...

8 views

1998 ஆம் வருடத்தில் ஒரு நாள்
1998 ஆம் வருடத்தில் ஒரு நாள்...



அன்றைய தினம் அதிகாலையில் துயரச்  செய்தியுடன் வந்தார் எனது மாமா. ஆம். திருவனந்தபுரத்தில் உள்ள எனது பாட்டியை எமன் சொந்தமாக்கி கொண்ட செய்தி தான் அது.

தமிழக கேரள எல்லையில் இருந்து தமிழ்நாட்டில் ஏறத்தாழ பதினைந்து மைல் தொலைவில் உள்ள இரணியல் அரண்மனை அருகில் தான் நாங்கள் வாழ்ந்து வந்தோம்.

             பாட்டியை இறுதியாய் பார்க்க  நான் எனது பெற்றோருடன் திருவனந்தபுரம் செல்ல கேரள அரசு  பேருந்தில் ஏறினேன். பாட்டியை பார்க்குமுன் எமன் நம்மையும் அழைத்துக் கொள்வானோ என பயப்படும் அளவுக்கு இருந்தது அந்த பேருந்தின் வேகம்.  இறைவன் அருளால் ஒன்றரை மணி நேரத்தில்  திருவனந்தபுரம் சென்றடைந்தோம்.

               மதியம் இரண்டு மணியளவில் அங்குள்ள மின்சார சுடுகாட்டில் தான் நான் பாட்டியை இறுதியாக பார்த்தேன். ஆம். அடக்கம் முடிந்தது.

இனி தான் இதை விட மிகப் பெரிய சம்பவங்கள் நடக்க போகிறது என நானே அறிந்திருக்கவில்லை.
               
               சாயங்காலம் நாங்கு மணி முதல்  எமது சொந்தங்களில் பலர் தங்களை இந்நாட்டின் சொந்த குடிமக்கள் என நிருபித்து கொண்டிருந்தனர். அதன் இறுதியாக குடித்ததெல்லாம் வெளியில் வந்தது சிலருக்கு.  குடித்த  சிலரை குளிப்பாட்ட வேண்டியதும் இருந்தது.

            இரவு பத்து மணி.

முக்கிய சம்பவம் இனி தான் நடக்க போகிறது.

               எங்கோ கேட்கும் நரியின் ஊளை, அமாவாசை இருட்டு என எதுவும் இல்லாத அமைதியான இரவு அது.

அன்று பதினைந்து வயதான நானும் என் தாயும் பாட்டி வீட்டின் முன் அறையில் ஜன்னலை ஒட்டி படுத்திருந்தோம். மற்ற உறவினர்கள் எல்லாம் வீட்டினுள் தூங்க சென்றுவிட்டனர்.

               அந்த முன் அறை ஜன்னல் கம்பியில் தான் நாயை கட்டி வைத்திருந்தார்கள். பாட்டி வீட்டுக்கு மிகப் பெரிய கேட் உண்டு. 

               இரவு பன்னிரண்டு மணி தாண்டி இருக்கலாம். பேய்கள் நடமாடும் நேரம் என கூறுவார்கள்..   ஒரு ஆள் அந்த ஜன்னல் பக்கம் நின்று கொண்டு என்னை "வா வா" என சைகையில் அழைக்கிறார். நானும் "வர மாட்டேன்" என சைகையில் கூறினேன். இந்த நேரம் என் தாயும் எழுந்து விட்டார்.

இந்த நேரத்தில் எனது இன்னொரு பாட்டி வந்து, "ஏதோ தோணிச்சு அது தான் நான் பார்க்க வந்தேன்" என கூறினார்.

      நான் நடந்ததை சொன்னேன்.

எனது சந்தேகம்: 

திருடன் வந்திருந்தால் நாய் குரைத்திருக்கும்.
அல்லது கொத்தோடு எடுத்திருக்கும் அவன் சதையை. அல்லது முடித்திருக்கும் அவன் கதையை.

அப்போ.. வந்தது யார்?
ஒரு வேளை என்னை அழைத்தது அதுவாக இருக்குமோ....?


உங்கள் கருத்தை பதிவிடுங்கள்.

- அப்துல் ஹலீம்
© Dr. Abdul Halim