...

6 views

அப்பா...
எல்லோருக்கும் அப்பா தான் ஹீரோ. எனக்கு அப்படி சொல்லிக் கொள்ள அப்பா இல்லை. ஆனா அவரு இந்த உலகத்துல இருந்திருந்தா நான் சில சந்தோசங்களை தொலைச்சிருக்க மாட்டன். எல்லாருக்கும் போல எனக்கும் அப்பா இருக்கணும் என்று நிறையவே கனவுகள் சின்ன வயசில இருந்தது.அப்பா என்றது எனக்கு எல்லாம் ஒரு ஏக்கம் என்றும் சொல்லலாம் எவ்வளவு பேர் வந்தாலும் கூட அந்த இடத்தை யாராலும் தர முடியாது. பல பேர்ட அப்பாவை பார்த்திருப்பன். பள்ளிக்கூடத்துக்கு பிள்ளைகளை கொண்டு வந்து விட்டு கூட்டிட்டு போவாங்க. அவங்களுக்கு பிடிச்சதை வாங்கி குடுக்கவும் எல்லாம் அழகா பார்த்து பார்த்து செய்வாங்க.எனக்கு இப்படி செய்ய யாரும் இல்லைனு நான் சொல்லேல ஆனாலும் அதை எல்லாம் அப்பா செய்யிற போல வராது இல்லையா!
எனக்கு தெரிந்து அவரின்ட முகம் கூட எனக்கு ஞாபகமில்லை. போட்டோல பார்த்திருக்கன் நேர்ல பார்த்த என்ற ஞாபகங்கள் கொஞ்சம் குறைவு தான்.
அப்பா இல்லை என்றதால அம்மா தான் வேலைக்கு போகணும் என்று வேலைக்கு போக தொடங்கிட்டாங்க. அம்மா வேலைக்கு போய் வரும் வரைக்கும் நாங்க பார்த்திட்டு இருப்பம்.அம்மாக்கு ஒரு நாள் லீவு வந்தால் கூட எங்களுக்கு எல்லாம் நிறையவே சந்தோசம்.
அம்மா எங்களோட ரொம்பவும் சிநேகிதமானவங்க. நாங்க எல்லாருமே கூடுதலாக நகைச்சுவை போல தான் கதைச்சுக் கொள்ளுவம். சில நேரங்களில் கோபமாயும் பல நேரங்களில் எங்களோட எதிர்காலத்தின் மேல் பயமாயும் இருப்பாங்க அப்படியே காலம் போய்க் கொண்டிருக்கு. நாங்க புதிதாய் ஒரு இடத்துக்கு போகேக்குள்ள யாரும் எங்களிட்ட அப்பா பற்றி கேட்கும் போதெல்லாம் என்ன சொல்ற என்று தெரியாம சொல்லிட்டு அப்பா இறந்திட்டாரா என்று கேட்கிற தருணங்கள் எல்லாம் மனச அப்படியே உடைச்சு எறியும்.எல்லாருக்குமே சில கஷ்டமான சூழ்நிலைகளோட தான் இந்த வாழ்க்கை நகருது. ஏதோ சில சந்தர்ப்பங்கள் நம்மளோட கூட இல்லாதவங்கள ஞாபகப்படுத்தி கஷ்டத்தையும் கொடுக்க செய்யுது.
ஆனாலும் என்னோட வேதனையான தருணங்களில கூட எனக்கு துணையாய் இருக்கிறதும் அப்பா தான். மனசுக்குள்ள நானாகவே அவரோட கதைத்துக் கவலை எல்லாத்தையும் கொட்டிட்டு இருப்பன். நாங்க இழந்தவங்க எங்களோட இப்போ இல்லாம இருக்கலாம் ஆனால் அவங்களயே மீண்டும் ஒரு நபராய் உருவாக்கிற சக்தி எங்களோட எண்ணங்களுக்கு மட்டும் தான் இருக்கிறது.
© kavi Seelan