...

7 views

நாம் வாழ்கிறோமா?


ஆதிவாசியாய் ஆடையின்றி அலைந்தபோது,
அவிழ்க்கப்படவில்லை தன்மானம்...
ஆடைகள் குறைந்த பின்
அவிழ்க்கப்படுகிறது தன் மானம்

சைகை மொழியில் பேசும்போது,
குறையவில்லை புரிதல்...
அழகிய தாய்மொழியில் வளர்கிறது பிரிதல்

மண்ணில் விளைந்ததை உண்ணும் போது,
அழியவில்லை இயற்கை...
மண்ணின்றி விளைய வைத்ததால்
பெருகுகிறது செயற்கை

கூட்டுக்குடும்பமாய் கூடி வசிக்கும்போது,
ஏற்படவில்லை அலைச்சல்...
தனிக்குடும்ப வாழ்க்கையில்
நிலவுகிறது உளைச்சல்

பசிக்கு நாம் உண்ணும்போது,
வரவில்லை பிணி...
பசியின்றி உண்பதால் வருகிறது
பிணியெனும் சனி

நாம் இசைந்து வாழும்போது,
வளர்கிறது இன்பம்...
நான் வாழ்ந்தால் உலகத்தில்
தொடர்கிறது துன்பம்.
© சரவிபி ரோசிசந்திரா