...

0 views

கம்பிவேலி
கடன் வாங்கியேனும்
கம்பி வேலி இடுகிறான்
விவசாயி
காட்டு வேலைக்கு ஆள் கிடைக்காததாலும்
அப்படியே ஆள் கிடைத்தாலும்
சம்பளம் ரூபாய் ஆயிரம்
கேட்பதாலும்

தனி ஆளாக
சரியான பருவத்தில் முள் வெட்டி
முந்தைய பருவத்தில் ஆடு முட்டிய
கடவை ( சந்தை) எல்லாம்
சரிசெய்யத் திராணியில்லாத
கையாலாகாத் தனத்தைச் சரிக்கட்டவும்

முக்கியமாக
இடைவேலிக்காரர் பிரச்சனை இல்லை என்ற நிம்மதிக்காகவாவது
இம்முறை கம்பி வேலி போட்டு விட வேண்டும் என்று சொல்லி

சரி கால மாற்றத்துக்கு ஏற்ப
நாமும் மாறிக் கொள்ள வேண்டியதுதான் என்று சமாதானம் செய்து கொண்டு

ரொக்கமாகப் பணம் இல்லையென்றாலும்
கை மாத்து கால் மாத்து வாங்கியேனும்
ஆடு மேயும்
கொரங்காட்டுக்கு முதலில் கம்பி வேலி போட்டு விட்டு
பிறகு மெல்ல மெல்லமாய்
தோட்டத்தைச் சுற்றிலும் கூட
கம்பி வேலி‌ போட்ட பின்

காயத்துக்கு சாணிப்பூட்டாந்தளைக்குக் கூட
கால் கடுக்க கரை வேலி வரை
நடந்து போய் தேட வேண்டி இருக்கிறது....

புங்கனும் சுள்ளியும் கோவையும்
முடக்கத்தானும் எருக்கும் பிரண்டையும்
மிஸ்டையும் கள்ளியும் இலந்தையும்
ஆவரையும் அருகிப் போனது அழிந்து போனது.... அங்கொன்றும்
இங்கொன்றுமாக பெயரளவில் உயிர் வைத்திருக்கிறது...

நினைவில் வையுங்கள்
எம்மக்களே
உயிர் வேலி அழித்தால்
உணவுச் சங்கிலி அறுபட்டு
உயிர்கள் அழிந்து
மனிதன் மட்டும்
வாழ நேரிட்டால்
அப்பொழுது
உலகத்தில் உயிர்வாயுவுக்காக
பெரும் போர் ஒன்று மூளும்....