...

1 views

நல்லவன்
கோவிலுக்கு வெளியே
ஒரு ரூபாய் பிச்சை
கேட்டவனிடம்
கை கால்
நல்லாதானே இருக்கு
உழைச்சி சம்பாதிக்க
வேண்டியதுதானே
என்று கேட்டுவிட்டு
கோவில் பூசாரிக்கு
நூறு ரூபாய்
தட்சனை போடுகிறேன்
நான் நல்லவன்.....!

என் காட்டில்
வேலை செய்த
தொழிலாளிக்கு
என்வீட்டில்
அமரவைத்து
சோறுபோட
ஏதோ தடுப்பதால்
கோவில் வாசலில்
ஆயிரம் பேருக்கு
அன்னதானம்
செய்கிறேன்
நான் நல்லவன்...!

திருடவில்லை
பொய் சொல்லவில்லை
நன்றாக படித்தேன்
நல்ல வேலை
செய்கிறேன்
அதனால்
படிக்காத கூலி
தொழிலாளி
என் பக்கத்தில் அமர
ஏற்க மறுக்கிறேன்
நான் நல்லவன்...!

ரோட்டில் அடிபட்டு
ரத்தம் வழியும்
ஒருவரை பார்த்து
உச்சு கொட்டிவிட்டு
வேகமாக செல்கிறேன்
என் வீட்டு நாய்குட்டிக்கு
மருத்துவம் பார்க
நான் நல்லவன...!

ஏனென்றால் நான்
புகை பிடிக்கவில்லை
மது குடிக்கவில்லை
சூதாடவில்லை
கண்ட பெண்களோடு
சுத்தவில்லை
காதில் கடுக்கன்
போடவில்லை
விதவிதமாக
முடி வெட்டவில்லை
நான் நல்லவன்...!