...

12 views

அன்றும்... இன்றும்...
என்னை பொங்கலன்று
பெற்றிருக்கலாமே அம்மா
என வினவிய மறுகணம்
வாஞ்சையாய் தாடையை
வருடியபடி ஏனய்யா என
வினவும் தாயிற்கு
அன்னைக்குனா புதுத்துணி
எடுத்து கொடுத்து
பலகாரம்லாம் செய்து
கொடுப்பீங்களே என்று
ஏக்கத்தோடு வினவியதெல்லாம்
துளி கண்ணீரில்
கண் முன்நின்றுதான்
போகிறது....

பிறந்தநாளன்று
கோடித்துணியெல்லாம்
போடக்கூடாது
உடம்பு சரிஇல்லாமல்
போய்விடுமென்று
தேற்றிப்போகும்
தாயின் மனது புரிவதில்லை...
பால்ய வயதில் என்ன
பக்குவம் வந்துவிடப்போகிறது
இல்லாமையின் கொடுமையை
உணர்வதற்கும்
கொஞ்சம் வயது நிரம்ப
வேண்டிதானுள்ளது...

இன்றோ பிறந்தநாள்
கொண்டாடித்தான்
தீர்க்கப்படுகின்றது....
ஏனோ மனம் மட்டும்
அந்தக் கோடித்துணியின் மீது
நாட்டம் கொள்வதேயில்லை...
பிறந்தநாள் அதுவுமா
கோடித்துணி எடுக்காம
இருக்காயே கூறுகெட்ட பயலே
என் தாய் அன்பாய்
கடிந்துகொள்ளும் வேளையில்
கோடித்துணி உடுத்துனா
உடம்பு சரிஇல்லாம
போயிரும்னு நீதானம்மா
சொன்ன எனும் வேளையில்
கட்டிக்கொள்ளும்
தாயன்பிற்கு இணையான
பிறந்தநாள் கொண்டாட்டங்களேது...!

© நித்திலன்...🎭