இன்பச்சிறகு🖤
வாழ்க்கை துன்பத்தையே தருகிறது என்று சொல்லி அழுவதிலோ அல்லது அதன் வலிகளை மட்டும் வார்த்தைகளாக வார்ப்பதிலோ எனக்கு எப்போதும் உடன்பாடில்லை.
நம்மால் வாழ்க்கை என வரையறுக்கப்பட்டது ஒரு பொருளோ ஒரு சூழ்நிலையோ அல்ல மேலும் அதை இன்ப துன்பங்களின் கலவை என்ற பொதுப்படையான இயல்பான சித்தாந்தமாக சித்தரிப்பதிலும் எனக்கு ஆர்வமில்லை.வாழ்வியல் என்பது அந்தந்த சூழலில் நாம் அதீதமாக சார்ந்திருக்கும் மனிதர்களைப் பொருத்தே அமைந்துவிடுகிறது,இது ஏதோ ஒரு அனுமானத்தில் புறப்பட்ட வார்த்தை என்று புறந்தள்ளுவதற்கல்ல,நாம் அழகான இன்பத்தையோ ஆழமான துன்பத்தையோ அனுபவிக்கும் போது இந்த வரிகளை பொருத்திப்பார்த்தால் புரிந்து விடும்,நம்மால் எதிர்கொள்ளப்படும் ஒவ்வொரு உணர்வுகளும் நம்மவர் என்று நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களாலோ ஏதோ ஒரு வகையில் நம்மை ஆக்கிரமித்தவர்களாலோ தான் பெரும்பாலும் நிகழ்கின்றன.அந்த அன்பாளர்களின் ஒவ்வொரு செய்கையிலும் நம் அழுகையும் ஆனந்தமும் சம்பந்தப்பட்டிருக்கிறது.சக மனிதன் என்ற இயல்பை தாண்டி நாம் வைக்கும் நேசத்திற்கு நிச்சயம் அவர்களை பொறுப்பாளர்களாக ஆக்க முடியாது.என் இன்பத்தின் உரிமம் எவரிடத்திலோதான் நிச்சயம் இருக்கும். மனத்திற்கு இணக்கமான அந்த இம்சைக்காரர்கள் தான் எப்போதும் நம்மை இயக்கிக் கொண்டிருப்பார்கள். இதெல்லாம் தான் மனித இயல்பு ஆம் நிச்சயமாக சொல்ல முடியும் என்னால்!
சிலர் சிரிக்கும்போது தான் இன்பத்திற்கு சிறகு இருக்கிறதென்பதையும்,அது வானளாவி தாவி பறக்கும் தன்மை கொண்டதென்பதையும் ஆச்சரியமாக பார்க்கிறேன் நான், ஆம் அதிசயம் தானே!!!