...

9 views

நீங்கள் கேட்டவை
கடைசியில் வந்த
தகவலின்படி...

என் கவிதையில் நீங்கள்
என்னை தேடுவதாகவும்
புரிந்து கொண்டதாகவும்
தெரிந்துகொண்டதில் திருப்தியும்
மகிழ்ச்சியும் நிலவுவதால்
மற்றவை பின்னர்... என்றிருந்தது.

உண்மைக்கு மாறான அவை
திட்டங்கள் கொண்டவை.

ஒரு கவிதையில் நான் முயல்வது
உங்களை அழிப்பது மட்டும்.
உங்கள் இருப்பை நிதானங்களை
அவமதித்து கேலி செய்வது.

கொண்டாட்டங்களை ரத்து செய்து
மரபுகளில் மதுவூற்றி எரிப்பது.
நம்பிய எவ்வொன்றையும்
சிதிலமாக்கி நிர்வாணமாக்குவது.

உங்கள் பரிபூரண நிம்மதியை
சுட்டுப்பொசுக்குவது.
உங்களின் ரணங்களுக்கு
உங்களையே
பலிகொடுக்க ஆவலாயிருப்பது.

எது உங்கள் அடிமைத்தனமோ
அதையே விடுதலை புரட்சி
என நம்பவைப்பது.

பின்னரும் வாசித்தால்...

உங்களை குழந்தையாக்கி
உங்களிடமே கொடுத்து விடுவது.

© sparisan