...

1 views

தாயன்பு தனிமைத் தளிர்
உன் வாழ்வை சோலையாக்கிய
இந்தப் பால் மணம் மாறா
பச்சிளங்குழந்தையின் வாழ்வை
நீ காலத்துக்கும்‌ பாலையாக்கி விட்டு
பறந்து சென்றாயே....
பாதியில் இறந்து பட்டாயே....

அம்மா வந்து தூக்குவாள் எனத்
தொட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கும்
அந்தப் பச்சிளம்பிஞ்சுக்கு
எப்படி சொல்வது
உன் அம்மா தூக்கிட்டுக்கொண்டாளென....


அன்னை மார்பின் கதகதப்பில்
அணைந்து கொண்ட
பச்சிளம் தளிர்
இத்தனை அனலை எப்படித் தாங்கும்....
ஆண்டாண்டு காலம் அவளை அன்பு செய்ய வேண்டிய
அம்மா நீயே ஆறே மாதத்தில்
அந்தப் பச்சை மண்ணை
விட்டுப் போனது நியாயமா...

தாயின் கதகதப்பில்
வாழ வேண்டிய காலத்தில்
கதறவிட்டுக் கடந்து சென்றுவிட்டாயே....
இப்படிக் கண்களை மூடி விட்டாயே..

கண்களை இறுக்கி மூடிக் கொண்டு
பாலுக்கு அழும் குழந்தையிடம்
இனி உன் அம்மா கண் திறக்கவே மாட்டாள் என எப்படிச் சொல்வது..

ஆறே மாதத்தில்
அன்னையின் ஆராரோ
கேட்டுறங்க வேண்டிய காலத்தில்
ஆறாத வடுவொன்றை ஈந்து விட்டு
இவ்வுயிரை மாய்த்துக் கொண்டாயே...

ஒவ்வொரு கணமும் மனதிலும்
கையிலும் கண்ணிலும் சதா ஏந்தி ஏந்தி அழகு பார்க்க வேண்டிய அம்மா நீயே இல்லாமல் போனாயே
இனி எத்தனை பேர் இருந்து என்ன பயன்....?
தரணியில் எத்தனை பேர் இருந்தாலும்
அது தாயன்புக்கு ஈடாகுமா...


ஈட்டியே வந்து இதயத்தைத் துளைத்திருந்தாலும்
தூங்கும் உன் பிள்ளை முகம் ஒருநிமிடம் பார்த்திருந்தால்
தூர விலகியிருக்குமே...
உன் துக்கமெல்லாம்...

ஆனால் நீயோ எங்களையெல்லாம்
துயரில் ஆழ்த்தி விட்டு
மீளா இடத்துக்கு வாழாமல் போய்விட்டாயே....

உன் வாழ்வில்
என்ன நிகழ்ந்திருந்தாலும்
வாழ்ந்திருக்கலாம் நீ
உன் பச்சிளம் குழந்தைக்காகவேனும்....

we miss you சால் ( சாலினி)💔😢🥺

#poetry

@முத்துரம்யா