...

8 views

நெடிய கழியும் இரா 3
"நாம் விலங்குகள்" என்கிறார் டார்வின். "நாம்‌ விலங்குணர்ச்சிகளால் தீர்மானிக்கப்படுகிறோம்" என்கிறார் சிக்மண்ட் ஃப்ராய்ட்.

      டார்வினின் கூற்றுப்படி அனைத்து உயிரினங்களின் முதன்மை இலக்கு உடல் இருப்புதான். அதற்கேற்பவே அமைந்துள்ளன அவற்றின் பொறிகள். ஒவ்வொரு பொறிக்கும் உள்ளுணர்ச்சி இருப்பதெனவும், அதை தற்காப்புணர்ச்சி மற்றும் இனப்பெருக்க உணர்ச்சிகள் எனும் இரு வகைக்குள் அமைக்கிறார் .

      ஃப்ராய்டின் உளவியலும் உள்ளுணர்ச்சி  உளவியலே. ஃப்ராய்ட் தனது இருமையவாத உள்ளுணர்ச்சி கோட்பாட்டிற்குள் பாலுணர்ச்சியை முதன்மையாகவும் அதற்கு துணை உணர்ச்சியாக எதிர்மை அடிப்படையில் சாவுணர்ச்சியையும் கொள்கிறார்.
- தி.கு இரவிச்சந்திரன் ஃப்ராய்ட் யூங் லக்கான் அறிமுகமும் நெறிமுகமும் நூலிலிருந்து

கௌதமன் கைகளை நீட்டி மடக்கி வாவென அழைக்கவும் இவ்வளவு நேரம் மிரட்சியுடன் நின்றிருந்த குழந்தைகள் இரண்டும் ஓடிவந்து அவனை அணைத்துக் கொள்ள அவன் அவர்களை ஆதரவாக தழுவிக் கொண்டான்.

குழந்தைகள் இருவரும் அழுதபடியே இருக்க, அவர்களை தன்னிடமிருந்து பிரித்தவன் சொன்னான்
"போய் அம்மா முகத்தை கடைசியா பார்த்துகிடுங்க"

குழந்தைகள் இருவரும் ஒருசேர ம்ஹூம் என்று தலையசைத்து மறுக்கவும், கனிவாக கேட்டான்...
"ஏன்டா...?"

"பயமாயிருக்கு' ப்பா" என்று தந்தையை இறுக்கிக் கொண்டாள் அவனது 14 வயது மகள் நந்திதா. "எனக்கும் எனக்கும்.." என்று அக்காவைத் தொடர்ந்து தானும் தந்தையைக் கட்டிக் கொண்டான் 12 வயது மகன் நரேந்திரன்.

என்ன சொல்லி இந்த குழந்தைகளின் பயத்தை போக்குவது? என்று அவனுக்கு புரியவில்லை. இருந்தும் குழந்தைகளை சமாதானம் செய்யும் பொருட்டு இதமாக வார்த்தைகளாக  கோர்த்து சொன்னான்
"அப்பா இருக்கும் போது எதுக்கு பயம். வாங்க நான் கூட்டிட்டு போறேன்"

"ம்ம்"காரம் கொட்டிய பிள்ளைகளை மனைவியின் சடலத்துக்கு அருகே அழைத்துச் சென்றான். உடல் முழுவதும் வெள்ளைத் துணியில் சுற்றியிருக்க, தீயினுக்கு இரையானது போக  எஞ்சிய முகம் மட்டும் தான் பார்வைக்கு தெரிந்தது.

அவள் தான் உங்களது அன்னை என்று அடையாளம் காண இயலாத முகத்தினை தந்தை கூற, கருகிய முகத்தில் தங்களது பாசமிகு அம்மாவை தேடித்தேடி ஏமாந்து போய் தந்தையை இறுக்கிக் கட்டிக் கொண்டனர் பிள்ளைகள்.

"லேட்டாகிறது தெரியலையா ... இன்னும் எவ்வளவு நேரத்துக்கு சவத்தை வெச்சிருக்கிறது. சட்டுபுட்டுனு எடுக்கறதுக்கான காரியத்தை பாருங்கப்பா..." என்று ஊர் பெரியவர் ஒருவர் ஞாபகப்படுத்தவும், யார் கொள்ளி வைப்பது என்ற அடுத்த கேள்வி  நின்றது.

மகன் இருந்தாலும் சிறிய வயது...