...

7 views

நவீன மண்டையோடுகள்
நவீன மண்டையோடுகள்

சாதியைத் தலையில் ஏற்றி வைத்தே
சலங்கை கட்டி ஆடிடுவோம்...
சூது பற்பல புரிந்திடுவோம்
சுயநல மதுவினை அருந்திடுவோம்..

வறியவன் தன்னை வீழ்த்துவதில்
வலிமை நாங்கள் கண்டிடுவோம்...
வறுமையுற்றவன் எதிரினிலே
வகைவகையாய் உணவுண்டிடுவோம்...

வஞ்சப் பேயை வாழ்வெல்லாம்
நெஞ்சில் வைத்துத் துதித்திடுவோம்...
வணங்கும் காதலை தினம் தூற்றி
வசைகள் பாடி மிதித்திடுவோம்...

பெண்ணே ஒழுக்கம் காத்திடணும்- எனப்
பேசிக் கொண்டே உயிர்குடிப்போம்
பிஞ்சுக் குழந்தை என்றாலும் - அதில்
பெண்மையைப் புசிக்கத் துடிதுடிப்போம்...

அன்பெனும் அன்னையை அழித்திடவே
அறிவினை நாங்கள் தீட்டிடுவோம்...
அடுத்தவர் மகிழ்ச்சியைக் கண்டுவிட்டால்
அதனிலும் தீயை மூட்டிடுவோம்...

நன்றாய்க் கேட்பீர் உறவுகளே! - நாங்கள்
நவீன மண்டை ஓடுகளே...
© த.கிருத்திகா