வாழ்விழக்கும் வாக்குறுதிகள்😶
வாழ்வின் பெரும்பகுதியை வாக்கு கொடுப்பதிலும் அதை நிறைவேற்றுவதிலும் தான் கழிக்கிறோம்,அப்படியா என்று யோசிப்பவர்கள் வாக்குறுதியை கொடுப்பவர்களாக மட்டும் இருந்திருக்கக்கூடும்.எல்லோரும் எல்லா சந்தர்ப்பங்களிலும் சொன்னபடி நடக்கிறோமா என்றால் நிச்சயம் இல்லை தான்,ஆனால் எல்லா நேரங்களிலும் அதை இயல்பாகக் கடந்துவிட முடிகிறதா நம்மால்! வாக்குத் தவறியதால் வாழ்க்கையை முடித்துக்கொண்டவர்களும் வாக்குத் தவறியவர்களால் வாழ்விழந்தவர்களும் இங்கு ஏராளம்.
மனமுடைந்து இங்கே நிகழும் மர்மமான பல மரணங்களுக்கு தற்கொலை எனப் பெயர் சூட்டிவிட்டோம் , அதன் ஆழங்கள் அனைத்தையும் அளக்க முடியுமானால் விளங்கிவிடும் நமக்கு அவை எதுவும் பலவீனத்தின் பலிகள் அல்ல,துரோகத்தின் துணைவடிவங்கள் என்று. இதில் ஏமாற்றும் எண்ணமில்லாமல் இருதலைக்கொல்லிகளாக வாடி வாழ்பவர்களும் உண்டு, பாவப்பட்டவர்களாக இவர்களைத்தான் பகரமுடியும் என்னால், வழியற்ற சுற்றுச்சுவருக்குள் வான்வழி விடப்பட்ட யானையைப்போல் சிக்கிக்கொண்டு முழி பிதுங்குகிறார்கள்,சுவரை இடிக்கும் பலமிருந்தும் மனமில்லாமல் தவிக்கும் தருணத்தில் எவ்வளவு பகுத்தறிவு பேசினாலும் விதியை இழுக்காமல் விட்டுவிட முடிவதில்லை!
இதெல்லாமும் தான் வாழ்க்கையின் இயல்பு ,இன்பம் மட்டுமே இருந்துவிடுமா என்று வக்கணை பேசுபவர்கள் எல்லாம் வலி இதுவென அறியாதவர்கள்!!இதையெல்லாம் கேட்க வேண்டியிருக்கிறதே என்று நொந்து போகும் என்னால் என்ன சொல்லிவிட முடியும்?
"என்ன செய்வது எல்லாம் விதி"😅😅😅 அவ்வளவு தான்😶