...

15 views

குட்டி பிரபா - குட்டி ஆனந்தி...
அண்டப்பெருவெளியில்
நாம் மீண்டுமொருமுறை
சந்தித்துக்கொள்ள
ஏதாவதொரு இடம்
இல்லாமல்தான் போய்விடுமா

இல்லையேல்
இந்தக் காலங்கள் இப்படியே
நம்மை கடத்திக்கொண்டுதான்
போய்விடுமா...

காலச்சுழற்சியில்
எங்கேனும் நம் பார்வை
தீண்டிக்கொள்ளும்
பாக்கியம் கிடைத்தால்
அன்றும் இந்தக் கண்களில்
கரைபுரண்டோடும்
காதல் துளியும்
குறைந்திருக்காது சகியே...

இறகொன்று நீ விரும்பினாயென்று
சிறகிலிருந்து ஒன்றை
உதிர்த்துப் போடும்
பறவையின் காதல்தான்
இன்றும் என் கைகளில்
உள்ளது சகியே...

நெசமாத்தான் சொல்லுறியா
என நீ வினவும் முன்னரே
தலையாட்டிப்போகும்
குட்டிப் பிரபாதான்
இன்றும் என் நெஞ்சமெல்லாம்
நிறைந்துகிடக்கிறான்....

பிரிவொன்றிற்காக
காதலை சபித்துப்போகும்
காதலர்களுக்கு மத்தியில்
பிரிவுகளையும் பெருங்காதல்
செய்யும் அளவிற்கான
நேசங்களைத்தான்
இன்றும் சுமந்து திரிகிறேன்...

காலங்கள் கடந்தாலென்ன
பாதை மறந்தாலென்ன
பயணங்கள் தடைபட்டாலென்ன
இன்றும் என்றும்
இந்தக் காதலுக்கு நீயும் நானும்
குட்டி பிரபாவும் குட்டி ஆனந்தியும்தான்...!

© நித்திலன்...🎭