...

8 views

கல்யாணத் தேர் !
சங்கு கழுத்தில்

தொங்கும் தாலி

எனது !

சொந்த பந்தம்

கட்டிக் காத்தல்

உனது !

பிள்ளைக் குட்டிக்

கல்விச் செலவு

எனது !

நன்மை-தீமை

சொல்லி வளர்த்தல்

உனது !

நேரத்தோடு

வீடு வருதல்

எனது !

தூக்கம் கலைந்து

முதலில் எழுதல்

உனது !

கறியும் - காயும்

வாங்கி வருதல்

எனது !

ஆற- அமர

குணமாய்- பகிர்தல்

உனது !

பாத்திரப் பண்டம்

வாங்கித் தருதல்

எனது !

அதைக் காத்துக்

காய வைத்தல்

உனது !

காஃபி கேட்டுக்

காதல் புரிதல்

எனது !

அதைப் புன்னகையோடுப்

போட்டுத் தருதல்

உனது !

ஆட்டம் பாட்டம்

கொண்டாட்டங்கள்

எனது !

ஒரு வட்டத்துக்குள்

வாழும் பாங்கு

உனது !

மருந்து மாத்திரை

அக்கரை யெல்லாம்

எனது !

கடவுளை வேண்டி

விரத-மிருத்தல்

உனது !

நாளும் ஒரு ரகம்

ஆடை உடுத்தல்

எனது !

ஒற்றைச் சேலை

பட்ஜெட் வாழ்க்கை

உனது !

நான் ஒரு விதம் !

நீ ஒரு விதம் !

எனக்கொரு விதம் !

உனக்கொரு விதம் !

அதிகமாக அநுபவிப்பவன்

நான் !

அதிகமாக அனுசரிப்பவள்

நீ !

சமைத்துப் போடும்

உனக்கு,

உண்ட மிச்சம்தான்

இருக்கு !

வளைந்து கொடுக்கும்

உனக்கு,

ஓய்வு நாளும் வேலை

இருக்கு !

என்ன செய்யலாம்?

© s lucas