...

16 views

Nostalgic காதலி...
அவள் ஒரு ஐ லவ் யூ பைத்தியமாக இருந்தால்.
அவளுக்கு எத்தனை முறை
ஐ லவ் யூ சொன்னாலும் போதவில்லை..

நாள் முழுவதும் நான் கண் இமைக்கும்
எண்ணிக்கையை விட அதிகமான ஐ லவ்
யூ க்கள் சொன்னாலும் சம்மதமே..

வாட்ஸ்அப் வருவதற்குள் வந்த காதலாகி
போனதால் ,குறுஞ்செய்தியின் வாயிலாகவே
காதலை பரிமாரிக்கொள்ளலானோம்..

தப்பித்தவறி நிர்ணயிக்கப்பட்ட 100இல்
ஒரு குறுஞ்செய்தி அவள் அலைபேசியை
அடையாத வேளையில் நான் தொலைந்தேன்..

பிறக்காத குழந்தைக்கு பெயர்களும் வைத்து,
காணாத பிள்ளைகளை பள்ளியிலும் சேர்த்து
அடையாத தாய்மை அன்றே அடைந்திருந்தாள்..

செல்பிகள் இல்லா வேளையானதால் ஒற்றை
புகைப்படம் தந்திருந்தால்,அதை இலட்சம்
முறை நான் ரசித்து கொண்டிருந்தேன்..

அதிகபட்ச தொடுதலாக அவள் தந்திருந்த
அனுமதி என்னவோ செல்லமாய் கிள்ளிட
கண்ணங்கள் மட்டுமே,அதுவும் சில நொடிகளே..

உச்சபட்சமாய் ஒரு முறை மட்டும் உதட்டு
முத்தமொன்று..அது முடிந்து ஒரு வார
கோபமெல்லாம் ஒரு தனிக்கதையே..

பைத்தியக்காரத்தனத்தில் ஒன்றாக அவளது
வியர்வை படிந்த கைக்குட்டை ஒன்று இன்றும்
என் கையில்.அவள் மணமென்று நம்பியே..

90களின் காதலானதான்,முதல் முறை
நான் சொன்ன காதலென்பது 16 பக்கம்
கொண்ட ஏ4 தாளின் வாயிலாகவே..

அந்த பைத்தியக்காரியோ அந்த பதினாறு
பக்கத்திலும் பௌடர் இட்டு வைத்திருந்தது
ஒரு நாள் முழுவதும் எங்கள் பேச்சானது..

அந்த கருப்பு சல்வார் இன்றும் நினைவில்
இருக்கிறது.முதன்முறை நான் வாங்கி
தந்ததால் அவளுக்கு பிடித்ததாகி கொண்டது..

நாம் கண்ட திரைப்படத்தில் சேராத காதல் கண்டு
அவள் கொண்ட சோகமுகம் நான் துடைத்துவிட்ட
கண்ணீரும் இன்றும் கூட காயவில்லை

முதல்முறை என்னிடம் அவள் பகிர்ந்துகொண்ட
அந்த மாதவிடாய் கால வலி கூட இன்னும்
என்னுள்ளே எங்கேயோ வலிக்கிறது...

இத்தனை சுகமான நிகழ்வுகளை தந்து
பின்னே ஓர் நாளில் முழுவதுமாய் எனை
அவளும் பிரிந்துவிட்டாள்..

கற்பனையில் பெற்றெடுத்த பிள்ளையோடு
சேர்த்து என்னை திக்கற்று வலிகளோடு
புலம்பிடவே வழி வைத்தாள்..

எனை நீங்கி வலி கொள்ளும் உன் வலி
நான் அறிந்ததனால்,அவ்வலியும் சேர்ந்து
தானே பெரும் வலியாய் வலிக்கிறது..

வாழ்கையதின் விசித்திரத்தில் ஒன்று
நான் சொல்வதென்றால் அன்றும் இன்றும்
நான் கொண்ட பிரார்த்தனையை கூறிடலாம்..

அன்றெந்தன் பிரார்த்தனையில்,என் வாழ்வில்
அவள் வேண்டும்,அவள் வாழ்வாய் நான்
வேண்டும் என்றாக வேண்டி வந்தேன்..

இன்றெல்லாம் இறைவனிடம் வரமாய் நான்
கேட்பதெல்லாம்,எனை மறக்கும் அளவுக்கு
அவள் கணவன் வேண்டுமென்றே.....

© பினோய் பிரசாத்