...

3 views

எந்தன் ஆசைகள்...!
எத்தனை ஆசைகளை என்னுள் புதைத்தேன்?
அத்தனையும் பொய்யாய் போயிடவா ஆசைகள் கொண்டேன்!
சக்திமானாய் மாறிட நினைத்தேன்
அறியா வயது கற்பனை மனது!
அலாவுதீன் போல விளக்கை தேய்த்தேன்,
கையின் ரேகை தேய்ந்தது மிச்சம்!
பேச்சுப்போட்டியில் மாவட்டம் வென்றேன்,
கத்திய கூவல் காற்றில் போனது!
பந்தை பொறுக்கவும் தகுதிகள் இல்லை,
கபில்தேவ் போல வந்திட நினைத்தேன்!
படித்தவனாக உயர்ந்திட நினைத்தேன்,
பத்தாம் வகுப்பே நிரந்தரம் ஆனது!
யேசுதாஸ் போல பாடிட நினைத்தேன்
இசையின் படிப்பும் பாதியில் போனது!
குன்னக்குடி போல் வாசிக்க நினைத்தேன்,
பிடிலின் பிடியும் நழுவிச் சென்றது!
தொழிலை கவனிக்க குடும்பம் சேர்ந்தேன்,
எந்தன் நேரம் அதையும் இழந்தேன்!
எங்கோ சென்ற பாதையின் முடிவில்,
வாழ்வின் பாதை தொடங்கிட கண்டேன்!
இழந்தவன் எனக்கு வலிகள் தெரியும்,
தோற்றவன் எனக்கு வெறியும் இருக்கும்!
எந்தன் வயதில் அத்தனை இழந்தேன்,
இழந்த பின்தான் முறையாய் கற்றேன்!
இன்றைய நிலையில் கவலைகள் இல்லை,
கர்வம் கொள்ளும் உயர்வுகள் உண்டு!
ஆசையின் அர்த்தம் அறியும் வரைக்கும்,
ஆசைகள் கொண்டது ஆயிரம் இருக்கும்!
அழுகையின் காரணம் அறியும் வரைக்கும்,
அழுத என் இரவுகள் ஆயிரம் இருக்கும்!
ஆசைகள் கொண்டது எந்தன் தவறா?
அளவுக்கு மீறியது அதனின் தவறா?
ஆசையின் அளவு அறிந்த பின்னும்,
ஆசையின் அளவு குறைத்திட வில்லை!
எழுதும் ஆசை இருந்திடும் வரைக்கும்,
எங்கோ, எதிலோ என் கிறுக்கலும் இருக்கும்!

© சிவ ப்ரகாஷ்

@Sivapragash #சிவப்ரகாஷ்