...

4 views

பேசும் பெண்ணியம்🖤
சீதை முறைக்கும் போது
இராமன் தீக்குளித்துவிட
வேண்டியது தானே!
கோவலனுக்கு குற்ற உணர்வு
கொலைகளப்பட்டு விட்டான்!
தமயந்திக்கு திருமணம் நடக்கட்டும்
நளனே நீ நடுவில் செல்லாதே!
ஆம் சகுந்தலைக்கு மகன் இருக்கிறான் தான்
உறவைப் புதுப்பிக்க வராதே துஷ்யந்தா,
உனக்கும் அவனுக்கும் சம்பந்தமில்லை!
மேனகையே நீ சொல் விசுவாமித்திரரை பிடித்திருக்கிறதா??
சமத்துவம் பேசும் சனாதனவாதிகளே
ஆடுகள் அறிந்தே இருக்கின்றன
ஓநாய்களின் அழுகைக் காரணத்தை!
நனைந்து நலிந்து கூட போகிறோம்
தயவுசெய்து நடிப்பதை நிறுத்துங்கள்,சகிக்கவில்லை!
அன்பு பொழியும் அம்மாக்களே
மகனுக்கு சொல்லுங்கள்
சதையைத் தேடாதே மகனே
பின்னால் இரத்தம் இருக்குமென்று!
அடக்கம் கற்பிக்கும் அப்பாக்களே
வரையறைகளையெல்லாம் வழித்துப் போடுங்கள் மகனைப் போல் மகளும் வாழட்டும்!
பெருமைகளையே பேசாதீர்கள்
இன்று கூட ஒரு பெண் பலவந்தத்திற்கு ஆளானாள்!
கோபம் கூட ஆண்களுக்குத் தான்
அடடா அருமையான அநியாயம்!
கற்பை மட்டும் எங்களுக்கென கற்பித்து விட்டீர்கள்
ஏன் அதையும் காத்து வையுங்கள்!
ஆபிஸுக்கு அவளும் தானே போகிறாள்
ஆளுக்கு பாதி செய்யலாமே
அறைகளின் அழுக்கெல்லாம் உங்களாலும் தான் ஏற்பட்டிருக்கும்!
தியாக கைகங்கரியங்களை நீங்கள்
கூட செய்யலாம் தவறில்லை!

வார்த்தை சமரில் எந்தப்பயனும் இல்லை,நினைவிருக்கட்டும்
சமத்துவம் இன்னும் சந்தியைத் தாண்டவில்லை!!!!

தேர் சற்று பெரியது தான் அண்ணாக்களே அந்தப்பக்கம் பிடியுங்கள்,இன்னும் கொஞ்சம் முன்னே செல்லட்டும் இந்த நூற்றாண்டு!