...

12 views

அழைப்பிதழும்..அவனும்..அவளும்..
இறுதி சந்திப்பென இருவரும்
முடிவெடுத்த பின்னர்,அவர்கள்
சந்தித்துக்கொண்ட அந்த நாள்..

பல நாட்கள்,பல மணி நேரம்
பேசியும் சண்டையிட்டும் ரசித்தும்
கொண்ட அந்த இடம்..

அவள் தாமதித்து அவனும்
அவன் தாமதித்து அவளும்
காத்திருக்க தேவைபடவில்லை

சொல்லிக்கொண்ட நேரத்திலே
சொன்ன இடத்திலே அமைதி
கொண்டு அமர்ந்தனர் இருவரும்

அமைதியான அவ்விடத்தில்
அவர்கள் பேசியிருந்த பேச்சுகள்
மட்டும் வட்டமடித்தன அவர்களை

முடித்துக்கொள்ள வேண்டிய
நிலையில் முடிப்பதற்கான
வார்த்தையை தொடங்கிடவும்
முடித்திடவும் முடியவில்லை..

யார் தொடங்கி யார் முடித்து..
மாறிமாறி முகம் பார்த்து..
முடிந்தும் போனது வந்து
அமர்ந்து முப்பது நிமிடம்..

அவள் வந்த முதல் நொடியே
வீக்கம் கொண்டிருந்த அவள்
கண்ணம் கண்டிருந்தான்..

பலமுறை மென்முத்தங்களும்
மென்மையான வருடல்களும்
சில செல்ல அடிகளும் அவளுக்கு
தந்த கண்ணங்களன்றோ...

எப்படி என கேட்டிட அவசியம்
இல்லாமல் போனதால்,வலி
குறைந்ததா என இயலாமையில்
கேட்டு பேச்சை தொடங்கினான்..

ஏதேதோ பேசிடும் அந்த வாயாடி
இன்றைக்கு மட்டும் வெகுநேரம்
வார்தைகள் தேடலானாள்...

இப்படியே நேரம் போவதை
உணர்ந்தவன்,அவள் கைப்பையை
எடுத்து அழைப்பிதழை அவனே
எடுத்து கைப்பிடித்தான்

இதை சற்றும் எதிர்பார்காதவள்
இவன் செய்கையை கண்டு
அடக்க முடியாமல் ஓவென்று
அழத்தொடங்கிவிட்டாள்..

நீண்ட நேர தேற்றலுக்கு பின்
இருவரும் அமைதி கொண்டு
மீண்டுமொரு அமைதி நிலை

அதற்கு மேல் அங்கிருந்து வலி
கொண்டது போதுமென அவளை
புறப்படுமாறு கூறினான்.

அடுத்த நொடியே அங்கிருந்து
அவள் கிளம்பிவிட்டாள்,வீட்டில்
சென்று நிதானமாய் அழுதிட..

தணித்திருந்து வெகுநேரமாய்
அழைப்பிதலை உற்றுநோக்கி
படித்தான்,மனப்பாடம் செய்வதுபோல..

இறுதியாய் அழைப்பிதழில் இருந்த
அவள் பெயரை மெல்லமாய் முத்தமிட்டு
அங்கிருந்து சென்றான்

அவளுமில்லை,அவனுமில்லை
அழைப்பிதழ் மட்டும்...
அவர்கள் இருந்த இடத்திலே...

© பினோய் பிரசாத்