...

26 views

முத்த மொழி....
நொற்றிப் பொட்டு
முத்தங்கள்
பேசும் மொழிகளென்னவோ
பெருங்காதலைத்தான்...

கன்னத்து முத்தங்கள்
பேசும் மொழிகளென்னவோ
அவ்வப்பொழுது
தேங்கி நிற்க வழியில்லாது
வந்துவிழும் காதலைத்தான்...

மூக்கின் நுனி முத்தங்கள்
பேசும் மொழிகளென்னவோ
சுவாசங்களால் உனதாகிப்
போன காதலைத்தான்....

கண்ணிமை முத்தங்கள்
பேசும் மொழிகளென்னவோ
காட்சிகள் யாவும் உனதான
பிம்பங்களின் காதலைத்தான்...

இதழ் முத்தங்கள்
பேசும் மொழிகளென்னவோ
இதயங்கள் இரண்டற
கலந்த காதலைத்தான்...

காதோர முத்தங்கள்
பேசும் மொழிகளென்னவோ
உன் கீதங்களை
எடுத்துரைத்திடும் காதலைத்தான்...

கழுத்தோர முத்தங்கள்
பேசும் மொழிகளென்னவோ
காமங்களை மெல்லிய
கோடாக்கும் காதலைத்தான்...

மார்பின் மைய முத்தங்கள்
பேசும் மொழிகளென்னவோ
இதயத்துடிப்புகளை
எகிறச் செய்யும் காதலைத்தான்...

அடிவயிற்று முத்தங்கள்
பேசும் மொழிகளென்னவோ
கருவாகி உருவாகி நிற்கும்
உயிரோடான காதலைத்தான்....

இந்தக் கால்விரல் முத்தங்கள்
பேசும் மொழிகள்தான்
அத்தனை மொழிகளிலும்
ஆகச்சிறந்த மொழிகள்
தாங்கி நிற்கும் அத்தனை
காதலை உனக்கென சமர்ப்பித்து
உன்னில் சரணடைவதை
எடுத்துரைத்து போகின்றன...!

© நித்திலன்...🎭