள் தனியாக போவதை நினைத்து கொண்டே இருந்தவருக்கு, எப்போது அவள் வருவாள், எப்போது அவளை காணலாம் என்று இருந்தது. அவரது எதிர்பார்ப்பை பொய்யாக்காத வண்ணம் தெரு முனையில் அவள் வருவது தெரியவே அவரது முகம் மலர்ந்தது. சோபனாவின் கண்களில் அவளுடன் வந்த மோகனா கூட தெரியவில்லை. வாசலிலேயே காத்திருந்த சோபனாவை ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள் ஆத்மீகா.

நான் அப்பவே நினைச்சேன். என் செல்ல அம்மா என்னை எதிர்பார்த்து வாசலிலேயே காத்திருப்பாங்கன்னு. என்று கூறி தாயின் கண்ணத்தில் முத்தம் பதித்தாள். முத்தமிட்டு தாயிடமிருந்து விலகியவளுக்கு அப்போது தான் மோகனா அங்கு இருப்பது மண்டையில் உரைத்தது.

ஆங்... அம்மா இவங்க மோகனா அக்கா. பஸ்ல எனக்கு கிடைச்ச அக்கா. என்று தாயிடம் அவளை அறிமுகம் செய்தவள், மோகனாவிடம் திரும்பி,

அக்கா இவங்க தான் என்னோட அம்மா. பெயர் சோபனா. என்றதும் சோபனா மோகனாவைப் பார்த்து பாசத்துடன் புன்னகைத்தவள், தாய்மை கசிந்துருகும் குரலில்,

மோகனா எப்படியம்மா இருக்க, உள்ளே வாம்மா. என்று மோகனாவின் கையை பற்றி வீட்டுக்குள் அழைத்து சென்றார் சோபனா. மோகனா அவர் இவ்வாறு அன்பாக உபசரிப்பார் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவரது அன்பிலும், அவர் தன்னை இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டதிலும் நெகிழ்ந்து போயிருந்தாள் மோகனா. மோகனாவை வரவேற்றவர் அவர்களுக்கு குடிக்க குளிர்பானம் கொடுத்தார். ஏற்கனவே உணர்ச்சியின் மிகுதியில் இருந்த மோகானாவின் கண்கள் லேசாக பனித்தது. யாருமறியாமல் அதை துடைத்துக் கொண்டவள் சோபனா கொடுத்த குளிர்பானத்தை குடித்தாள்.

எங்கமா தங்கியிருக்குற? என்று கேட்ட சோபனாவை நிமிர்ந்து பார்த்த மேகனா,

பக்கத்துல இருக்குற அஞ்சா நகர் குடியிருப்புல தான் தங்கியிருக்கேன்.

அம்மா, அப்பா குடும்பத்தார் எல்லாம்,  எங்க இருக்குறாங்க? என்று சோபனாவைப் பார்த்து விரக்தியாக புன்னகைத்த மோகனா,

உங்களுக்கு தெரியாதா ஆண்டி ! திருநங்கைகளுக்கு இந்த சமூகத்துல இருக்குற அங்கீகாரம் என்னன்னு. அதுல என் குடும்பமும் விதிவிலக்கு இல்லையே என்றவாறு ஒரு கசந்த புன்னகையை சிந்தினாள் மோகனா.

அம்மாடி, எனக்கு ஆத்மீகா எப்படியோ நீயும் அப்படி தான். அதனால இப்படி ஆண்டியெல்லாம் வேண்டாம். உனக்கு விருப்பம்ன்னா அம்மான்னு கூப்டுமா. என்று சோபனா கூறியதும், அதுவரை அணைகட்டி வைத்திருந்த கண்ணீரெல்லாம் இமைகளை தாண்டி அவள் கண்ணங்களை நனைத்துக் கொண்டிருந்தது. சோபனா பாசமாக அவளது தலையை தடவிக் கொடுத்தார். அடுத்து வந்த சில நிமிடங்களிலேயே அவளை தனது குரும்புகளால் சிரிக்க வைத்து விட்டாள் ஆத்மீகா. மோகனாவின் அழுகை மட்டுப்பட்டதும் சோபனா அவளது கையை பிடித்தவாறே அவளிடம் பேசத் தொடங்கினார்.

இந்த சமூதாயத்துல இருக்குற தடைகளை தாண்டினவங்களுக்கு தான் மரியாதை கிடைக்கும். தாண்ட முடியாம தடுக்கி விழுந்தவங்கள இந்த சமூகம் பரிதாபமா தான் பார்க்கும். நமக்கு தேவையானது பரிதாபம் இல்லை, மரியாதை. சகமனிதனுக்கு கொடுக்கப்படுற அங்கீகாரம் தான் நமக்கு தேவை. நமக்கு தேவையானத யாரும் தர மாட்டாங்க. நாம தான் எடுத்துக்கனும்.

என்ற சோபனாவை பார்த்து அழகாய் சிரித்தாள் மோகனா. நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்தனர் மூவரும்.  சொந்தங்களின் புறக்கணிப்பால்  காயமாகிப்போன மோகனாவின் இதயத்தில் சோபனா மற்றும் ஆத்மீகாவின் அன்பு மயிலிறகால் வருடுவது போல இருந்தது. நேரமாவதை உணர்ந்த மோகனா அவர்களிடம் விடை பெற, சோபனாவும் ஆத்மீகாவும் அவளை வாசல் வரை சென்று வழியனுப்பி வைத்தனர். அந்த தெருவில் சென்றவர்கள் மூவரையும் ஒரு மாதிரியாக பார்த்து வைக்க அதை அம்மூவரும் கண்டுகொண்டது போல தெரியவில்லை.

மோகனா அடிக்கடி அம்மாவ பார்க்க வரனும் சரியா என்று கூறிய சோபனாவுக்கு சரி என்பது போல தலையாட்டிய மோகனா பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க துவங்கினாள். தெருக்கோடிக்கு சென்று விட்டவள் இன்னும் வாசலில் நின்று தன்னை பார்த்துக் கொண்டிருக்கும் சோபனாவுக்கும் ஆத்மீகாவுக்கும் கையை அசைத்து விட்டு, அங்கிருந்து மறைந்தாள்.

பல வருடங்களாய் மோகனாவின் மனதை அரித்துக் கொண்டிருந்த  கேள்விக்கு இன்று விடை கிடைத்தது.

18 வருடங்களுக்கு முன் அலங்கோலமாய் காட்சியளித்த  குப்பை தொட்டியை அலங்கரித்தவாறு அழுது கொண்டிருந்த குட்டி தேவதையை, தன் கையில் எடுத்து, ஆத்மீகா என்று பெயரிட்டு, அதற்கு தாயாகி, அதை தாலாட்டி சீராட்டி பாலூட்டி வளர்த்த தாய் சோபனா ஒரு திருநங்கை.

தாய்மை பெண்களுக்கு மட்டும் சொந்தமல்ல. தன்னைப் போன்ற திருநங்கைகளுக்கும் தான். என்பதை உணர்ந்து கொண்டாள் மோகனா.

அன்புடன் ...

எபின் ரைடர்..

© All Rights Reserved